Home செய்திகள் தமிழகம் முழுவதும் 11 வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தம் !

தமிழகம் முழுவதும் 11 வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தம் !

by ஆசிரியர்

கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாத அரசைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர், திண்டுக்கல், திருச்சி, மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஒருங்கிணைந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கிராம நிர்வாக அலுவலர் பணியை தொழில்நுட்ப பணியாக வரையறை செய்ய வேண்டும் என்பமை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் 11 வது நாளாக மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 12616 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் உள்ளன. பிறப்பிலிருந்து மனிதன் இறக்கும் வரை இடைப்பட்ட வாழ்வில் அவர்களுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் வழங்குவது அவர்களின் முக்கியப் பணி, இவற்றில் 50% பணிகளை தமிழக அரசு ஏற்கனவே கணினி மூலம் ஆன்லைன் பணிகளாக மாற்றிவிட்டது. ஆனால் கிராம நிர்வாக அலுவலர் பணியை மட்டும் தொழில்நுட்ப பணியாக வரையறை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. அதேபோல் பதவி உயர்வில் 30% மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதால் 6 ஆண்டுகளில் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு 15 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் சூழல் உள்ளது. கிராம நிர்வாக அலுவலர்களில் 90% பேர் பட்டதாரிகளாக இருப்பதாலும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு தாமதமாவதாலும், கிரேட்-1, கிரேட்-2 என பணியை பணிபுரியும் காலத்தைப் பொறுத்து வரையறை செய்து அதற்கான ஊதியம் வழங்க வேண்டும், மேலும் சொந்த மாவட்டங்களைவிட்டு மற்ற மாவட்டங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உடனடியாக மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறுவிதமான போராட்டங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அரசு இதுவரை அழைத்துப் பேசாத காரணத்தாலும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 11வது நாளாக மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் , திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர், திரு.ராஜரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்டப் பொருளாளர் திரு.முருகன், திருச்சி மாவட்டத் தலைவர் திரு. அந்தோணி துரை செயலாளர் திரு. பொன். கணபதி ராஜ், பொருளாளர் திருமதி. தைலம்மை, கரூர் மாவட்ட தலைவர் திரு. முருகேசன், செயலாளர் திருமதி.மங்கையர்க்கரசி பொருளாளர் திரு. முத்துப் பிரியன் உள்பட 3 மாவட்டங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் வருவாய்த்துறை தொடர்பான அனைத்து பணிகளும் முடங்கியுள்ளதால், பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி:- ஜெ, அஸ்கர், திண்டுக்கல்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!