Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இஸ்லாமிய பார்வையில் யார் நம் தலைவர்.. ஒரு மீள் பதிவு..

இஸ்லாமிய பார்வையில் யார் நம் தலைவர்.. ஒரு மீள் பதிவு..

by ஆசிரியர்

(முன்குறிப்பு:- 2011ம் வருடத்தில் இணையத்தில் வந்த கட்டுரை, இன்றும் பொறுந்த கூடிய சிறு மாற்றங்களுடன்…)

யார் இஸ்லாமிய தலைவர்?? இது இஸ்லாமிய அமைப்புக்கோ, சங்கத்துக்கோ, ஜமாஅத்துக்கோ, கூட்டமைப்புக்கோ எதுவாக இருந்தாலும் பொருந்தும்.

இன்று மனித ஜடத்தினை வணங்கியவர்கள் இஸ்லாமிய சொத்துக்களை பாதுகாக்கும் பாதுகாவலராகவும்,  ஏக இறைவனின் பள்ளிகளை கட்டியமைக்க இஸ்லாம் மார்க்கம் தடை செய்துள்ள பழக்கவழக்கங்களை கொண்டவர்களை அறங்காவலர்களாக நியமிப்பதும் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரான செயல் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது.  ஆனால் அதை விட மிகவும் வேதனையான விசயம் அநீதி நடந்தால் மனதளவிலாவது தடுக்கக்கூடிய மார்க்கத்தில் இருக்கும் நாம், இஸ்லாம் மார்க்கத்திற்கும், செயல்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லாதவர்கள் போல் இஸ்லாமிய சேவை செய்யும் அமைப்புக்கு  தலைவர்களாக வருபவர்களுக்கு  வாழ்த்து சொல்வதும், சால்வை போர்த்தி பாராட்டுவதும் மிகவும் வேதனையான செயல்கள் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.  இஸ்லாத்தின் பார்வையில் நம் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சான்றுகளும் விளக்கங்களும். கீழே கோடிட்டு காட்டியுள்ள ஒரு தன்மையாவது இன்று இஸ்லாமிய அமைப்புகளுக்கு தலைவர்களாக வருபவர்களிடம் இருந்தால் அதுவே மிகப் பெரிய விசயமாக இருக்கும்..

நீங்கள் விரும்பினால் தலைமைத்துவம் என்ன என்பது பற்றி நான் உங்களுக்கு அறிவித்துத் தருவேன். முதலாவது அது குற்றம் சாட்டப்படக் கூடியது,  இரண்டாவது வருந்தத்தக்கது, மூன்றாவது மறுமைநாளிலே தண்டனையைப் பெற்றுத் தரக் கூடியது. யார் நேர்மையாகவும், நீதமாகவும் நடந்து கொண்டார்களோ அவர்களைத் தவிர. (தபராணி – அல் கபீர் 18/72).
 

மேலே கூறப்பட்டுள்ள நபிமொழி நமக்கு தலைமைப் பதவியின் முக்கித்துவத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆனால் மக்களுக்கு நல்லது செய்ய வந்திருக்கும் அவதாரங்கள் என்று மக்கள் மத்தியில் தோன்றிய ஜனாதிபதிகள், ஆன்மிகவாதிகள், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்கள், அவ்வமைப்புகளின் பல கீழ்நிலை தலைவர்கள் தலைமைப் பொறுப்பை பற்றிய முக்கியத்துவம் அறியாமல் எல்லா வகையான அனாச்சாரங்களுக்கும் துணை போகுபவர்களாக இருப்பது அவ்வமைப்பின் மீது அவநம்பிக்கையும்,  கொள்கையை முழுவதும் அறியாதவர்களிடம் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. கொள்கையை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டிய தலைவர்கள் அப்பதவியில் பெருமைக்காக இருக்கும் அவலத்தை நாம் பார்த்து வருகிறோம். பெருமை (கிப்ர்) என்ற தன்மை அல்லாஹ்வுக்கு உரியது. அதை அவனுடைய படைப்பினங்கள் சொந்தப்படுத்திக் கொள்ள முடியாது. தற்பெருமமையைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: தான் என்ற அகங்காரம் இப்லீஸுக்கு வந்ததால், அவன் சிறுமையடைந்தான் நிராகரிப்பாளர்களில் ஒருவனாகவும் ஆகி விட்டான். (அல்குர்ஆன் 2:34).

இந்தத் தற்பெருமை மனிதனை இறைநிராகரிப்பில் தள்ளி விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மனிதன் தன்னுடைய ஒவ்வொரு செயலையும் செய்யும் போது அதில் தூய்மையான எண்ணம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் அவன் செய்யக் கூடிய கடுகளவு நன்மையானாலும் அது இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும். பெருமை மனிதனிடம் குடி கொண்டால் அடுத்த மனிதனை அவன் மதிக்க மாட்டான். உண்மையை மறைக்க முயற்சிப்பான்.

இது குறித்து பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். எவனது உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ளதோ அவன் சுவனம் புக மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மனிதன் தன் ஆடை அழகாக இருப்பதையும் தனது காலணி அழகாக இருப்பதையும் விரும்புவது பெருமையாகுமா? ஏன ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நிச்சயமாக அல்லாஹ் அழகானவன் அவன் அழகையே விரும்புகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பெருமை என்பது சத்தியத்தை ஏற்க மறுப்பதும், மக்களை கேவலமாகக் கருதுவதும் ஆகும். (நூல் : அஹ்மத் அறிவிப்பாளர் : அம்ரு பின் ஸுஐப் (ரலி) ஹதீஸ் எண் :6390.

மேலும் நபி (ஸல்) அவர்கள் பெருமையடிப்பவர்களின் நிலையைப் பற்றி கூறும் போது : (உலகில்) பெருமையடித்தவர்கள் அனைவரும் மறுமை நாளில் (உடலமைப்பால்) சிற்றெறும்புகளைப் போன்று மனிதத் தோற்றங்களில் எழுப்பப்படுவர். அற்பமான அனைத்துப் பொருட்களின் காலடியிலும் அவர்கள் மிதிபடுவர். இறுதியில் பவ்லஸ் அல்லது பூலஸ் என்ற நரகச் சிறையில் நுழைவர். (அதில்) அவர்களை ஆகக் கொடிய நெருப்பு சூழ்ந்து கொள்ளும். நரகவாசிகளிடமிருந்து வழிந்தோடும் வியர்வை, சீழ் மற்றும் இரத்தம் ஆகியவற்றை அவர்கள் புகட்டப்படுவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) பாடம் : ஈமான் நூல் : முஸ்லிம்.

 அல்லாஹ் அழைப்பாளர்களைப் பற்றி தன் திருமறையில் கூறுகிறான்: மேலும் மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும், தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (ஆலு இம்ரான் : 104).

 இங்கே நன்மையின் பக்கம் அழைப்பவர்கள் – நல்லதைக் கொண்டு ஏவுபவர்கள், அழைப்பாளர்கள் பற்றியும், தீயவற்றிலிருந்து தடுப்பவர்கள் பற்றியும் ஒரு முஃமினுடைய மூன்று குணாதிசயங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்மையின் பக்கம் அழைப்பவர்கள் முதலில் தான் எந்த நன்மையின் பக்கம் மக்களை அழைக்கின்றோமோ அந்த நன்மையைப் பின்பற்றுபவர்களாக இருத்தல் வேண்டும். தலைமைத்துவத்தில் இருக்கின்ற பாரதூரங்கள் பற்றி அறியாமல் அந்தப் பதவியை விரும்புவது. எனவே தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தலைமைத்துவத்தை விரும்புவது குறித்து மிகவும் எச்சரிக்கை செய்தார்கள்.

 இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள் : நீங்கள் தலைவர்களாவது குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் அதன் காரணமாக மறுமை நாளிலே நீங்கள் கைசேதப்பட வேண்டியதிருக்கும் எனினும் அதன் ஆரம்பம் மிகவும் இலகுவானது, அதன் முடிவு மிகவும் கடுமையானது. தலைமைத்துவத்தின் ஆரம்பத்தில் ஒருவருக்கு அதிகாரத்தையும், வளத்தையும் கொண்டு வரும். ஆனால் பின்பு கொலை செய்யப்படும் அளவுக்கு ஆபத்தானதும், இன்னும் எவராவது அவரைப் பதவியிலிருந்து தூக்கிய எறிய முயற்சிக்கவும் கூடும்,  இன்னும் மறுமை நாளிலே அவர் மீது யாராவது வழக்குத் தொடரும் நிர்ப்பந்தத்திலும் அவரைத் தள்ளி விடச் சந்தர்ப்பமும் உண்டு. (புகாரி 6729) 

 தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தான் என்ற அதிகாரத்தையும், சொந்த கருத்தை தன் கீழ் உள்ளவர்களிடம் திணிப்பதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:  மனிதர்கள் அமர்ந்திருக்கக் கூடிய சபையில் தலைவராக உட்கார விரும்புவதும், அங்கு நடக்கும் ஆலோசனைகளில் தன்னுடைய கருத்தை மட்டுமே அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புவதும், இன்னும் அதிகாரம் வகிக்கவும் விரும்புவதும், இத்தகைய சபைகளைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றேன், இத்தகைய தலைமையைக் கொண்ட சபையானது ஆடுகளை அறுக்கும் பலிபீடங்கள் போன்றது. (புகாரி 2/439)..

ஆனால் எவரது மனதில் இறைநம்பிக்கை தெளிவாக இல்லையோ அத்தகைய மனிதர்கள் மேலே நாம் கண்ட சுன்னாவைப் பின்பற்றும் பொழுது கோபமும், ஆத்திரமும் அடைவார்கள். இன்னும் இவர்கள் சபைகளில் நுழைந்தார்களென்றால் தனக்காக எவராவது எழுந்து நிற்பதையும், இன்னும் தன்னைப் பற்றி உயர்வாக பேசுவதற்கு என்று ஒரு கூட்டத்தையும், தன்னை எதிர்த்து கேள்வி கேட்டுவிட்டால் மற்றவன் மூலம் அடுத்தவனை அழிக்க முனையும் தலைவர்கள் உண்டாகி வருவதையும் நாம் வாழ் நாளில் பார்த்து வருகிறோம். நிச்சயமாக இவர்கள் நபி(ஸல்) அவர்கள் வழிமுறையை பின்பற்றும் தலைவர்கள் ஆக மாட்டார்கள், மனோ இச்சையும், பதவி ஆசையையும் உடைய சுயநலவாதிகளே ஆவார்கள். ஆக நாம் வாழ்வில் அடுத்தவர்களை மதித்து வாழ்வது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும். நம்மை விட அறிவால் செல்வத்தால், அந்தஸ்தால் கீழ்நிலையில் உள்ளவர்களிடம் கூட நமது அகங்காரத்தை, ஆணவத்தை வெளிப்படுத்தி விடக் கூடாது. அல்லாஹ் நமது வாழ்நாளில் அவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவர்களாகவும் உண்மையை மேலோங்கச் செய்பவர்களாகவும் அடுத்தவர்களை மதித்து நடக்கின்றவர்களாகவும் ஆக்கியருள வேண்டும் என பிரார்த்திப்போமாக!

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com