Home செய்திகள்உலக செய்திகள் அறிவியலாளரும் வேதியலுக்கான நோபல் பரிசு வென்றவருமான பீட்டர் ஜோசப் வில்லியம் டிபை (Peter Joseph William Debye) பிறந்த தினம் இன்று (மார்ச்-24,1884).

அறிவியலாளரும் வேதியலுக்கான நோபல் பரிசு வென்றவருமான பீட்டர் ஜோசப் வில்லியம் டிபை (Peter Joseph William Debye) பிறந்த தினம் இன்று (மார்ச்-24,1884).

by mohan

வில்லியம் டீபை நெதர்லாந்தில் மாஸ்ட்ரிச்ட் என்ற இடத்தில் மார்ச் 24,1884ல் பிறந்தார்.பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு 1901ல் ஜெர் மனியில் ஆக்கென் தொழில்நுட்பப் பல்கலைக்கழத்தில் சேர்ந்த இவர் மின் பொறியியலில் பட்டம் பெற்றார். சுழல் மின்னோட்டப் பிரச்சினைக்கான கணித அடிப்படையிலான தீர்வு தொடர் பான கட்டுரையை வெளியிட்டார். அங்கே பணியாற்றிய பிரபல இயற் பியல் விஞ்ஞானி சோமர்ஃபெல்ட் தனது முக்கிய கண்டுபிடிப்பே தன் மாணவரான இவர்தான் என்று பாராட்டியுள்ளார்.

1908-ல் கதிர்வீச்சு அழுத்தம் குறித்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார். 1910ல் பிளாங்க் கதிர்வீச்சு சூத்திரத்தைத் தானே கண்டறிந்த முறை மூலம் விளக்கினார். 1911ல் சூரிச் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பதவியேற்றார். சமச்சீரற்ற மூலக்கூறுகளில் மின்னேற்ற விநியோகத்துக்கு இருமுனை திருப்புத்திறன் (dipole moment) என்ற கருத்துருவை 1912ல் பயன்படுத்தினார். வெப்பநிலைக்கு இருமுனை திருப்புத் திறன், மின்கடவாப் பொருள் மாறிலிகள் (dielectric constant) தொடர்பான சமன்பாடுகளை மேம்படுத்தினார். இதனால் மூலக்கூறு இருமுனை திருப்புத் திறன் அலகுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.

நீல்ஸ் போரின் அணுக் கட்டமைப்புக் கோட்பாட்டை விரிவுபடுத்திய இவர், நீள்வட்டச் சுற்றுப் பாதைகளை அறிமுகப்படுத்தினார். படிகத் திடப்பொருட்களில் எக்ஸ்-கதிர் சிதறல் உருபடிமங்களின் மீது வெப்பநிலையின் தாக்கத்தை பால் ஷெர்ரருடன் இணைந்து கணக்கிட்டார். தனது ஆராய்ச்சிகளுக்காக மிகச் சிறந்த வசதிகள் கொண்ட சோதனைக்கூடம், சிறந்த உபகரணங்கள் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இதனால்தான் பெர்லின் பல்கலைக்கழகத்தில் கோட்பாட்டு இயற்பியல் பேராசிரியராகவும் இப்போது மாக்ஸ் பிளாங்க் இன்ஸ்ட்டியூட் என்று குறிப்பிடப்படும் கெய்சர் வில்ஹம் இன்ஸ்டிடியூட்டில் இயக்குநராகவும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்த உடனேயே அங்கு சென்றார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஜெர்மனியில் பணியைத் தொடர முடியாமல் போனதால் இத்தாலி சென்றார். அங்கு சில காலம் பணியாற்றிய பின் விரிவுரைகள் ஆற்றுமாறு கார்னெல் பல்கலைக்கழகம் விடுத்த அழைப்பை ஏற்று 1940ல் அமெரிக்கா சென்றார்.டிபை மின்னிருமுனையித் திருப்புத்திறனின் அலகு (SI ) அலகு ஆகும். இயற்பியலாளர் பீட்டர் டிபை என்பவரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.1 டிபை என்பது 1×10−18 ஸ்டாட்கூலும்-செண்ட்டி மீட்டர் ஆகும். டிபை நீளம், வெப்பநிலையுடன் திண்மங்களின் வெப்பக் கோட்பாடு, டிபை அலகு, டிபை அதிர்வெண், டிபை சார்பு உள்ளிட்ட பல இவரது பெயரால் வழங்கப்படுகின்றன. செயற்கை ரப்பர் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டார்.

பாலிமர்களின் பண்புகளின் ஒளிச் சிதறல்களில் மூலக்கூறு எடையைத் தீர்மானித்தார்.மூலக்கூறுகளின் அமைப்பு குறித்த இவரது பங்களிப்புகளுக்காகவும் குறிப்பாக மின் இருமுனையத் திருப்புத்திறன் (Electric dipole moment) மற்றும் எக்ஸ்-கதிரில் சிதறலின் சிறப்பான பங்களிப்புகளுக்காகவும் 1936ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1946ல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.ராம்ஃபோர்ட் பதக்கம், ஃபிராக்ளின் பதக்கம், ப்ரீஸ்ட்லி பதக்கம், தேசிய அறிவியல் பதக்கம் உள்ளிட்ட பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.

இயற்பியலில் பல்வேறு களங்களில், குறிப்பாக மூலக்கூறு கட்டமைப்பு குறித்த புரிதலை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய டிபை நவம்பர்02, 1966ல் தனது 82-வது வயதில் நியூயார்க், அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார் .

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com