Home செய்திகள் மண்டபம் கடலில் தடை செய்த வலை மீன்பிடி விவகாரம் : ராமநாதபுரத்தில்அதிகாரிகள் முன்னிலையில் சமரசம்..

மண்டபம் கடலில் தடை செய்த வலை மீன்பிடி விவகாரம் : ராமநாதபுரத்தில்அதிகாரிகள் முன்னிலையில் சமரசம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட கடல் வளத்தை முற்றிலும் அழிக்கும் வெளியூர் முகவரி விசைப்படகுகளை வெளியேற்றக்கோரி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட மண்டபம் மீனவர்கள் 05.02.2019 அன்று உண்ணாவிரதம், கடையடைப்பு போராட்டம் நடத்தினர். தடை செய்யப்பட்ட வலை மீன்பிடிக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதம் விலக்கி கொள்ளப்பட்டது. மீனவர்கள் விவகாரத்திற்கு தீர்வு காணுவது தொடர்பான சமாதான கூட்டம் ராமநாதபுரம் கோட்டாட்சியர் சுமன் தலைமையில் நடந்தது.

இதில் அனைத்து தரப்பினரும் சட்டத்திற்கு உட்பட்டு இதுநாள் வரை உள்ள நடைமுறையை பின்பற்றி (தடை செய்யப்பட்ட அனைத்து வலைகளை தவிர்த்து) மீன்பிடித் தொழிலில் ஈடுபட வேண்டும். சட்டத்தை மீறும் படகுகளுக்கு பாரபட்சமின்றி சட்ட விதிகள் படி அபராதம் விதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஜனவரி 24ஆம் தேதி இரு தரப்பினர் மீதும் மீன் வளத்துறையால் போடப்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். பதிவு செய்யப்பட்ட படகுகளை வருவாய் துறை, மீன்வளத்துறை கூட்டு தணிக்கை செய்து கண்டறிந்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மீனவர்களுக்கு இடையே அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அணுகி தீர்த்துக்கொள்ளவேண்டும். மீனவர்கள் வரும் காலங்களில் எவ்வித பிரச்னையுமின்றி ஒற்றுமையுடன் சுமுகமாக சட்ட விதிகளுக்கு உட்பட்டு மீன்பிடித் தொழில் செய்வது என முடிவு செய்யப்பட்டது. ராமநாதபுரம் மீன் வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், மண்டபம் மீன்வளத் துறை உதவி இயக்குநர் கோபிநாத், ராமநாதபுரம் தாசில்தார் பொன்.கார்த்திகேயன், ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் எம். மகேஷ் முன்னிலை வகித்தனர். மீனவ நலச் சங்க பிரதிநிதிகள் சிகேஎம் கணபதி எஸ்.பாலசுப்ரமணியன், பெ.பாலசுப்ரமணியன், எம்.ஜாகீர் உசேன், செய்யது சுல்தான் உபைதுல்லாஹ் கான், சி.செல்வகுமார், சர்புதீன் அபூபக்கர் என்.காளிமுத்து, மாடசாமி, வின்சென்ட், ஜோசப், தாசன், அடைக்கலம், ஜான், சவரி ராஜ், ஜான்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!