இறையில்லங்களை நிர்வகிக்கும் முறையை கற்றுத்தந்த உத்மான்(ரலி)…ரமலான் சிந்தனை – 11..கீழை ஜஹாங்கீர் அரூஸி.

இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் மூன்றாம் கலீஃபாவான உத்மான்(ரலி) அவர்களின் ஆட்சியில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. மக்கா, மதீனா பள்ளிகளை சுற்றி சுவர் எழுப்பி பாதுகாப்பினை பலப்படுத்தியதும் இவர்களின் ஆட்சியில் தான்.

மதீனாவின் மஸ்ஜிதுன் நபவியை சுற்றி இருந்த யூதர்களுக்கு சொந்தமான தோட்டங்கள், காலி மனைகளை தமது சொந்த பணத்தில் கூடுதல் விலைக்கு வாங்கி பெருமானாரின் குடும்பத்தவர்களுக்கு இருப்பிடங்களாக்கி கொடுத்தார்கள் கலீஃபா உத்மான்(ரலி) அவர்கள்.

மஸ்ஜிதுன் நபவியை சுற்றி ஏராளமான நிலங்களை வைத்திருந்த யூதர்கள் காலப்போக்கில் தங்களின் ஒன்றிரண்டு இடங்களையும் மதீனத்து முஸ்லிம்களிடம் விற்று விட்டு வெளியேறினர்.

இன்று மதீனத்து பள்ளி மிகுந்த பாதுகாப்புக்குள் இருப்பதற்கு கலீஃபா உத்மான்(ரலி) அவர்களின் சமயோசிதமான நடவடிக்கை தான். இன்று நம்முடைய பகுதிகளில் உள்ள மஸ்ஜிதுகளை சுற்றியுள்ள கடைகள்,கார் ஷெட்டுகள்,வாடகை வீடுகள் போன்றவற்றை நாம் எப்படி பயன்படுத்த கொடுத்திருக்கோம்னு? யோசித்து பாருங்கள்.

அல்லாஹ்வின் இல்லங்களை எப்படி பாதுகாக்க வேண்டும்? பராமரிக்க வேண்டுமென்பதை கலீஃபா உத்மான்(ரலி) அவர்களின் வரலாற்றை படித்தால் உணர்ந்து கொள்ளமுடியும்.

இறையில்லங்களை பாதுகாப்பதில் காட்டிய அக்கறையைப் போலவே வான்மறை வசனங்களை ஒற்றை பிரதியாக்கிடும் விசயத்திலும் காண்பித்தார்கள்.

உத்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாத்திற்கு வெற்றிகள் குவிந்த வண்ணமிருந்தன. பல ஊர்களில் இஸ்லாமிய அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. கூட்டம் கூட்டமாக மக்கள் இஸ்லாத்தில் இணைந்து கொண்டிருந்தார்கள். முஸ்லிமல்லாத பல ஊர்கள் வெற்றி கொள்ளப்பட்டன.

திருக்குர்ஆனை நன்றாக மனனம் செய்திருந்த ஹாபிஸ்களும் அதை நன்றாக ஓதத் தெரிந்த காரிகளும் புதிய இஸ்லாமிய ஊர்களில் குடியேறினர். அங்குள்ள மக்கள் அந்த ஹாபிஸ்கள், காரிகளிடமிருந்து திருக்குர்அனை ஓதக் கற்றுக் கொண்டனர். மொழிகள் யாவும் உச்சரிப்பதிலும் பேச்சு வழக்கிலும் நகரத்துக்கு நகரம் மாறுபட்டன, வட்டாரத்துக்கு வட்டாரம் வித்தியாசமாக இருந்தன.

இவ்வாறு ஓதுவதினால் திருக்குர்ஆனின் கருத்துக்கோ பொருளுக்கோ எந்த மாறுதலும் ஏற்படாது. அன்று ஏற்படவுமில்லை. அதன் பிறகு இஸ்லாம் பரவத் தொடங்கிய போது அரபியல்லாத மக்கள் அரபு மக்களுடன் சேர்ந்து புது சமூக அமைப்பை உருவாக்கினர். அரபி மொழியையும் பேசத் தொடங்கினர். இதனால் அம்மொழியிலும் அதன் உச்சரிப்பு விதத்திலும் சிறிய,சிறிய மாறுதல்கள் உண்டாயின. ஒவ்வொருவரும் அவரவர் உச்சரிப்புக்கு ஏற்ப திருக்குர்ஆனை ஓதினர்.

பிரபல நபித்தோழர் ஹுதைபத்துல் யமான் (ரலி) அவர்கள் அன்று ஈராக்கில் தங்கியிருந்தார். அவர் மட்டுமல்ல அவரைப் போன்ற வேறு நபித்தோழர்களும் தங்கியிருந்தனர். அவ்வூர் மக்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமாக திருக்குர்ஆனை ஓதுவதை அவர் கவனித்தார். சிலர் தவறாக உச்சரித்து ஓதுவதையும் கவனித்தார்.

இப்படியே போனால் காலப் போக்கில் பிரச்னைகள் பல உருவாகக் கூடும் எனக் கருதினார். அரபி மொழியில் உள்ள உச்சரிப்பின் அழகும் இனிமையும் போய்விடும் என்று அவர் அஞ்சினார்.

ஆங்காங்கே உள்ள வட்டார வழக்கங்களின்படி திருக்குர்ஆன் ஓதுவது அனுமதிக்கப்படும் பட்சத்தில், திருக்குர்ஆனில் குளறுபடிகள் தோன்ற வாய்ப்பு உண்டு? என உணர்ந்து அமீரில் முஃமினீன் உத்மான் (ரலி) அவர்களிடம் தம் கருத்தைத் தெரிவித்தார்.

இதை அறிந்த உத்மான் (ரலி) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து உதவி கோரிய பிறகு, மற்ற நபித்தோழர்களிடமும் ஆலோசித்த பின்னர் சில முடிவுகளை எடுக்க ஆரம்பித்தார்கள்.

அதற்கு முன்பு பெருமானார்(ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆன் வசனங்களை மனனம் செய்தும் எழுதியும் வந்த நபித்தோழர்களில் ஹழ்ரத் ஜைத் பின் தாபித்(ரலி) மிக முக்கியமானவர்களாகும். இவர்களின் மூலமாகவும் இன்னபிற சகாபிகள் மூலமாகவும் பாதுகாக்கப்பட்ட இறைவசனங்கள் முஸ்ஹஃப் என்னும் ஒரு அமைப்புக்குள் கொண்டு வரப்பட்டன.

இதற்கான முன் முயற்சியினை முதல் கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்களின் காலத்திலும் பின்னர் உமர்(ரலி) அவர்களின் காலத்திலும் முன்னெடுக்கப்பட்டு மூன்றாம் கலீஃபா உத்மான்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் நிறைவு செய்யப்பட்டன.

இதன் வரலாற்றை இன்ஷா அல்லாஹ்…

ரமலான் சிந்தனை – 12ல் பார்க்கலாம்!
கீழை ஜஹாங்கீர் அரூஸி.