“ஆதாமும் ஏவாளுமான சில ஆப்பிள் கதைகள்”- கதை என நுழைந்தால் கவிதையாக விரியும் அற்புதம்..

”நாகா” காந்த கவிதை குரலுக்கு சொந்தக்காரர்.  அமீரகத்தில் வாழும் தமிழ் மக்கள் இரவு நேரங்களில் இவரின் கவிதை குரலை கேட்காதவர்கள் இருக்க முடியாது.  மெல்லிய இசைகளுக்கு இடையே அழகிய கவிதைகளுடன் நேயர்களின் மனதை கொள்ளையடிப்பவர்.

1998ம் ஆண்டு முதலே கிட்டத்தட்ட 10 கவிதை புத்தகங்களை வழங்கியவர். கடந்த வாரம் சென்னை புத்தக கண்காட்சியில் அவர் எழுதி 2017ம் வருடம் வெளியான “ஆதாமும் ஏவாளுமான சில ஆப்பிள் கதைகள்” படிக்க நேர்ந்தது.  கதைகளாக காதல் இருக்கும் என பயணிக்க தொடங்கினால் 90 பக்கங்களும் காதல் வழிந்தோடும், காதல் கொள்ளாதவரையும் வயப்படுத்தும் காதல் கவிதைகள்.

இக்கவிதை புத்தகம் தொடக்கம் முதல் காதலியை மனைவியாக, மனைவியை தோழியாக என பல கோணங்களில் காதலை சொட்டியுள்ளார்.  நட்பும், காதலும் இரண்டும் சமமே என்பதை தன் தலையங்கத்திலேயே நட்பின் ஆழத்தையும் உன்னதத்தையும் மிக நேர்த்தியாக தொடங்கி, பின் இறுதி வரை காதலை கவிதையாக கொண்டு சென்றுள்ளார்.

காதலின் உவமைக்கு எல்லையில்லை என்பதை உறுதிபடுத்துவது போல் புத்தகம் முழுவதும் காதலுக்கு உவமைகள்.  ஆணும் பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்தும் “ என் விருப்பங்களை அவளும், அவள் தேவைகளை நானுமாக..” “ நான் உயர பறக்கும் காற்றாடியாகிறேன், நூலுடன் வருகிறாள்..” என கோடிட்டு காட்டும் வரிகள்.

காமமும் அழகிய காதல்தான் என்று ஆர்ப்பரிக்கும் “சத்தமில்லாமல் நிகழ்வதற்கு பெயர்தான் காதல் என்று சொன்னால் அது காதலாகவே இருக்கட்டும்” எனும் வரிகள்.

காதல் அனைத்து இயற்கைக்கும் ஓப்பாக்கலாம் என்பது போல் நிலவை சாட்சியாக்கி, அறிவியலையும் துணையாக்கி, காவியங்களையும் தூணாக்கி, இலை – கொடி- செடிகள் மீது படர்ந்து, “ஒரு விசையை ஞாபகப்படுத்தும் அவள் வருகை..” என்று தானும் ஒரு இசை கலைஞன் என்பதை முத்திரை பதித்து, ராஜ ராஜனையும், பிரிதிவிராஜனையும் தொட்டு தானும் கவியின் அரசன் என்று அடையாளப்படுத்தி இருப்பது இக்கவிதை தொகுப்பின் முத்தாய்ப்பு.

இது போன்று புத்தகத்தில் உள்ள 90பக்கங்களையும் விவரிக்கலாம், ஆனால் இந்த காதல் சொட்டும் “ஆதாமும் ஏவாளுமான சில ஆப்பிள் கதைகள்” வாங்கி படித்து பாருங்கள், நீங்களும் காதலை உணரலாம்.

இன்னும் இதுபோன்ற பல படைப்புகள் வெளி வர நாமும் வாழ்த்துவோம்.