Home ஆன்மீகம் முதல் கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்களின் வரலாற்று பின்னணி…ரமலான் சிந்தனை – 8…கீழை ஜஹாங்கீர் அரூஸி…

முதல் கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்களின் வரலாற்று பின்னணி…ரமலான் சிந்தனை – 8…கீழை ஜஹாங்கீர் அரூஸி…

by ஆசிரியர்

குல வம்சம் கோலோச்சிய அன்றைய மக்காவின் குறைஷியர் வம்சத்திலேயே “பனீதைம்” என்ற உயரிய கோத்திரத்தில் உதுமான் இப்னு ஆமிர் – சல்மா பின்த் சக்ர் தம்பதிகளுக்கு மகனாய் பிறந்தவர்கள் ஹழ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள், தமது வம்சத்தை சார்ந்த முன்னோடிகளின் வரலாறு மற்றும் முன்சென்ற சமுதாயங்கள் குறித்த தெளிவான ஞானம் கொண்டவர்களாவும், மிகச்சிறந்த வணிகராகவும், செல்வந்தராகவும் வாழ்ந்தார்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள். மக்காவின் மிக முக்கிய 10 நபர்களில் அன்னை ஹதீஜா பிராட்டியாரும் ஹழ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்களும் முதன்மையானவர்களாக திகழ்ந்தார்கள்.

மக்காவின் வணிகச் செல்வர்கள் வாழ்ந்த பகுதியில் அபூபக்கர்(ரலி) அவர்களும் வாழ்ந்தார்கள். இவர்களது வீடு பெரும் செல்வ சீமாட்டி அன்னை ஹதீஜா பிராட்டியாரின் வீடு இருந்த பகுதியிலேயே இருந்தது. வியாபார ரீதியாக அடிக்கடி யமன் மற்றும் சிரியா சென்று வந்தார்கள்.

சிறு வயது நட்புடன் மட்டுமின்றி, நபியவர்களுடன் வியாபார ரீதியாக கொடுக்கல், வாங்கலிலும் தொடர்புடையவர்களாக இருந்தார்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள். அன்பு நண்பர் அண்ணலாரின் இயல்பான குணத்திற்கு ஏற்ப அபூபக்கர்(ரலி) அவர்களும் சிலை வணக்கத்தையும், குறைஷியரின் தீய பழக்கங்களையும் வெறுத்து வாழ்ந்தார்கள்.

மக்கத்து மக்களால் மிகவும் மதிக்கக்கூடிய நபராகவும் அம்மக்கள் தங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஹழ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்களின் ஆலோசனைகளையும் தீர்வுகளையும் பெறுவதற்கு காத்திருப்பார்கள். இவர்கள் வியாபார ரீதியாக வெளிநாடுகளுக்கு சென்று விட்டால், அவர்கள் திரும்பி வரும் வரை காத்திருந்து தங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் நிலையில் தான் மக்கத்து மக்கள் இருந்தனர்.

இவையெல்லாமே அபூபக்கர்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு வரை நீடித்த நிகழ்வுகளாகும். ஒருமுறை வியாபார ரீதியாக யமனுக்கு சென்று விடுகிறார்கள். அன்றைய சூழலில் அண்ணலாருக்கும் நபித்துவம் கிடைத்து விடுகிறது. தனக்கு கிடைத்துள்ள நபித்துவம் குறித்தும் ஓரிறை குறித்தும் அண்ணலார் மக்காவில் வெளிப்படுத்திய தருணத்தில் மக்கத்து குறைஷியர் அனைவரும் ஓரணியில் திரண்டு கடும் எதிர்ப்பினை தெரிவிக்கின்றனர்.

குறைஷியர் தலைவர்களில் முக்கியமான அபூஜஹ்ல், உத்பா, ஷைபா போன்றோர் மக்களை அமைதிப்படுத்தி நமது மதிப்புமிகும் அபூபக்கர் அவர்கள் யமனுக்கு சென்றுள்ளார். அவர் திரும்பி வரும் வரை அமைதி காப்போம், அவர்கள் வந்ததும் முகம்மது என்ற நபர் குறித்து முடிவு செய்து கொள்ளலாம்? என தற்காலிக அமைதியை ஏற்படுத்தி கூட்டத்தை கலைத்தனர்.

யமனில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு அபூபக்கர்(ரலி) அவர்கள் மக்கா திரும்பிய தகவல் கிடைத்து, உடனடியாக அவர்களின் வீட்டுக்கு குறைஷியர் தலைவர்களான அபூஜஹ்ல், உத்பா, ஷைபா போன்றோர் விரைகின்றனர்.

வந்தவர்களை வரவேற்று உபசரித்து விட்டு ஒரு பெரும் கூட்டமாய் வந்துள்ளீர்களே, ஏதேனும் விசேஷ செய்தி உண்டா? என்று அவர்களைப் பார்த்து அபுபக்கர் (ரலி) அவர்கள் வினவுகின்றார்கள். ஆம்! மிகப் பெரிய அதிர்ச்சி செய்தியோடு தான் வந்துள்ளோம் என்று ஒரே குரலில் கூறினர்.

அபூதாலிப்பின் பாதுகாப்பில் வளரக் கூடிய அந்த அநாதை, தன்னை ஒரு இறைத்தூதரென்று பிதற்றிக் கொண்டு திரிகின்றார். நாங்கள் உங்களுடைய வருகைக்காகத் தான் காத்திருக்கின்றோம். நீர் வந்தவுடன் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும், இன்னும் இதில் உம்முடைய ஆலோசனை என்ன என்பதையும் நாங்கள் அறிய மிக ஆவலாக இருக்கின்றோம். அதற்காகத் தான் உங்களது இல்லமும் வந்தோம் என்று தாங்கள் வந்ததன் நோக்கத்தை வெளிப்படுத்தினர்.

சரி, நான் என்னவென்று விசாரிக்கிறேன்? நீங்கள் கலைந்து செல்லுங்கள் எனக்கூறிவிட்டு தன் ஆருயிர்த் தோழரைக் காண விரைந்து செல்கின்றார்கள். தோழரே..! நான் கேள்விப்பட்ட செய்தி உண்மையா?

ஆம்! என்றுரைத்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

உங்களுடைய அந்த அழைப்பின் அர்த்தம் என்ன?

லா இலாஹ இல்லல்லாஹ்! முஹம்மதுர் ரசூலுல்லாஹ்!

என்ற ஓரிறைக் கொள்கையின் தத்துவத்தை அபுபக்கர் அவர்களுக்கு அண்ணலார் (ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள்.

தாமதமின்றி அண்ணலாரின் கரத்தைப் பிடித்து கலிமாவை மொழிந்து பெருமானாரின் இதயத்தோடு இணைந்தார்கள் ஹழ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள்.

இஸ்லாத்தை பற்றி இதற்குப் பிந்தைய நாட்களில் கேள்விப்பட்ட அனைவரும் அந்தக் கொள்கையை முன்பு மறுத்தோ அல்லது தாமதப்படுத்தியோ தான் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அபுபக்கர் அவர்களோ அழைப்பின் வெளிச்சப் புள்ளியைக் கண்டவுடன், தானே சூரியனாக மலர்ந்து நின்றார்கள். உடனே ஏற்றுக் கொண்டார்கள். எந்தவித சுணக்கமும் அவர்கள் காட்டவில்லை என்பது அவருக்கு இறைக் கொள்கையின் மீதுள்ள பற்றும் இன்னும் அதனைக் கொண்டு வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீதிருந்த நம்பிக்கை மற்றும் அன்பும் தான் காரணமாகும்.

இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு வரை தங்களின் மதிப்புமிகு தலைவராக கருதிய மக்கத்து குறைஷியர்கள், இஸ்லாத்தை ஏற்ற பின்பு அபூபக்கர்(ரலி) அவர்களை வெறுக்க ஆரம்பித்ததோடு அவர்களோடு வியாபார ரீதியிலான கொடுக்கல், வாங்கல் போன்றவற்றை தவிர்த்து சமூக புறக்கணிப்பு செய்ய ஆரம்பித்தனர்.

எதற்கும் தயங்காமல் தனது நண்பரும் நபியுமாகிய அண்ணலாரின் கரத்தை வலுப்படுத்துவதிலும் ஓரிறை என்னும் ஏகத்துவ ஜோதியை தமது குலத்திலும் குடும்பத்திலும் ஏற்றி வைப்பதில் மிகவும் தீவிரமாய் செயல்பட்டார்கள் அபூபக்கர்(ரலி) அவர்கள்.

அபூபக்கர்(ரலி) அவர்களின் உறவினரான தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் இப்னு உத்மான் அத்தைமீ என்பவர் வியாபார நிமித்தமாக பஸராவுக்கு சென்று விட்டு அப்போதுதான் மக்காவுக்குத் திரும்பியிருந்தார். தமது உறவினர் அபூபக்கர்(ரலி) அவர்கள் அண்ணலாரை சந்தித்து இஸ்லாத்தில் இணைந்து கொண்ட தகவலறிந்து அபூபக்கர்(ரலி) அவர்களை அழைத்துச் சென்று அண்ணலாரை சந்தித்து தன்னையும் இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்கள்.

அன்றைய குறைஷியர் குலத்தில் மிகவும் உயரிய “பனீதைம்” கோத்திரத்தைச் சேர்ந்த செல்வத்தாலும், செல்வாக்காலும் ஆளுமைகளாக திகழ்ந்த அபூபக்கர்(ரலி) அவர்களும், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் அவர்களும் இஸ்லாத்தின் ஏகத்துவ ஜோதியை தமது கோத்திரத்தாரிடம் கொண்டு சேர்ப்பதில் பம்பரமாய் சுழன்றார்கள்.

இஸ்லாத்தின் பரப்புரைக்காக இவர்கள் இருவரும் சந்தித்த மிகப்பெரிய சோதனைகளின் அடையாளமாக இவர்கள் “அல் காரினைன்” என்று அழைக்கப்பெறுகின்றனர்.

அந்த சோதனைகள் என்ன? அல் காரினைன் என ஏன் அழைக்கப்பட்டது? எனபதை இன்ஷா அல்லாஹ்…

ரமலான் சிந்தனை 9ல் பார்க்கலாம்.

கீழை ஜஹாங்கீர் அரூஸி.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com