Home செய்திகள் சச்சார் கமிஷன் பரிந்துரைகளை தமிழகத்தில் செயல்படுத்திட வேண்டும்;சிறுபான்மை ஆணைய தலைவரிடம் எஸ்டிபிஐ கோரிக்கை..

சச்சார் கமிஷன் பரிந்துரைகளை தமிழகத்தில் செயல்படுத்திட வேண்டும்;சிறுபான்மை ஆணைய தலைவரிடம் எஸ்டிபிஐ கோரிக்கை..

by mohan

நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையில் அமைக்கப்பட்ட சச்சார் கமிஷனின் பரிந்துரைகளை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும்.தாயகம் திரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்களின் மறுவாழ்வு திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை ஆணைய தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எஸ்டிபிஐ, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், மஸ்ஜித் முபாரக் ஜமாஅத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொது மக்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இறுதியில் அனைவரும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாவட்ட பொருளாளர் செய்யது மஹ்மூத் தலைமையில் நகர தலைவர் பாதுஷா, நகர செயலாளர் ஆசாத், நகர பொருளாளர் ஜாபர் அலி, நகர மருத்துவ சேவை அணி பொறுப்பாளர் முஹம்மது ரபீக் ஆகியோர் கலந்து கொண்டு பின்வரும் கோரிக்கைகளை மனுவாக சிறுபான்மை நலத்துறை ஆணைய தலைவரிடம் நேரில் வழங்கினர். அதில் தமிழக அரசு பதவியேற்று பல்வேறு மக்கள் நல திட்டங்களுடன் சிறப்பாக செயல்பட்டு வரும் சூழலில், சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக பொறுப் பேற்று திறம்பட செயலாற்றி வரும் சிறுபான்மை ஆணைய தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் இஸ்லாமிய சமூகம் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கும், சமூக முன்னேற்றத்திற்குமான எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கைகளை பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு கீழ்கண்ட கோரிக்கைகளை முன் வைக்கின்றோம். இஸ்லாமிய மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் அல்லது உதவி ஆய்வாளர்களை பணியில் அமர்த்த வேண்டும்.இந்திய திருநாட்டில் இஸ்லாமிய சமூகத்தின் வாழ் நிலையை அறிந்து அவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல் படுத்துவதற்காக கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நீதிபதி இராஜேந்திர சச்சார் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் கடந்த 2006 ஆம் ஆண்டு தங்களது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. அவ்வறிக்கையில் பாதுகாப்பு துறையில் இஸ்லாமிய சமூகத்தின் பங்கு மிகவும் குறைவாக உள்ளது. இது போன்ற நிலை தொடருமானால் மதக்கலவரங்கள் நிகழும் போது உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் அதிகம் ஏற்படுவதோடு, பாதுகாப்பற்ற ஒரு சூழலில் தாங்கள் இருப்பதாக உணருகின்றனர். ஆகவே இந்நிலையை மாற்றி அவர்களுக்கு நம்பிக்கையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதமாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முஸ்லீம் காவல் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் நிலையிலான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. சச்சார் கமிஷனின் பரிந்துரையை ஏற்று கடந்த மன்மோகன் சிங் அரசு சச்சார் கமிஷனின் இப்பரிந்துரையை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்ட போதிலும் இதுவரைக்கும் தமிழகத்தில் இது நடைமுறை படுத்தப்படவில்லை. தற்போது கும்பல்களால் இஸ்லாமிய சமூகம் நாடு முழுவதும் பல்வேறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சூழலில் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டும், தாங்கள் அச்சமற்று வாழுகின்றோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகத்தில் ஒன்றிய அரசின் இந்த உத்தரவை அமுல்படுத்தும் விதமாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் முஸ்லிம் காவல் ஆய்வாளர்கள் அல்லது காவல் உதவிய ஆய்வாளர்கள் நிலையிலான அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடு வாழ் தமிழர்களின் மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, புளியங்குடி போன்ற பல்வேறு ஊர்களில் இருந்து பிழைப்பு தேடி வெளிநாட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் சென்றிருக்கின்றனர். இவ்வாறு கடல் கடந்து சென்ற ஆயிரக்கணக்கான சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கொரோனா பேரிடர் காரணமாக தங்களுடைய வேலைகளை இழந்தும், மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல முடியாமலும், தங்கள் வாழ்வாதாரத்திற்கான எவ்வித வழிகாட்டுதல் இல்லாமலும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் பலர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பியும் பொருளாதார சூழல் காரணமாக தொழில் தொடங்க முடியாமலும், முறையான தொழில் வழிகாட்டுதல் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர். ஆகவே நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கான அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் வெளிநாட்டு வாழ் தமிழர்களின் மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்தி, பொருளாதார வழிகாட்டுதலை வழங்கி அவர்கள் தொழில் தொடங்க வட்டியில்லா கடனுதவி வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த சிறு வியாபாரிகள் சாலையோர சிற்றுண்டிகள், வாகனத்தில் துணி வியாபாரங்கள் என தங்களின் பொருளாதார நிலைக்கேற்ப பல்வேறு வியாபாரங்களை செய்து வருகின்றனர். இவ்வாறு சிறு வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் வருமானங்கள் தங்கள் குடும்பங்களை நடத்த போதுமானதாக இல்லாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே சிறுபான்மை சமூக சிறு வியாபார பெருமக்களின் வாழ்வை மேம்படுத்தும் பொருட்டும் தங்கள் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொருட்டு வட்டியில்லா கடன் வழங்கி அவர்களின் வாழ்வு மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிறை வாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் கழித்தவர்களை விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு முன் விடுதலை திட்டத்தை 1994ல் கொண்டு வந்தது. எவ்வளவு பெரிய குற்றங்களை செய்தவர்களாக இருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் அவர்களை முன் விடுதலை செய்ய முடியும். அண்ணா பிறந்தநாள், அண்ணா நூற்றாண்டு, எம்ஜிஆர் நூற்றாண்டு, செம்மொழி மாநாடு, என பல நிகழ்வுகளில் பத்தாண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகள் தமிழக சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும், முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலை மட்டும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றது. தமிழக சிறைகளில் 47 முஸ்லிம் சிறைவாசிகள் இருபது ஆண்டுகளுக்கும் அதிகமாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இவர்களின் குடும்பங்கள் பல்வேறு இன்னல்களுக்கும், கஷ்டங்களுக்கும் மத்தியில் காலங்களை கழித்து வருகின்றனர். இவர்களின் குடும்பத்தினர்கள் விடுதலையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சூழலில் நன்னடத்தை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!