கடையநல்லூரில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும்-நகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து தவ்ஹீத் ஜமாத் மனு…

கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் தெருக்களில் தனிநபர்களால் தடுப்பு சுவர் போன்று போடப்பட்ட வேகத்தடைகளை அகற்றுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நகராட்சி சார்பில் 33 வார்டுகளில் புதியதாக தார் சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் தெருக்களில் இளைஞர்கள் அதிக அளவில் வாகனங்களில் வேகமாக செல்வதாக கூறி அந்தந்த பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வேகத்தடைகளை சுமார் அரை அடி உயரத்திற்கு உயரமானதாக அமைத்துள்ளனர்.வேகத்தடை 10 செ.மீ., உயரத்திற்கு மேல் இருக்க கூடாது. அந்த உயரத்திலிருந்து 1.45 மீட்டர் வீதம் இருபுறமும் சரிவு கொடுக்க வேண்டும். பின்னர் அதன்மீது வெள்ளை பெயின்டால் கோடு போட்டு அடையாளப்படுத்த வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் தற்போது கடையநல்லூர் தெருக்களில் அமைக்கப்படும் வேகத்தடைகள் இந்த விதிமுறையை பின்பற்றி அமைக்கப்படவில்லை.

மேலும் நகராட்சியின் அனுமதி இல்லாமல் அந்தப் பகுதி மக்களால் போடப்பட்டுள்ளதால் பைக், கார், ஆட்டோக்கள் வேகத்தடையை தாண்டிச் செல்ல அதிக அளவில் சிரமப்படுகின்றனர்.சில நேரங்களில் பைக்கில் பின்னால் இருக்கும் வயதான பெண்களும் கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. தெருக்களில் துப்புரவு தொழிலாளர்கள் குப்பை வண்டிகளை தள்ளிச்செல்லும் போது மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பின்னால் அமர்ந்து செல்வோருக்கு (குறிப்பாக பிரகனண்ட் லேடி) குறுக்கு எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்து நிறைந்துள்ளது.ஆகவே அனுமதி இல்லாமல் போடப்பட்ட அனைத்து வேகத்தடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கடையநல்லூர் நகராட்சி மற்றும் கடையநல்லூர் காவல்துறைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை வலியுறுத்தும் வகையில், டவுண் கிளை தலைவர் சாகுல் ஹமீது, டவுன் கிளை செயலாளர் காஜா மைதீன் ஆகியோர் நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதையடுத்து நகராட்சி ஆணையாளர் கூறியதாவது: அரசியல் கட்சி, இஸ்லாமிய அமைப்புகள், அந்தப் பகுதியின் உள்ள நாட்டாமைகள், பொதுநல அமைப்புகள், முக்கியஸ்தர்கள், அனைவரையும் நேரில் அழைத்து பேசி விட்டு காவல்துறை உதவியுடன் உடனடியாக அனைத்து தெருக்களிலும் போடப்பட்டுள்ள வேகத்தடைகள் அப்புறப்படுத்தப்படும் என உறுதியளித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..