திர்ஹமுக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு

2018ம் ஆண்டு துவக்கத்தில் இருந்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலரை வங்கிகளும், ஏற்றுமதி நிறுவனங்களும் அதிக அளவில் விற்பனை செய்ததால் டாலர் மதிப்பு சரிந்து, இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு கண்டது.

டாலரின் சரிவினால் அமீரக திர்ஹமுக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் உயர்ந்துள்ளது.இந்த தாக்கத்தினால் அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் மூலம் அனுப்பப்படும் பணத்தின் அளவு குறைந்துள்ளது.

கடந்து ஆண்டின் இறுதியில் ஒரு திர்ஹமுக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 17.39 ஆக இருந்தது. 2018 ஆம் ஆண்டு துவக்கம் முதல் இன்று (04.01.2018) வரை டாலரின் ஏற்பட்ட சரிவால் 17.27 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக 1 லட்சம் இந்திய ரூபாய் அனுப்புவதற்கு 5750 திர்ஹம் தேவைப்பட்டது. ஆனால் தற்போது 5790 திர்ஹம் கொடுத்து  நாணய பரிமாற்றம் செய்து 1 லட்சம் ரூபாய் அனுப்பப்படுகிறது.

இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு ஒரு பக்கம் மகிழ்ச்சியை தந்தாலும் அதற்கு இணையாக அமீரக வாழ் இந்தியர்களின் நாணய பரிமாற்றத்திலும் தாக்கம்  ஏற்படுகிறது. ஆகையால் திர்ஹமுக்கு நிகரான இந்திய ரூபாயின் நாணய பரிமாற்றம் (exchange rate) குறையும் வரை எதிர்பார்த்து அனுப்புவது அமீரக வாழ் மக்கள் மத்தியில் வழக்கமாக உள்ளது.