தமிழகத்தில் 69 சத இடஒதுக்கீட்டை பாதுகாக்க அணி திரள்வோம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்…

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 69 சதம் (BC 50+ SC18+ ST 1) நீண்ட நெடுங்காலமாக அமல்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் உச்சநீதிமன்றம் பலமுறை தனது தீர்ப்பில் தமிழகத்தில் அமலாகும் 69 சத இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமானது என அங்கீகரித்திருக்கிறது. இந்திய நாடாளுமன்றம் தமிழகத்தில் அமலாகும் 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான சட்டத்தை தனது 76வது அரசியல் சட்ட திருத்தத்தின் மூலம் (1994) 9வது அட்டவணையில் இணைத்து உரிய பாதுகாப்பை வழங்கியுள்ளது. இருப்பினும் சில பிற்போக்கு சக்திகள் மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் இச்சட்டத்திற்கு எதிரான வழக்குகளை தாக்கல் செய்யும் நடைமுறையைக் காண முடிகிறது. இவ்வாறு கடைசியாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நிராகரிப்பதற்குப் பதிலாக விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு சட்டத்திற்கும் இதுவரை கடைபிடிக்கப்பட்டுள்ள நடைமுறைக்கும் முற்றிலும் விரோதமானதாகும். உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நிலைபாட்டால் தமிழகத்தில் அமலாக்கப்பட்டு வரும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.

இதர மாநிலங்களைப் போல் அல்லாமல் தமிழகத்தில் 1921ம் ஆண்டிலிருந்தே பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடியினருக்கு என தனித்தனி இடஒதுக்கீடு அமலாகி வந்துள்ளது. எனவே, தமிழகத்தில் இடஒதுக்கீடு அமலாக்கத்திற்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது.

எனவே, தமிழகத்தில் நிலவும் தனிச்சிறப்புமிக்க சூழ்நிலையைப் பாதுகாக்கும் வகையில், தற்போதைய 69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உறுதியுடனும், திறமைமிக்க முயற்சிகள் மூலமும் உடனடியாகத் தலையிட வேண்டும், மாநில அரசு திறமைமிக்க வழக்கறிஞர்களை நியமித்து இச்சட்டத்தை பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் உறுதியுடன் வாதாட வேண்டும். மத்திய அரசும் இச்சட்டத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் உறுதியுடன் வாதாடி தமது கடமையை நிறைவேற்றிட வேண்டும் என சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் அமலாகும் 69 சத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், மத்திய, மாநில அரசுகள் இச்சட்டத்தை பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் மேலே குறிப்பிட்டுள்ளவாறு தமது பங்களிப்பை உறுதியுடன் நிறைவேற்றவும் ஒன்றுபட்டு செயலாற்ற முன்வருமாறு தமிழகத்தில் உள்ள ஜனநாயக, முற்போக்கு சக்திகளும், சமூக நீதியில் அக்கறை உள்ள அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற முன்வருமாறு சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

-கே. பாலகிருஷ்ணன்,மாநில செயலாளர்

செய்தி :அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ் ( பூதக்கண்ணாடி மாத இதழ் )