பள்ளி மாணவர்களை சீரழிக்கும் போதை புகையிலை ‘ஜைனி கைனி’ – துக்கத்தில் தாய்மார்கள், தூக்கத்தில் அதிகாரிகள், கீழக்கரையில் தாராளமாக கிடைக்கும் அவலம்…

பள்ளி சிறார்களையும், கல்லூரி மாணவர்களையும் குறி வைத்து களம் இறங்கிய போதை புகையிலை சந்தையில் பான் பராக், சாந்தி, மாணிக்சந்த் வரிசையில் போட்டியாக உருவெடுத்த CHAINI KHAINI ‘ ‘ஜைனி கைனி’ எனும் பெயரிடப்பட்ட போதை புகையிலை கடந்த 2005 ஆம் ஆண்டு காலக் கட்டத்தில் தமிழகத்தின் மாநகரங்களில் மட்டுமே காலூன்றி கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்தது. பின்னர் மெல்ல மெல்ல அடியெடுத்து கிராமங்களிலும், பட்டி தொட்டிகளிலும் ‘ஜைனி கைனி’ போதை புகையிலையை மெல்லாத பள்ளி, கல்லூரி இளந்தளிர்கள் இல்லை எனும் அளவிற்கு பொல்லாத போதையில் ஆழ்த்தியுள்ளது.

முக்கியமாக பள்ளி மாணவர்களை சூழ்ந்து கொண்டிருக்கும் இந்த விஷப் புகையிலை குறித்து பெற்றோர்களும், பிள்ளைகளின் தாய்மார்களும், விழிப்புணர்வை பெற வேண்டிய அத்தியாவசியம் மட்டுமல்ல.. காலத்தின் கட்டாயமும் கூட… என்பதை நாம் மறுப்பதற்கில்லை. சட்டம் போடுவர்கள் சட்டம் போட்டு குற்றத்தை தடுத்துக் கொண்டிருந்தாலும் திருடர் கூட்டம் அதற்கு மேல் திட்டம் போட்டு நவீன வழியில் திருடிக் கொண்டு தான் இருப்பார்கள். அந்த வரிசையில் இன்று பெட்டிக்கடை முதல் பெரிய மளிகைக்கடை வரை, சந்தையில் தனக்கு தங்கு தடையின்றி இறக்குமதி ஆகி இருப்பதுதான் இந்த போதை அரக்கன் ‘ஜைனி கைனி’ CHAINI KHAINI.

இன்றைய மாணவர் சமுதாயம் இந்த போதை பொருளின் தீமையை அறியாமலேயே இதில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த காலத்தில் போதை என்றால் கஞ்சா, அபின் என்று தடை செய்யப்பட்ட பொருட்களை திருட்டுத் தனமாக பயத்துடன் வாங்கி சென்றார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி போதை புகையிலைக்கு வேறு பெயர் சூட்டி அனுமதியுடன் கடைகளில் விற்பதுதான் மிகவும் வேதனையான கண்டிக்க கூடிய விசயம். இதுபோன்ற போதை வஸ்துக்களை பற்றிய பல விதமான ஆட்சேபனைகளை சமூக ஆர்வலர்கள் தெரிவித்துக் கொண்டிருந்தாலும், இதையெல்லாம் ஒரு பொருட்டகவே எடுக்காமல் இந்தப் பொருளை உபயயோகப்படுத்த தெரியாதவர்கள் கூட தெரிந்து கொள்ளும் வகையில் இணைதளங்களின் விளக்கத்துடன் போட்டு சந்தையில் விற்பனை செய்வது அதிர்ச்சிகுள்ளாக்குகிறது.

பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் கீழக்கரை சிறிய முதல் பெரிய கடைகளில் மலிந்து கிடைக்கிறது. கீழக்கரை நகரில் மலிவான விலையில், தாராளமாக கிடைக்கும் இந்த  CHAINI KHAINI ‘ஜைனி கைனி’யை பள்ளி மாணவர்கள் பள்ளிக்கூடங்களின் அருகாமையில் இருக்கும் பெட்டிக்கடைகளில் வாங்கி, தங்கள் கீழ் உதடுகளுக்குள் வைத்து கொண்டோ அல்லது கடவாய் பகுதியில் ஒதுக்கியவாரோ வைத்து போதையில் திளைக்கின்றனர். இந்த போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அவ்வளவு சீக்கிரம், எளிதில் மீண்டு வர முடியாது என்பது நிதர்சனம். இதை உபயோகிப்பது மூலம் தீராத நோயான மனநோய், வாய்ப் புற்றுநோய், மன அழுத்தம் போன்ற பல நோய்களுக்கும் ஆளாகிறார்கள். சமீபத்தில் THE HEALTHSITE ( http://www.thehealthsite.com/news/cancer-risks-varies-greatly-for-different-smokeless-tobacco-products-k0617/) என்ற சர்வதேச இணையதளத்திலும் இந்த CHAINI KHAINIன் தீமைகளைப் பற்றி தெளிவாக வெளிப்படுத்தி இருந்தும் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் வேதனையான விசயம்.

இது குறித்து கீழக்கரை நகரின் பிரபல பள்ளியின் தாளாளர் மிக வருத்தத்துடன் கூறியதாவது ”தினந்தோறும் பள்ளியில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளும் போது இந்த விஷ போதை வஸ்துக்களின் காலி அட்டைகளை பள்ளிகளை குவியல் குவியலாக பார்க்க முடிகிறது. இது உண்மையாகவே மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். எதிர்கால இளைய சமுதாயத்தை எண்ணும் பொழுது மிகவும் வேதனையாகவும் உள்ளது.

மேலும் இப்பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக கையில் எடுத்து ஊரில் உள்ள பொது அமைப்புகள் மற்றும் ஜமாத்தினர் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வது மட்டுமல்லாமல், இந்த போதை புகையிலை பொருள்களை விற்கும் கடைக்காரர்களை அடையாளம் கண்டு கண்டிக்க வேண்டும். அதே போல் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை தவறாது கண்காணித்து நல்லொழுக்கங்களை பயிற்றுவிக்கும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் மட்டுமே இது போன்ற பொருட்களை முழுமையாக மாணவர்கள் உபயோகம் செய்வதை தடுக்க முடியும்.” என்று கடுமையான மன வருத்தத்துடன் தெரிவித்தார். இந்த உயிர் கொல்லி புகையை ஒழிப்பது என்பது காவல்துறை அல்லது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, கீழக்கரையில் வசிக்கும் ஒவ்வொருடைய கடமையாகும்.  அதே சமயம் இப்பொருளை விற்கும் ஒவ்வொரு வியாபாரிகளும் சமுதாய தீமையை உணர வேண்டும், சமுதாயம் சீரழிவதற்கு தானும் ஒரு காரணம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதே சமயம், கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையினரும் இந்த விசயத்தின் வீரியத் தன்மையை கருத்தில் கொண்டு, தடை செய்யப்பட்ட இந்த போதை புகையிலை வஸ்துக்களை, கடை விரித்து விற்பனை செய்யும் சமூக விரோதிகளை இனம் கண்டு, சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2 Comments

Comments are closed.