Home செய்திகள் “பயங்கரவாதிகள் கூறும் எதுவும் உண்மையில் இஸ்லாம் அல்ல..!” – ஜம்இய்யத்துல் உலமா..

“பயங்கரவாதிகள் கூறும் எதுவும் உண்மையில் இஸ்லாம் அல்ல..!” – ஜம்இய்யத்துல் உலமா..

by ஆசிரியர்

“இஸ்லாமிய போதனைகள் என்று பயங்கரவாதிகள் கூறும் எதுவும் உண்மையில் இஸ்லாம் அல்ல; இஸ்லாம், கொலை செய்வதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. ஆனால் இவர்கள், ஜிஹாத் என்ற கோட்பாட்டைப் பின்பற்றுகின்றனர். இது மிகவும் ஆபத்தானது” என்று ஜம்இய்யத்துல் உலமா கூறியதாவது.

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு தாக்குதல்களை அடுத்து, இதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பத்தரமுல்லையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி அலுவலகத்தில், கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க தலைமையில் நடந்தது.

இதில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், முஸ்லிம் இளைஞர் ஒன்றியம், ஸ்ரீலங்கா ஜமாஅத் இஸ்லாம், முஸ்லிம் வழக்கறிஞர்கள் ஒன்றியம், முஸ்லிம் புத்தி ஜீவிகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைமைப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பு குறித்த கருத்து வெளியிட்ட ஜம்இய்யத்துல் உலமா உறுப்பினர்கள், “ஐ.எஸ் இயக்கத்தால் உலக அளவில் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன், முஸ்லிம்களுக்கு பெருமளவில் அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில், அனைத்து இன மக்களுடனும் ஒன்றிணைந்து வாழ்ந்துவந்த முஸ்லிம் மக்கள், தற்போது நடைபெற்ற தாக்குதல்களால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற இன மக்கள் மத்தியில், முஸ்லிம்கள் குறித்து பரவலாக ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையின்மையில் இருந்து எவ்வாறு வெளிவருவது என்பது குறித்தும் ஆராய்ந்தோம்.

தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், அதை மதத்தின் பெயரைப் பயன்படுத்தி செய்திருக்கின்றனர். ஆனால், உண்மையான இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு இது முற்றிலும் முரணான ஒரு செயல்பாடாகும். நடைபெற்ற தாக்குதல்கள், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இந்த பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பதற்கு, முஸ்லிம்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

இந்த தருணத்தில் முஸ்லிம்களை ஒதுக்காமல், அவர்கள் மீது எவ்வித வன்முறைகளையும் பிரயோகிக்காமல், இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அவர்களின் உதவியைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும். இந்நாட்டுப் பிரஜை என்ற அடிப்படையில், அனைவரும் ஒன்றிணைந்து இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும்.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கும், தற்போது நிகழ்த்தப்பட்ட இந்த பயங்கரவாதத்திற்கும் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது, விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒத்த பிரச்னையல்ல; அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதுடன், அதனை விடவும் மிகவும் ஆபத்தானது.

இந்தப் பயங்கரவாதிகள் இஸ்லாமிய போதனைகள் என்று கூறுபவை எவையும் உண்மையில் இஸ்லாம் அல்ல; இஸ்லாம், கொலை செய்வதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. ஆனால் இவர்கள், ஜிஹாத் என்ற கோட்பாட்டைப் பின்பற்றுகின்றனர். இது மிகவும் ஆபத்தானது” என்று கூறினர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!