Home செய்திகள் அ.தி.மு.க.வில் 60 லட்சம் பேர் உறுப்பினர் கார்டை புதுப்பிக்கவில்லை…

அ.தி.மு.க.வில் 60 லட்சம் பேர் உறுப்பினர் கார்டை புதுப்பிக்கவில்லை…

by ஆசிரியர்

தி.மு.க.வில் இருந்து பிரிந்து அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது முதலில் அவரது ரசிகர்கள் தான் உறுப்பினர்களாக இருந்தனர்.

தி.மு.க.வினர் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு காரணமாக கட்சி சாராதவர்களின் ஆதரவும் எம்.ஜி.ஆருக்கு கணிசமாக கிடைத்தது. இதனால் 15 ஆண்டுகளுக்கு அவர் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார். எம்.ஜி.ஆர். மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க. தலைமை பொறுப்பை ஏற்ற ஜெயலலிதா உறுப்பினர்கள் எண்ணிக்கையை பல மடங்கு உயர்த்தினார். குறிப்பாக அவரது தன்னம்பிக்கையான அதிரடி நடவடிக்கைகள் அ.தி.மு.க.வுக்கு அதிக உறுப்பினர்களை சேர்த்து கொடுத்தது.

ஆண்களை விட பெண்களின் ஆதரவு ஜெயலலிதாவுக்கு அதிகமாக கிடைத்தது. இதன் காரணமாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு 1.5 கோடியாக உயர்ந்தது. தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சிக்கும் இல்லாத வகையில் 1.5 கோடி உறுப்பினர்களுடன் அ.தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக தனித்துவத்துடன் கம்பீரமாக செயல்பட்டு வந்தது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. எடப்பாடி அணி என்றும், ஓ.பி.எஸ். அணி என்றும் பிரிந்தது. இதற்கிடையே டி.டி.வி.தினகரனும் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இதனால் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பல்வேறு துண்டுகளாக சிதறி போனார்கள்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வினர் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினார்கள். மேலும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் தங்களது அட்டைகளை புதுப்பித்துக் கொள்ள விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அ.தி.மு.க.வினர் போட்டி போட்டு விண்ணப்பங்களை பெற்று சென்றனர். அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பல தடவை அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கடந்த மாதம் 30-ந்தேதியுடன் அ.தி.மு.க. உறுப்பினருக்கான விண்ணப்பங்களை கொடுப்பதற்கு அவகாசம் முடிந்தது.

அ.தி.மு.க.வினர் கொடுத்த உறுப்பினர் விண்ணப்பங்களை கணக்கிடும் பணி கடந்த 2 வாரங்களாக நடந்தது. முடிவில் சுமார் 90 லட்சம் பேர்தான் தங்களது உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க விண்ணப்பித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் 60 லட்சம் அ.தி.மு.க.வினர் உறுப்பினர்களாக மீண்டும் தங்களை சேர்த்துக் கொள்ளவில்லை. அவர்கள் அ.தி.மு.க.வில் இருந்து விலகி இருப்பதாக கருதப்படுகிறது. இது அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காதவர்கள் டி.டி.வி.தினகரன் பக்கம் சாய்ந்து இருக்காலம் என்று கூறப்படுகிறது. டி.டி.வி.தினகரன் சமீபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் கட்சியை தொடங்கினார்.

அந்த கட்சியில் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். அ.தி.மு.க.வில் இருந்து விலகி உள்ள சுமார் 60 லட்சம் பேரில் கணிசமானவர்கள் டி.டி.வி. தினகரன் பக்கம் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. அ.தி.மு.க.வுக்கு மூத்த தலைவர்களிடம் இடையே நிலவும் உள்கட்சி சண்டை மற்றும் தொடர் வருமான வரி சோதனை ஆகியவைதான் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை மந்தமானதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க.வை வழிநடத்த ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் பொறுப்பேற்றனர். அவர்களுக்கு உதவி செய்ய துணை ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

மேலும் அ.தி.மு.க. கட்சி விவகாரங்களை கவனிக்க 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அத்தகைய குழு எதுவும் நியமிக்கப்படவில்லை. அதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அ.தி.மு.க. உயர்நிலை குழு கூட்டம் நடந்தது. பாராளுமன்றம் கூட உள்ள நிலையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் உண்மையில் வேறு பல வி‌ஷயங்களும் விவாதிக்கப்பட்டதாக தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் வருமான வரித்துறை நடத்தும் சோதனைகள் பற்றி பேசப்பட்டது.

குறிப்பாக சத்துணவு கூடங்களுக்கு முட்டை விநியோகிக்கும் கிறிஸ்டி நிறுவனத்தில் நடந்த வருமான வரி சோதனை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை வீடு, அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனை பற்றி காரசாரமாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை துடைக்க வேண்டுமானால் கட்சி நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் பேசப்பட்டது. அப்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “ஏற்கனவே பேசப்பட்டபடி கட்சியை வழி நடத்த வழிகாட்டுக் குழுவை உடனே ஏற்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அதற்கு கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஒப்புதல் தெரிவித்தனர். எனவே அ.தி.மு.க.வை வழிநடத்தும் வழிகாட்டு குழு விரைவில் அமைக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

அ.தி.மு.க. கட்சி நிர்வாகங்களை மேற்கொள்ள இருக்கும் இந்த வழி காட்டு குழு மொத்தம் 11 உறுப்பினர்களை கொண்டதாக இருக்கும் அதில் 6 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக இருப்பார்கள். 5 பேர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருப்பார்கள். எனவே வழிகாட்டு குழுவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி இருப்பதாக தெரிகிறது.

இந்த வழிகாட்டு குழு மூலம் அ.தி.மு.க. கட்சியை புத்துணர்ச்சி பெற செய்வதற்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!