Home செய்திகள்கீழக்கரை செய்திகள் நமக்கான ரமலான் கூலியை அல்லாஹ்விடம் யாசிப்போம்.. ரமலான் சிந்தனை – 30..கீழை ஜஹாங்கீர் அரூஸி…

நமக்கான ரமலான் கூலியை அல்லாஹ்விடம் யாசிப்போம்.. ரமலான் சிந்தனை – 30..கீழை ஜஹாங்கீர் அரூஸி…

by ஆசிரியர்

மனித சமூகத்தின் உடல் மற்றும் உள்ளங்களை சுத்திகரிக்க வந்த ரமலானின் நிறைவு நாளே ஈகைத்திருநாள் என்னும் நோன்பு பெருநாளாகும்.

அதிகாலையில் இருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமல்,பருகாமல் இறைவழிப்பாடுகளில் முழுமையாய் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட முஸ்லிம்களின் உணர்வுகளை வார்த்தைகளால் வர்ணித்துவிடமுடியாது.

நோன்பு பிறை முதல் நாளில் இருந்து அம்மாதத்தின் கடைசி நாள் வரை மனிதனின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கி கொள்கிறான். உரிய நேரத்தில் இறைவனை நினைத்து வாழ்ந்த மனிதன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இறைவனை நினைத்து அவனிடம் தனது பிழைகளை சமர்ப்பித்து மனமுருகி பாவமன்னிப்பு தேடியவனாக ரமலானை நிறைவு செய்கிறான்.

பசியோடும், தாகத்தோடும் இருக்கும் ஏழை, எளிய மனிதர்களின் துயரத்தை உளமாற உணர்ந்து கொள்ளும் வாய்ப்பினை ஒவ்வொரு வசதி படைத்த மனிதரும் ரமலான் மூலம் அந்த அனுபவத்தை பெற்றுக்கொள்கிறார்கள்.

எங்கெல்லாம் இறைவனை தொழவேண்டுமென்று அல்குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ளானோ? அங்கெல்லாம் அடுத்த வார்த்தையாக ஏழைகளுக்கான தர்மத்தையும் வலியுறுத்தி இருப்பதை நாம் காணலாம்.

ஒவ்வொரு நாளும் வேலை செய்துவிட்டு மாத கடைசியில் தமக்கான ஊதியத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் தொழிலாளிகளைப்போன்று, மாதம் முழுவதும் நோன்பு வைத்து இறைவனை வணங்கியும் அருள்மறையை பொருள் உணர்ந்து ஓதியும் வந்த இறையடியார்களான ஒவ்வொரு முஸ்லிம் ஆண்களும், பெண்களும் சிறார்களும் தமக்கான ரமலான் நற்கூலியை இறைவனிடம் எதிர்பார்க்கும் இனிய நாளாக இருப்பது பெருநாளாகும்.

இத்தகைய பெருநாள் தொழுகைக்கு முன்பே ஏழைகளுக்கான சதக்கத்துல் ஃபித்ரா என்னும் தர்மத்தை நிறைவேற்றி விடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகி விடுகிறது.

தனது இறைவனிடம் ரமலானுக்கான நற்கூலியை கேட்பதற்கு தொழுகையை நோக்கி வரும் மனிதன் அதற்கு முன்பு வரைக்கும் தர்மம் செய்வதை அல்லாஹ் உறுதியாக்கி வைத்திருப்பதின் மூலம் இஸ்லாம் மாபெரும் இரக்கச்சிந்தனை கொண்ட மார்க்கம் என்பதை நாமறிவோம்.

கடந்த கால ரமலான் அனுபவத்தோடு இவ்வருட ரமலானை ஒப்பிட்டு பார்த்தால்…மிகப்பெரிய இறைவணக்க இழப்புகளையும், ஏமாற்றங்களையும் நம்மால் உணர்ந்து கொள்ளமுடியும். கொரோனா என்னும் தொற்று நோயால் பள்ளிகளில் சென்று வணங்கும் வாய்ப்புகளை இழந்து வீடுகளுக்குள் முடங்கினோம்.

ஆனாலும் நமது ஆன்மீக இறைவழிப்பாட்டு பயணத்தை நிறுத்தி விடாமல் தொடர்ந்து நோன்பு வைத்து இரவெல்லாம் தொழுது, உள்ளதில் சிலதை ஏழைகளுக்கு தர்மம் செய்த மனநிறைவோடு அல்லாஹ்விடம் ரமலானுக்கான நற்கூலியை கேட்டுப்பெறுவதற்காக காத்திருக்கின்றோம்.

பள்ளிகளை காணாமல்,திடலை காணாமல் வீட்டுக்குள் முடங்கி பெருநாள் தொழுகையை நிறைவேற்றும் தருணத்தில் ஒவ்வொருவரும் மனமுருகி இறைவனிடம் கண்ணீர் சிந்தி பிரார்த்தனை செய்வோம்.

இதுபோன்ற சோதனையான காலகட்டங்களில் இருந்து உலக மக்களை பாதுகாத்துவிடு ரப்பே என்றும், உன்னை வணங்குவதற்கான உடல் ஆரோக்கியத்தையும்,நீடித்த ஆயுளையும் குறைவில்லாத செல்வத்தையும் வழங்கி உனது அடியார்களின் மனதை குளிர வைப்பாய் ரப்பே என்று பிரார்த்தனை செய்வோம்.

இந்த நோன்பு எனக்கானது, அதற்கான நற்கூலியை நானே வழங்குவேன் என்ற வல்லோனிடம் நமக்கான ரமலான் நற்கூலியை உரிமையோடு கேட்கும்போது நமது பிழைகளை மன்னிக்க கோருவதும்,நமது தாய்,தந்தையர்,மனைவி,பிள்ளைகள்,உடன்பிறந்தவர்கள்,குடும்பத்தார்கள்,உலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவரின் பிழைகளையும் மன்னிக்க கோருவது அழகிய பிரார்த்தனையாகும்.

நோயில்லா பெருவாழ்வும், கடனில்லா நல்வாழ்வும், குறைவில்லா பரக்கத்தும், பிணக்கில்லா குடும்ப வாழ்வியலும் நமக்கும் நமது குடும்பத்தாருக்கும் கேட்பதைப் போன்று அல்லாஹ்வின் அடியார்கள் அனைவருக்கும் சேர்த்து கேட்போம்.

இறைவனுடைய நற்கூலியை நாடி பிரார்த்தனை செய்யப்போகும் இந்நாளில், நமது குடும்ப உறவுகளின் விசயத்தில் அன்பையும்,இரக்கத்தையும்,உதவி உபகாரத்தையும் பேணுவது நமக்கு முக்கியான விடயம் என்பதை மறந்து விடக்கூடாது.

ஒருமுறை ஒரு நபித்தோழர், ‘நபியே! என் தந்தை இறந்து விட்டார். அவர் உயிருடன் இருந்தவரை அவருக்கு என்னால் எதுவும் உதவ என் சூழ்நிலை இடம் தரவில்லை. இன்று நான் வசதியாக இருக்கிறேன். என் தந்தையை எண்ணி தினமும் அழுகிறேன். அவருக்கு என்னால் உதவ முடிந்தால் தான் என் துயரம் தீரும்’ எனக் கேட்கிறார்.

அருகே இருந்த தோழர்களுக்கு வியப்பு. இந்த பிரச்னைக்கு இறைவனின் தூதர் என்ன பதில் சொல்வார்? இறந்தவர்களுக்கு உதவ முடியுமா? என்று அவர்களுக்கு குழப்பம். அங்கு சற்று நேரம் மவுனம் நிலவுகிறது. இறைவனின் தூதர், புன்னகைத்தபடி தன்னிடம் கேள்வி கேட்ட தோழரிடம் சொல்கிறார்.’கவலைப்படாதீர்கள், நிச்சயமாக இறந்த உங்கள் தந்தைக்கு உங்களால் உதவ முடியும்!

”எப்படி நாயகமே?’ என நபித்தோழர் கேட்டார்?

‘உங்கள் தாயார், சகோதரர், சகோதரிகள், உங்கள் தந்தையின் மற்ற உறவினர்கள் இன்றும் உயிருடன் தானே இருக்கின்றனர்?’என நபி(ஸல்) அவர்கள் கேட்க ‘ஆம் இருக்கின்றனர்’ என நபித்தோழர் கூறுகிறார்.

‘அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அவர்களுடன் நல்ல விதமாக உறவை வைத்துக் கொள்ளுங்கள். இப்படித் தான் இறந்து போனவருக்கு உதவ முடியும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை கேட்டதும் கேள்வி கேட்டவருக்கு மட்டுமல்ல; கூடியிருந்தவர்களுக்கு அந்த பதில் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியை தந்தது.

ஈந்துவக்கும் ஈகைத்திருநாள் கொண்டாடவிருக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பெருநாள் வாழ்த்துக்களை எனது சார்பாகவும், கீழை நியூஸ் இணையத்தின் ஆசிரியர் மற்றும் செய்தி குழுவினர் அனைவரின் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறோம்!

கீழை ஜஹாங்கீர் அரூஸி.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com