Home செய்திகள் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி எப்போது.

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி எப்போது.

by mohan

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி மாவட்டத்திலுள்ள கடனாநதி அணை, இராமநதி அணை , குண்டாறு அணை அடவிநயினார் அணை, கருப்பாநதி அணை உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்திலுள்ள 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி வழிகின்றன. குற்றாலம் மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி புலியருவி சிற்றருவி செண்பகாதேவி அருவி தேனருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ள தடை உத்தரவு நீடித்து வருவதால் குற்றாலம் அருவிகளில் இன்று வரை பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் யாரும் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப் படவில்லை. ஆனாலும் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகளவில் விழுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் சென்று அருவிகளை வேடிக்கை பார்த்த வண்ணம் உள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில் குற்றாலம் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அனைவரும் குற்றால அருவிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தமிழக அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். கடந்த 9ஆம் தேதி தென்காசி மாவட்ட சிஐடியு சார்பில் பொதுமக்களை திரட்டி தடை உத்தரவை மீறி அருவிகளில் குளிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்த நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் கோட்டாட்சித்தலைவர் நா.பழனிச்சாமி, டிஎஸ்பி மணிமாறன் மற்றும் அதிகாரிகள் வரும் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தமிழக அரசு மூலம் உரிய அனுமதி பெற்றுத்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளனர். இதை தொடர்ந்து சிஐடியு சார்பில் நடைபெற இருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தரப்பு மக்களும் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் அருவிகளில் குளிக்க அனுமதி கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!