Home செய்திகள் பரிணாமத்தின் பிதாமகன் சார்லஸ் டார்வின். உண்மைகளும், சில சுவையான தகவல்களும்:

பரிணாமத்தின் பிதாமகன் சார்லஸ் டார்வின். உண்மைகளும், சில சுவையான தகவல்களும்:

by mohan

பரிணாமத்தின் பிதாமகன் சார்லஸ் டார்வினின் 211 வது பிறந்த தினம் பிப்ரவரி 12 ம் நாள் தான். இயற்கை சிந்தனைவாதியான, சார்லஸ் ராபர்ட் டார்வின் (இதுதான் இவரது முழுப்பெயர்), இங்கிலாந்தில், ஸ்ரூவ்ஸ்பெரி ( Shrewsbury, Shropshire) என்ற ஊரில், 1809, பிப்ரவரி, 12ம் நாள் பிறந்தார் (12 February 1809 – 19 April 1882). அவரது தந்தையார் ராபர்ட் டார்வின் ஒரு மருத்துவர்; அவரது பாட்டனார் எராஸ்மஸ் டார்வினும் ஒரு மருத்துவரே. அவரின் தந்தை ராபர்ட் டார்வின், சமூகத்தில் மதிப்பை பெற்ற மனிதர்.. டார்வினின் குடும்பம் கொஞ்ச வசதியானதும் ஊரில் புகழ் பெற்றதும் கூட. சார்லசின் தாத்தா எராஸ்மஸ் டார்வின் முற்போக்கு சிந்தனைகள் உள்ளவர். அதுபோலவே சார்லசும் வித்தியாசமான கோணத்தில்தான் அனைத்தையும் சிந்திப்பார்.

டார்வின் பிறந்த போது , அந்த 19ம் நூற்றாண்டில் தான் ஏராளமான அறிவியல் கண்டுபிடிப்புகளும், சில புரட்சிகர அறிவியல் மாற்றங்களும் நடைபெற்றன. அதில் முக்கியமான ஒன்றுதான் உயிரியலில், அதிலும், மனிதனின் வரலாற்றுப் பாத்திரத்தில் , மனிதன் மற்றும் உயிரிகளின் முன்னோடி யார் என்பதுதான் அது. அதுதான் பரிணாமம் என்பதும் கூட.. அந்த பரிணாமத்தின் அறிவியலில் பிறந்த தகவலும், உண்மையுமான ஒரு விஷயம்தான் மனித இனம் குரங்கு போன்ற இனத்திலிருந்து உருவானது என்பதே. அந்தக் கருத்தை, பல புதை படிமச் சான்றுகளுடன், உயிர் சான்றுகளுடன் நிரூபணம் செய்த விஞ்ஞானிதான் சார்லஸ் டார்வின்.

டார்வின் மிக இளம் வயதிலேயே தன் அன்னையை இழந்து விட்டார். ஸ்ரூவ்ஸ்பெரியில் தொடக்கக் கல்வியைக் கற்றார். சிறுவயது முதல் விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியன மீது அதீத ஆர்வம் காட்டினார். தந்தையார் ராபர்ட் டார்வின், தன்னைப் போன்று மகன் சார்லஸும் மருத்துவராக வரவேண்டும் என்று விரும்பினார். எடின்பரோ பல்கலைக்கழகத்தில் ராபர்ட் டார்வின் மகனைச் சேர்த்தார்; ஆனால் இயற்கையியல் துறையிலும், நிலவியல் துறையிலும் சிறந்த மாணவராக விளங்கிய டார்வினுக்கு மருத்துவத் துறையில் நாட்டம் செல்லவில்லை.

சார்லஸ் சிறுவனாக இருந்தபோது, அவர் பள்ளிக்குச் செல்லாமல், பெரும்பாலும் ஊர் சுற்றப் போய்விடுவார். கட்டிலுக்கு அடியில் பல எலிக்குஞ்சுகளை வளர்த்தார். தட்டான், மண்புழுக்கள், பட்டாம்பூச்சி, வண்டுகள், அணில்கள், புறாக்கள் என பல விலங்குகளுடன் தன பொழுதைக் கழிப்பார். விலங்குகளிடம் அன்பாக இருப்பார். இதனால் தந்தைக்கு சார்லசின் மேல் ஏகக் கோபம். “உனக்குப் படிக்கவே பிடிக்கலை; படிப்பும் ஏறல; நாய் பின்னாடி ஓடுறது; எலி பிடிக்கிறது இதுதான் உனக்குபிடிச்சது. உனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான். இதனால் நம்ம குடும்ப மானமே போகுது!” எனத் தன் மகனை கடித்து கொள்வார் தந்தை. தந்தைக்கு பின்னாளில் தன மகன் பெரிய விஞ்ஞானியாகப் போகிறான்.. உலக சரித்திரத்தில் நீங்கா இடம் பெறப்போகிறான் என்பது தெரியவில்லை.

கடவுள் படைத்த அற்புத உருவம் மனிதன் மட்டுமே. அவன்தான் கடவுளின் படைப்பில் உயர்ந்தவன் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், மனிதன் குரங்கு போன்ற இனத்திலிருந்து உருவானது என்றால், மதவாதிகள், தேவாலய மக்கள் இவரை நடு ரோட்டில் நிற்கவைத்தே சுட்டுவிடுவார்கள். ஆனாலும் கடலில் பல மாதங்கள் பயணம் செய்து, ஆங்காங்கே, பல உயிர்களையும், விலங்குகளையும் சேகரித்து ,ஒப்பிட்டு, அவற்றின் உடல் உள்ளுறுப்புகளை ஆராய்ந்து அதன் பின்னரே, உயிரிகளின் தோற்றம்(Origin of Species ) என்ற நூலை எழுதினர் சார்லஸ் டார்வின்.. ஆனால் இதனை எழுதுவதற்கு அவர் சுமார் 20 ஆண்டு காலம் அதற்கான தகவல்களை, அதன் உண்மைகளை சேகரித்தார் என்பதே உண்மை.

சார்ல்ஸ் டார்வினுக்கு இயற்கையாக விலங்குகள் மேலுள்ள ஈடுபாட்டால்தான், அவற்றை சேகரித்து அதன் பின்னணியை அலசி, உயிர்களின் தோற்றம் பற்றிய கணிப்பைக் கொண்டுவரமுடிந்தது. இயற்கைத் தேர்வு மூலம் சார்லஸ் டார்வின் உருவாக்கிய பரிணாமக் கொள்கைதான் இன்று நம்மை , இந்த உலகத்தில் நமது இடம் என்ன என்ற மறுசிந்தனையை தூண்டியது.

சார்லஸ் டார்வின் தமது 22ஆம் வயதில் இறையியலில் (Theology) பட்டம் பெற்றார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த ஜான் ஹென்ஸ்லோ (John Stevens Henslow) என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின். அவர் மூலமாக கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராய் (Robert FitzRoy) என்பவரின் நட்பு கிட்டியது. தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய HMS Beagle என்ற கப்பல் புறப்படவிருந்தது. கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராயின் தலமையில் செல்லவிருந்த அந்தப் பயணத்தில் கலந்துகொள்ளுமாறு டார்வினுக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்டு 1831-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி கேப்டன் பிட்ஸ்ராயும், டார்வினும் பயணத்தைத் தொடங்கினர். இரண்டாண்டுகளில் திரும்புவது என்ற முடிவோடு தங்கள் பயணத்தினைத் தொடங்கினர். ஆனால் ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்புவாய்ந்த பயணம்தான் “பரிணாம வளர்ச்சிக் கொள்கை “உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. அந்தப் பயணத்தைத் தொடங்கியபோது டார்வினுக்கு வயது 22.

“உயிரினங்களில், மாற்றங்கள் எப்படி, ஏன் ஏற்படுகின்றன?” என்ற வினாவிற்கு விடை காணும் ஆர்வம் டார்வினுக்கு ஏற்பட்டது. இந்நாளில் காணவியலாத, மறைந்துவிட்ட உயிரினங்களையும், மற்றும் இப்போது உயிரோடிருக்கிற உயிரினங்களையும் அவற்றின் எலும்புகளின் துணைகொண்டு ஆய்வு செய்யும் முயற்சியில் டார்வின் ஈடுபட்டார். தான் சேகரித்த சில எலும்புகளுக்கு சொந்தமான விலங்குகள் முற்றாக அழிந்து போயிருக்கும் என்று முதலில் யூகித்தார். ஆனால் பின்னர் அந்த விலங்குகளிலிருந்துதான் தற்போதைய சிறிய அளவிலான விலங்குகள் தோன்றியிருக்க வேண்டும் என்றும் கருதினார். கலபோகஸ் (Galapagos Island) தீவுகளில், புதிய வகையான பறவைகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அதிசயப்பட்டார். அந்த ஆய்வின் பயனாக “பரிணாம வளர்ச்சிக் கொள்கை” முடிவுக்கு அவர் வந்தார். இப்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, டார்வின் 1836-ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார். அமெரிக்கக் கடலோரப் பகுதி மற்றும் ஐரோப்பியத் தீவுகளில் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த டார்வின் ஐந்து ஆண்டுகளில் தான் சேகரித்த விபரங்களையும்,தமது கண்டுபிடிப்புகளையும் ஆய்வுக்கட்டுரையாக எழுதி The voyage of the Beagle என்ற நூலை லண்டனில் வெளியிட்டார்

1858ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள், டார்வினின் கண்டுபிடிப்புகளும், அவரது நண்பர் வாலஸின் கட்டுரையும் லண்டன் லின்னன் கழகத்தில் (Linnean Society of London) வாசிக்கப்பட்டன. பீகிள் பயணத்தில் சேகரித்த ஆய்வு செய்ததன் பயனாக டார்வினுக்குத் தோன்றியதே ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை’ ஆகும். 1859 ஆம் ஆண்டு இக்கொள்கையை, டார்வின் உலகை வியப்பில் ஆழ்த்திய ஒரு புத்தகம் மூலம் வெளியிட்டார். “The Origin of Species by Natural Selection” அதாவது ‘இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம்’ என்ற அந்த புத்தகம் கூறிய கொள்கைதான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை. அதன்படி உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும்”. இது புதிய இனங்களின் உருவாக்கத்திற்கு வழியேற்படுத்தும் என்றும கண்டறிந்து கூறினார் டார்வின். இக்கருத்துகளின் அடிப்படையிலேயே உயிரினங்களில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

சார்லஸ் டார்வின், தனது புத்தகம் உயிரிகளின் தோற்றம் வெளிவரும் முன்பு சுமார் 20 ஆண்டுக்காலம் மௌனமாக சும்மாவே இருந்தார். டார்வின் உயிரிகளின் தோற்றம் பற்றி அவர் எழுதப் போவதாக சொன்னதுமே, அவரைச் சுற்றி உள்ளவர்கள் . அவர் என்னவோ ஒரு கொலைக்கு தான் ஒப்புதல் வாக்குமூலம் தரப்போவது போல, அவரை ரொம்பவும் கேலியும், கெக்கலியும் , நையாண்டியும் செய்தனர் .. எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு, இதுவரை யாரும் செய்யாதது.. உலகைப் புரட்டிப் போட்ட, யாரும் நம்பவே முடியாத ஒன்றைக் கண்டுபிடித்தத்திற்கு, உயிரிகளின் மிக அடிப்படையான ஆதாரத்தை, ஆதாரங்களோடு , உண்மையை வெளிப்படுத்துவதற்கு, ஒரு மனிதன், ஒரு தனி மனிதன் தன வாழ்க்கையில், ஏராளமான போராட்டங்களையும் கஷ்டங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது என்பதுதான் உண்மை.

பரிணாமக் கொள்கையைக் கேட்டு உலகமே ஸ்தம்பித்தது. பலர் ஏற்றுக்கொண்டனர். பல மதவாதிகள் இவரைக் குரங்கு என சித்தரித்தார்கள். பல இடங்களில் குரங்கு என்றும், நரகத்துக்குதான் போவார் என்றும் சொன்னார்கள். அவரின் பிறந்தநாளைப ‘பேய் தினம்’ என்று வேறு அறிவித்தார்கள். காரல் மார்க்ஸ் தன்னுடைய நூலை டார்வினுக்கு சமர்ப்பித்தார். கடவுளின் முதல் எதிரி என்று டார்வினின் நூலைத் தூற்றினார்கள்.

உயிர்களின் தோற்றம் என்ற புத்தகத்தின் முழுப்பெயர் : ” On the Origin of Species by Means of Natural Selection, or the Preservation of Favoured Races in the Struggle for Life” இந்த புத்தகம் முதன் முதல் 1859 ம் ஆண்டு, நவம்பர் 24ம் நாள் மதியம் 1.00 மணிக்கு வெளியானது. அப்போது அது வெளியான அன்றே அதன் 1250 பிரதிகளும் விற்று தீர்ந்துவிட்டன.. அதனுடைய, அன்றைய விலை 15 ஷில்லிங். 1872 க்குள் 6 பதிப்புகள் போடப்பட்டன. 1860 ல் 3000 புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இதில் ஆச்சரியப் படவேண்டிய விஷயம், என்னவென்றால், யாரெல்லாம் டார்வினை, இவர் குரங்கு, இவர் அப்பா குரங்கு, இவரின் மூதாதையர் குரங்கு என்றெல்லாம், திட்டி, அவரைப்பற்றி ,டார்வின் தலையையும், குரங்கு உடலையும் சேர்த்து கேலி சித்திரமும் போட்டார்களோ , அவர்களும், மத குருமார்களும் தான், டார்வின் அப்படி என்னதான் எழுதி இருக்கிறார் என்பதை அறிய எல்லா புத்தகங்களையும் வாங்கிவிட்டனர். ஆனால் டார்வினின் கருத்துகள் அறிவியல் உலகை வேரோடு அசைத்தது. அவரின் கருத்துகள் வணிக உலகிலும் உலவின. சமுதாயத்திலும் பல மாற்றங்களை உண்டுபண்ண அவரின் கருத்துக்கள் உதவின.

உயிர்ளை எல்லாம் ஒரே நாளில்தான் ஆண்டவன் உருவாக்கினார் என்று உலகின் அனைத்து மதங்களும் போதித்து வந்தன. அந்தக் கருத்தினை , டார்வினின் புத்தகம் அடித்து நொறுக்கி, தூள் தூளாக்கி தவிடுபொடியாக்கியது என்பதால் அனைத்து மதவாதிகளும் கொதித்து கொந்தளித்து டார்வினை உண்டு இல்லை என்று ஆக்கிவிடத் துடித்தனர். ஆனால் டார்வின் அமைதியாக தன் உயிரின சேகரிப்பால், அவற்றின் விளக்கத்தால், அவர்களுக்கும், அவைகளுக்கான விளக்கமும் தர முடிந்தது. உயிரினங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து, சின்ன உயிரிகளிலிருந்து பெரிய உயிரியாக மாற , ஒவ்வொரு விலங்கினமாக மாறி மாறி, இன்றைய உருவத்துக்கு வந்திருக்கின்றன என்பதையும் தெளிவாக ஆதாரத்துடன் தெரிவித்தார்.… எதுவும் ஒரே நாளில் படைக்கப்பட்டதல்ல என்பதை தன் ஆராய்ச்சியின் மூலம் பல்வேறு ஆதாரங்களுடன் விளக்கினார் டார்வின். இதனால் மதவாதிகளுக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை. அனைவரும் கொதித்துக் கிடந்தனர்.

அதன் பின்னர் கி.பி. 1860-ஆம் ஆண்டு ஜூன் மாதம். இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வளாகம் மக்கள் வெள்ளத்தால் ததும்பி வழிகிறது. வெளி நாடுகளிலிருந்து வருந்திருந்த விஞ்ஞானிகள் எல்லாம் என்னதான் நடக்கப் போகிறது என்ற ஆர்வத்தில் ஒருவருடன் ஓருவர் கிசுகிசுத்தவாறு இருக்கின்றனர். உடன் அமர்ந்திருக்கும் பிரபு வர்க்கத்தினர்கள் நடைபெற இருக்கும் மாபெரும் விவாதப் போரைப் பற்றி ஆரவாரத்துடன் பேசிக் கொண்டிருகின்றனர். இதற்கிடையில் மக்கள் கூட்டத்தாலும் ஆக்ஸ்போர்டு வளாகம் அதிர்ந்து கொண்டிருந்தது.

ஆக்ஸ்போர்டின் கலகலப்பிற்கு காரணம் உண்டு, அதன் காரணம் என்ன தெரியுமா? டார்வின் வெளியிட்ட, வெறும் 230 பக்கங்கள் மட்டுமே கொண்ட, உலகைப் புரட்டிப் போட்ட, அந்தக் குட்டிப் புத்தகம் தான்.. உயிரினங்களின் தோற்றம்தான். இந்தக் குட்டி புத்தகம் ஏற்படுத்திய சூறாவளியில் விவிலியமும் பறந்தே போய்விட்டது. இறைவனின் மறைவாக்கு கேள்விக்குள்ளாக்கப்படுவதை கிறித்தவ பாதிரிகள் கடுமையாக எதிர்த்தார்கள். அவர்களால் பொறுக்க முடியவில்லை. கடவுள் உருவாகிய மனித இனம் எப்படி குரங்கு போன்ற இனத்திலிருந்து வந்திருக்க முடியும்.. இந்த மதவாதிகளின் கூச்சல், குழப்பம், சச்சரவைக் கண்டு, அவர்களை பொதுமேடையில் விவாதத்திற்குத் தயாரா என்று டார்வினின் ஆதரவாளர்களுக்கு சவால் விட்டனர்.

மதத்தின் பிடியிலிருந்து அறிவியலை மீட்கும் கடமையுணர்வுடன் ஆக்ஸ்போர்டு விவாதத்திற்கு வருகை தந்தனர் டார்வினின் ஆதரவாளர்களான ஹக்ஸ்லியும், ஹூக்கரும். அறிவின் அடக்கத்துடன் அமர்ந்திருந்த இவ்வறிஞர்களின் எதிரில் ஆக்ஸ்போர்டு மதத்துறையின் பிரபலமான மதகுரு பிஷப் வில்பர் போர்ஸ் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து வீற்றிருந்தார். அவரைச் சுற்றி வெண் தூண்களாய் ஆண்டவனடியார்கள் மூளையைச் சாணை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். விவாதம் தொடங்கியது.

‘புனித’க் கொள்கையால் உணர்வூட்டப்பட்ட மக்களின் கரவொலியின் நடுவில் பேச வந்தார் டார்வினின் சீடர் ஹக்ஸ்லி. வெறியூட்டப்பட்ட மத உணர்வுகளின் மத்தியில் உண்மையைப் பேசுவதற்கு ஒரு மனிதனுக்கு ஏராளமான துணிவு தேவை.. மதமெனும் இருட்டுக் குகைக்குள் இருக்கும் மக்களை அறிவியல் உண்மையெனும் ஒளியை நோக்கி ஈர்ப்பதற்காவே அனைத்து அவலங்களையும் சகித்துக்கொண்டார் ஹக்ஸ்லி. டார்வினின் ஆராய்ச்சியைப் பற்றி விரிவாக பேசினார். அங்கு வீற்றிருந்த மக்களில் ஒரு பகுதி மக்களையாவது உண்மையை ஒத்துக் கொள்ள வைக்க முடிந்ததே என்ற எண்ணத்தில் பேசினார் ஹக்ஸ்லி. பின்னர் பொது விவாதம் முடிந்தது.

ஆனால் டார்வின் எழுப்பிய அறிவியலின் புரட்சிப்புயல் ஓயவில்லை. குரங்குகளைக் கண்ட இடமெல்லாம் கல்லாலடித்து துரத்தினார்கள் மறை உணர்வு கொண்ட மக்கள்.. இங்கிலாந்தின் தேவாலயங்களில், கருப்பு உடை தரித்த விவிலிய பக்தர்கள் தங்களின் கால்களின் கீழ் டார்வினின் புத்தகத்தை மிதித்தவாறு இறைவனின் புனிதக் கொள்கையை சாத்தானாகிய டார்வினிடமிருந்து காப்பதாக உறுதி பூண்டார்கள். இதுதான் அன்றைய உலகில் நடந்த தகவல். ஆனால் இன்று மனித இனம் குரங்கின அமைப்பிலிருந்து தான் உருவானது என்றும், மனிதனுக்கும், டால்பினுக்குக்கும் கூட பொது முன்னோடிகள் உண்டு என்ற உண்மைகள் வெளிவந்து, அறிவியலின் தலை நிமிர்ந்த உண்மை கம்பீரமாக எழுந்து நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

உயிரிகளின் தோற்றத்தின் இரண்டாவது பதிப்பு 1860, ஜனவரி 7ம் நாள் வெளியானது. டார்வினின் வாழ்நாளில் , இந்த புத்தகத்தின் 6 பதிப்புகள வெளியாயின. முதல் அமெரிக்க பதிப்பும் 1860 களில்தான் வந்தது. இந்த புத்தகத்தின் மொழியாக்கங்களும் வெளிவந்தன. ஆனால் அதிலுள்ள விளக்கங்களைச் சொல்வதற்குள் அவர்களுக்கு விழிபிதுங்கிப் போயிற்று. இதில் முக்கியமாக, பரிணாமக் கொள்கையில் கூறப்படும், ” survival of the fittest ” என்னும் சொல்லாடல் முதல் பதிப்பில் பயன்படுத்தப்படவே இல்லை. இந்த உருவாக்கியவர் ஹெபெர்ட் ஸ்பென்சர் ( Herbert Spencer) என்ற தத்துவ ஆசான்தான்..

பொதுவாக நாம் பரிணாமத்தில் பேசும் ‘”தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும்”’ (“survival of the fittest” ) என்ற பதங்கள் அடங்கிய மந்திரச்சொல் டார்வினின் முதல் பதிப்பில் வரவேயில்லை. 5 ம் பதிப்பில்தான் வந்தது. மேலும், நாம் இப்போது பயன்படுத்தும் பரிணாமம் (Evolution ) என்ற சொல்லும் முதல் பதிப்பில் இல்லை. 6ம் பதிப்பில்தான் இணைக்கப்பட்டது. ஏனெனில் இந்த வார்த்தைகள் கொஞ்சம் முரண்பட்டவை என டார்வின் கருதியதால், இவற்றை அவர் முதல் பதிப்பில் பயன்படுத்தவில்லை.

இது தவிர டார்வினுக்கு ஏராளமான விசித்திர குணங்களும், பழக்க வழக்கங்களும் உண்டு. ஆனால் பொதுவாக பரிணாமம் பற்றி பேசும் மக்கள் இவற்றைக் கையில் எடுப்பதில்லை. டார்வின் பொதுவாகவே, விலங்குகள் மீதும் மற்ற உயிரிகள் மேலும் பச்சாதாபமும், பரிவும் ஏராளமாய் உள்ளவர். அவரின் இந்த குணம் மனித இனம் வரை கூட நீட்டிற்று. அவர் HMS பீகிள் என்ற கப்பலில் பயணிக்கும்போது, அவரின் மனம் அடிமைகளுக்கு நடக்கும் கொடுமையைப் பற்றி சிந்தித்தது. அவர் அந்த கப்பலை தென்னமெரிக்காவில் நிறுத்தினார். அங்கு நடைபெற்ற கொடுமைகளையும் கூட உயிர்களின் தோற்றம் புத்தகத்தில் அடிமை ஒழிப்பு பற்றிய தகவல்களையும் குறிப்பிடுகிறார்.

டார்வின் காட்டுக்குள் சென்று, அங்கு கிடைத்த பூச்சிகளைக் கொண்டுவந்தாராம். இரண்டு பூச்சிக்கு மேல் பிடிக்க முடியாததால், மூன்றாவது பூச்சியை வாயில் போட்டுக்கொண்டாராம். இது எப்படி இருக்கு? அது கசப்பாக இருந்ததாம்.

டார்வினின் கண்டுபிடிப்புகளைப் பற்றிய மற்ற நூல்கள் ‘மனிதனின் மரபுவழி’ மற்றும் ‘தாவரங்களின் இடம்பெயர்த்திறன்’ ஆகியனவாகும். மேலும் மண்ணின் வளத்திற்கும், பயிர் வளர்ப்புக்கும் முக்கிய காரணமாக விளங்குவது மண்ணில் வாழும் மண்புழுக்கள் என்பதையும் டார்வின் தெளிவுபடுத்தினார். 1882ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.அரசு மரியாதையோடு நியூட்டனுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். உலகைக் கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நான் நிர்பந்திக்கப்படுகிறேனோ அன்றைய தினமே நான் இறந்து போவேன்” எனச் பேசினார்.

தகவல்:. இரமேஷ், நேரு நினைவு கல்லுரி, புத்தனாம்பட்டி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!