போலி ஆணை மூலம் கல்வித்துறையில் பணி5 பேர் கைது: உதவியாளர் சஸ்பெண்ட்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி நியமனம் வழங்கப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்ட கல்வி துறைக்கு ஒதுக்கிய 42 பணி இடங்களில் 37 இடங்கள் நிரப்பப்பட்டன. கடலாடி அருகே சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு பெண் ஏற்கனவே பணியில் சேர்ந்தார். இந்நிலையில், அப்பள்ளியில் 23.9.2020 ஆம் தேதி ராமநாதபுரம் அருகே சூரன்கோட்டை வலம்புரி நகர் ராஜேஷ் 32, பணியில் சேர முயன்றார். அவரது பணி நியமன ஆணை போலி என தெரிய வந்தது. இதனையடுத்து போலி ஆணை மூலம் பணியில் சேர முயன்ற ராஜேஷ் மீது, முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி ராமநாதபுரம் எஸ்பி., கார்த்திக்கிடம் புகார் அளித்தார். இதன்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து ராஜேஷை கைது செய்தனர். விசாரணையில் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உதவியாளர் ராமநாதபுரம் பெரியார் நகர் கண்ணன் (47) போலி ஆணை தயாரித்து கொடுத்து பணியில் சேர வைத்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. ராஜேஷ் உள்பட 4 பேர் அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றது தெரிய வந்ததையடுத்து போலி ஆணை வழங்கி பாம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியில் சேர்ந்த பரமக்குடி அண்ணா நகர் கலைவாணன் (26), ராமேஸ்வரம் கரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்த பரமக்குடி பாரதி நகர் சதீஷ்குமார் (33) ஆகியோரை கைது செய்தனர். இவர்களுக்கும் கண்ணனுக்கும் இடைத்தரகராக செயல்பட்ட பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் எஸ்.காவனூர் கேசவன்(45) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியில் சேர்ந்த மனோஜ்குமாரை தேடி வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி ஆணையை கண்ணன் கலர் ஜெராக்ஸ் எடுத்து போலி ஆவணம் தயாரித்து கொடுத்துள்ளார். ஒவ்வொரு பணியிடத்துக்கும் ரூ.15 லட்சம் பேரம் பேசி, ராஜேஷ், கலைவாணன், சதீஷ்குமார், மனோஜ்குமார் ஆகியோரிடம் தலா ரூ.5 லட்சம்முதல் கட்டமாக பெற்றுள்ளார் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் உதவியாளர் கண்ணனை முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் புதியதாக கட்டப்பட்டு கழிப்பறை உள்ளிட்ட அடிப்படைகளை முழு அளவில் நிறைவேற்றாமல் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாகவும் தற்போது புகார் எழுந்துள்ளது

உதவிக்கரம் நீட்டுங்கள்..