Home செய்திகள் ‘ஐயமிட்டு உண்’ சேவை மூலம் 2 லட்சம் பேர் பயன்..!

‘ஐயமிட்டு உண்’ சேவை மூலம் 2 லட்சம் பேர் பயன்..!

by ஆசிரியர்

“சென்னையில் செயல்படும் ‘ஐயமிட்டு உண்’ சேவைத் திட்டத்தின் மூலம் இதுவரை, இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பயன் அடைந்துள்ளனர்” என்று, தி பப்ளிக் பவுண்டேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னை என்னதான் அபார வளர்ச்சி அடைந்திருந்தாலும், உண்ணுவதற்கு ஒரு வேளை உணவு, உடுத்த ஒரு உடைக்காக ஏங்குவோர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு கைகொடுப்பதற்காக தொடங்கப்பட்டதுதான் ‘ஐயமிட்டு உண்’ சேவைத் திட்டம்.

‘உண்பதற்கு முன் உதவி செய்’ என்ற நோக்கத்தில், தன்னார்வலர்கள் உதவியுடன் சென்னை பெசன்ட் நகரில் 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது அண்ணாநகர், ஆலந்துார், பழைய மகாபலிபுரம் சாலை (ஓ.எம்.ஆர்), தி.நகர் உள்ளிட்ட ஏழு இடங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கென தொடங்கப்பட்ட ‘பூத்’களில், உணவு மற்றும் தின்பண்டங்கள் வைக்க ஃப்ரிட்ஜ், துணி, புத்தகம், காலணி உள்ளிட்ட பொருட்கள் வைக்க தனி அடுக்கு என அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் ஒவ்வொரு பூத்திலும், தினமும் 100க்கும் அதிகமானோர் தங்களுக்கு தேவையான உணவு, துணி போன்ற பொருட்களை எடுத்துச் செல்கின்றனர்.

அதேபோல், உதவி செய்வோரும் தங்களால் இயன்ற பொருட்களை வைத்துச் செல்கின்றனர். இதை கண்காணிக்க, ஒவ்வொரு பூத்திலும் ஒரு காவலாளி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் திட்டத்தை, ‘தி பப்ளிக் பவுண்டேஷன்’ என்ற அமைப்பு நிர்வகித்து வருகிறது. இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தத் திட்டம், பயனாளிகள் மற்றும் உதவி செய்பவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து, தி பப்ளிக் பவுண்டேஷன் நிர்வாகிகள் கூறியதாவது; “உதவி செய்பவர்கள் – பயனாளிகள் இடையே ஒரு பாலமாக துவக்கப்பட்டதுதான் இந்தத் திட்டம். ஆரம்பத்தில், ‘வரவேற்பு கிடைக்குமா..?’ என்ற சந்தேகம் இருந்தது. தற்போது, பணமாகவும் பொருளாகவும் அதிகம் பேர் உதவி செய்கின்றனர்.

இதுவரை, 8.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள், 21 ஆயிரம் கிலோ துணிகள் வழங்கி உள்ளோம். இரண்டு லட்சம் பேருக்கு மேல் பயன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தை செயல்படுத்த 150 தன்னார்வலர்கள் உள்ளனர். தினக்கூலி வேலை செய்வோர்தான் அதிகமாக பயன் அடைகின்றனர். தேவை அறிந்து, சென்னையில் இன்னும் பல இடங்களில் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய உள்ளோம்” என்று தெரிவித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!