‘சீமைக் கருவேல மரம் நிதி’ என்ற பெயரில் தனி வங்கிக் கணக்கு துவக்கம் – முதல் ஆளாக உயர் நீதிமன்ற நீதிபதி ரூ.10 ஆயிரம் டெபாசிட்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஏ.செல்வம் தலைமையிலான அமர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரவிட்டது. உத்தரவு பிறப்பித்ததோடு நின்றுவிடாமல், கருவேல மரங்கள் அகற்றும் பணியை மாவட்டம் தோறும் நீதிபதிகள் குழு நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, பெரும்பாலான மாவட்டங்களில் கருவேல மரங்களை அகற்றுவதற்கு போதிய நிதி வசதியில்லை என மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கியில் ‘சீமைக் கருவேல மரம் நிதி’ என்ற பெயரில் தனி வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது.

பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளில் விதிக்கப்படும் அபராதத் தொகையை இந்த வங்கிக் கணக்கில் செலுத்துமாறு நீதிபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இந்த வங்கிக் கணக்கில் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்ட நீதிபதி ஏ.செல்வம், தனது சொந்தப்பணத்தில் இருந்து ரூ.10 ஆயிரத்தை நேற்று இந்த வங்கி கணக்கில் டெபாசிட் செய்தார்.

நீதிபதி செல்வத்தின் இந்த நல்ல சேவையை தொடர்ந்து பல்வேறு வழக்கறிஞர்களும் கருவேல மர வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்ய முன் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.