Home செய்திகள் ஏர்வாடி சந்தனக் கூடு சமூக நல்லிணக்க திருவிழா தென் மாநில மக்கள் ஏராளமானோர் பங்கேற்பு…வீடியோ மற்றும் புகைப்படம்..

ஏர்வாடி சந்தனக் கூடு சமூக நல்லிணக்க திருவிழா தென் மாநில மக்கள் ஏராளமானோர் பங்கேற்பு…வீடியோ மற்றும் புகைப்படம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி குத்புல் அக்தாப் செய்ய து இபுராஹீம் பாதுஷா நாயகம் 844 ம் ஆண்டு சந்தனக் கூடு சமூக நல்லிணக்க திருவிழா அதிவிமர்சையாக கோலாகலமாக நடந்தது.

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா தென் மாநிலங்களில் உள்ள இஸ்லாமிய புண்ணிய தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. மத நல்லிணக்கத்திற்கு இப்புண்ணிய தலம் கடந்த பல நூறாண்டுகளாக எடுத்துக் காட்டாக விளங்குகிறது. நாட்டின் பல இடங்களில் மன நலம் பாதித்த ஏராளமானோர் இங்கு வந்து தங்கி சிறப்பு வழிபாட்டிற்கு பின் குணமாகி வீடு திரும்புகின்றனர். இப்புண்ணிய தலத்தின் சந்தனக் கூடு பிரபலமானது. பாதுஷா நாயகத்தின் 844 ம் ஆண்டு சந்தனக் கூடு திருவிழா ஜூலை 14ல் மவ்லீது ஷரீப்புடன் ஆரம்பமானது. மவ்லீது ஷரீப் தொடர்ந்து 23 நாள் நடைபெறுகிறது. ஜூலை 23ல் மாலை அடி மரம் நடப்பட்டு, ஜூலை 24 மாலை 5 மணியளவில் பேன்ட் வாத்தியம் இசையுடன் யானை, குதிரைகள் அணி வகுத்து வர கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அன்றிரவு இரவு 7. 15 மணியளவில் கொடியேற்றப்பட்டது.

இதை தொடர்ந்து நேற்று மாலை 6 மணி அளவில் சந்தனக் கூடு வாண வேடிக்கை வானில் வர்ண ஜாலம் காட்ட ஊர்வலம் இனிதே துவங்கியது.விழாவையொட்டி தர்கா வண்ண மின் விளக்குகளால் ஜொலித்தன. சந்தனக் கூடு ஊர்வலம் புறப்பட்டுச் சென்றதும் தர்காவில் விடிய, விடிய தொழுகை நடந்தது. சந்தனக் கூடு ஊர்வலம் யானை, குதிரைகள் ஒன்றன் பின் ஒன்று அணி வகுத்து வந்து ஏராளமான மக்கள் புடை சூழ இன்று காலை 5:10 மணிக்கு தர்கா வந்தடைந்தது. தர்காவில் திரளாக நின்றிருந்த மக்கள் ‘நாரே தக்பீர் அல்லாஹ் அக்பர்’ என்ற கோஷங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு ஒலிக்க வரவேற்றனர். பின் சந்தனப் பேழை மூன்று முறை தர்காவை வலம் வந்தது. இதன் பிறகு சிறப்பு தொழுகை நடைபெற்று புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி இனிதே நடந்தது.

திருவிழா தொடர் நிகழ்வாக ஆகஸ்ட் 12 காலை 8 மணிக்கு குரான் தமாம் செய்து சிறப்பு துவா நடக்கிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை ஹக்தர் பொது மகா சபை நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மக்களின் வசதிக்காக போதிய குடிநீர் வசதி ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.. கீழக்கரை டி எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவிழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கலெக்டர் நடராஜன் இன்று (06.8.2018) உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!