Home செய்திகள் நேரில் வரமுடியாத மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் இல்லம் சென்று தபால் ஓட்டு பெறும் பணி துவக்கம்..

நேரில் வரமுடியாத மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் இல்லம் சென்று தபால் ஓட்டு பெறும் பணி துவக்கம்..

by syed abdulla

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.நெல்லை மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்குச் சாவடிக்கு நேரில் வந்து வாக்கு அளிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம் என்ற விபரத்தை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதையடுத்து கடந்த மாதம் 20-ந் தேதி முதல் 5 நாட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களும் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்களிடம் நேரில் சென்று அவர்களது விருப்பத்தை கேட்டனர். மேலும் வீட்டிலிருந்தே வாக்களிக்க விரும்புபவர்களுக்கு 12 டி விண்ணப்ப படிவத்தை வழங்கினர். அதனை வாக்காளர்கள் பூர்த்தி செய்த பின்னர் படிவங்களை உதவி தேர்தல் அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டது.நெல்லை பாராளுமன்ற தொகுதியை பொருத்தவரை 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2,521 மூத்த குடிமக்கள், 1146 மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தனர்.அந்த வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடி வாக்களிக்கும் விதமாக அவர்களிடம் தபால் வாக்குகளை பெறும் பணி நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் தொடங்கியது. தபால் வாக்குச்சீட்டு வழங்குவதற்கு மண்டல அலுவலர்கள் தலைமையிலான வாக்குச்சாவடி குழு அமைக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்த மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களிடம் வாக்குகளை பெற்றனர். பின்னர் அதனை அந்த பெட்டியில் போட்டு சீல் வைத்தனர். இந்த பணிகள் அனைத்தும் நுண் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. முதற்கட்டமாக இன்றும், நாளை மறுநாளும் (8-ந் தேதியும்) தபால் வாக்குகள் பெறும் பணி நடக்கிறது.இதனையொட்டி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் இன்று காலை 7 மணிக்கு தொகுதி முழுவதும் உள்ள ஒவ்வொரு தாலுகா அலுவலகத்தில் இருந்தும் தனி வாகனத்தில் தேர்தல் ஊழியர்கள் அடங்கிய குழு புறப்பட்டு சென்றது. அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளை பெற்று தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த பணியானது நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானூர், சேரன்மகாதேவி, அம்பை, நெல்லை, பாளை, நாங்குநேரி, வள்ளியூர், திசையன்விளை, ராதாபுரம், ஆலங்குளம், கடையம் உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் இருந்து இன்று தொடங்கியது.இந்த பணியில் மண்டல அலுவலர் தலைமையில் மண்டல உதவியாளர், சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலான காவல்துறையினர், உதவியாளர், நுண்பார்வையாளர், வீடியோகிராபர் ஆகிய 6 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.மேற்கண்ட 2 நாட்களிலும் தபால் வாக்கு செலுத்த முடியாதவர்களுக்கு வாய்ப்பாக வருகிற 10-ந் தேதி மீண்டும் இதே போல் ஊழியர்கள் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு சென்று வாக்கை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இந்த பணிகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. முன்னதாக அனைத்து தாலுகா அலுவலகங்களில் இருந்தும் தபால் வாக்குகளை பெறுவதற்காக எடுத்து செல்லும் பெட்டி அரசியல் கட்சியினரின் முன்னிலையில் திறந்து காண்பிக்கப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!