Home செய்திகள் 2050 இல் உலக நாடுகளுக்கு உணவளிக்கும் நாடுகளில் இந்தியா பெரும் பங்கு வகிக்கும் – அப்துல் கலாம் ஆலோசகர் பேச்சு.. வீடியோ..

2050 இல் உலக நாடுகளுக்கு உணவளிக்கும் நாடுகளில் இந்தியா பெரும் பங்கு வகிக்கும் – அப்துல் கலாம் ஆலோசகர் பேச்சு.. வீடியோ..

by ஆசிரியர்

இராமநாதபுரத்தில் சுரேஷ் ஐ ஏ எஸ் அகாடமியில் 2 ஆம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. அகாடமி நிறுவனர் சுகேஷ் சாமுவேல் தலைமை வகித்தார். மாவட்ட நூலகர் (பொறுப்பு) நித்தியானந்தம், தூத்துக்குடி கருவூல உதவி அலுவலர் கனி முருகன், தங்கம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் முன்னிலை வகித்தனர். அகாடமி இயக்குநர் வித்யா சுகேஷ் வரவேற்றார். இராமநாதபுரம் கிளை ஒருங்கிணைப்பாளர் சங்கர் பிரபு வரவேற்றார்.

சுரேஷ் அகாடமி பயிற்சி பெற்று போட்டி தேர்வுகளில் வென்று பல்வேறு துறைகளில் அரசு பணி சாதனையாளர்களுக்கு இராமநாதபுரம் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஹெட்லி லீமா அமாலினி பரிசு வழங்கினார். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபி ஜெ அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகர் பொன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

போட்டி தேர்வு பயிற்சியாளர்களிடம் பொன்ராஜ் பேசியதாவது, “அகாடமி நிறுவனர் சுகேஷ், கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து போட்டி தேர்வுகள் மூலம் தற்போது வரை அரசு துறைகளில் 14.000 ஊழியர்களை உருவாக்கி மிகப் பெரிய சரித்திரம் படைத்துள்ளார் . கலாம் பிறந்த மண்ணில் பயின்ற நீங்கள் வேலைக்காக தேர்ந்தெடுக்கும் எந்த துறையாக இருந்தாலும் சிறந்து விளங்க வேண்டும். சாதனையாளராக வருவேன் என படிக்கும் காலத்தில் மாணவர்கள் இலட்சியம், நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் 14 லட்சம் அரசு ஊழியர்கள் ஏழரை கோடி மக்களை நிர்வகிக்கின்றனர். ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி வரி பணத்தில் ரூ. 68 ஆயிரம் கோடி அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. சிறந்த நிர்வாகம் என்பது அரசு ஊழியர்கள் கையில் தான் உள்ளது. 2030-2050 ஆண்டு கால இடைவெளியில் எண்ணெய், எரிவாயு இல்லாமல் போய் விடும். கலாமுடன் 20 நாடுகளில் பயணித்துள்ளேன். அங்கு நடந்த எதிர்கால திட்டமிடல் மற்றும் வளர்ச்சி கருத்தரங்கில் கல்வி மேம்பாடு, தண்ணீர் தேவைகளுக்கான தீர்வு தங்களது நாடுகளில் உள்ளது என ஆட்சியாளர்கள் மார்பு தட்டினர். அனைத்து தீர்வு காண எங்கள் (இந்தியா) நாட்டில் திறமை மிகுந்த இளைஞர் உள்ளனர் என கலாம் பெருமிதத்துடன் கூறினார்.

நாட்டில் அனைத்து மட்டத்திலும் நிலவும் லஞ்சம், ஊழலை அடியோடு வேரறுக்க மாணவர்கள் சிறந்த அரசியல் தலைவர்களாக உருவாக வேண்டும். மாணவர்களின் உழைப்பு எதிர்கால சந்ததியினருக்காக இருக்க வேண்டும். 2050 ல் உலக மக்கள் தொகை 9 பில்லியனாக இருக்கும் போது உலகத்திற்கே உணவு தேவையை பூர்த்தி செய்வதில் சீனா, இந்தியா பெரும் பங்கு வகிக்கப்போகிறது. 2000 கிலோ மீட்டர் தூர நதிகளை இணைத்து விவசாயத்திற்கு சீனா சவால் விடுகிறது. இந்தியாவில் உள்ள தண்ணீர் கடலுக்குள் விட்டு வேடிக்கை பார்க்கிறது. நீரை சேமிக்க வழி தெரியாமல் தமிழகமும் தண்ணீரை கடலுக்கு அனுப்புகிறது. தமிழகத்தில் தென் மாவட்டங்கள் வளம் பெற வேண்டும் என்ற தொலை நோக்கு பார்வையில் முல்லை பெரியாறு அணையை வெளி நாட்டை சேர்ந்த பென்னி குயிக் கட்டினார். தற்போதுள்ள ஆட்சி முறை மற்றும் நிர்வாகத்தில் மாற்றம் கொண்டுவர மாணவர்கள் நல்ல தலைவர்களாக உருவாக வேண்டும் என்றார். தூத்துக்குடி தொழிலதிபர் ஸ்டீபன்ராஜ், காவல் துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸி, தூத்துக்குடி கூட்டுறவு சார் பதிவாளர் அந்தோணி பட்டுராஜ், சுரேஷ் அகாடமி நெல்லை கிளை ஒருங்கிணைப்பாளர் அருண் சங்கர், கோவில்பட்டி பரோடா வங்கி ஊழியர் ராஜா, ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் ஆய்வாளர் கோபிநாத், ராமநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் தட்சிணாமூர்த்தி, பட்டுக்கோட்டை துணை வட்டாட்சியர் பாலகோபாலன் உள்பட பலர் பங்கேற்றனர். ராமநாதபுரம் கிளை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமார் நன்றி கூறினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com