இலங்கை அகதி முகாம் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இலங்கை அகதி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இலங்கை வவுனியாவை சேர்ந்தவர் கார்த்திக் (40). கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக அகதியாக ராமேஸ்வரம் வந்த இவர் வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் முகாமில் தங்கி இருந்தார். 2015ல் பதிவு துண்டிக்கப்பட்ட இவர் மண்டபம் முகாம் முல்லை நகரில் குடும்பத்துடன் வசித்தார். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் குடும்ப பிரச்சனை காரணமாக கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்தனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் மனைவி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இதையடுத்து டிராக்டர் ஓட்டி வந்த இவர் சுந்தரமுடையான் பகுதியைச் சேர்நத காளீஸ்வரியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இவர் காலை ராமேஸ்வரம் சென்ற திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ராமேஸ்வரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.