Home செய்திகள் தமிழ்நாட்டு அரசு பொதுநூலகத்துறையின் முதல் நூலக இயக்குநர் வே. தில்லைநாயகம் நினைவு நாள் இன்று (மார்ச் 11, 2013)

தமிழ்நாட்டு அரசு பொதுநூலகத்துறையின் முதல் நூலக இயக்குநர் வே. தில்லைநாயகம் நினைவு நாள் இன்று (மார்ச் 11, 2013)

by mohan

தேனி மாவட்டம் சின்னமனூரில் ஜூன் 10, 1925ல் தொடக்கப்பள்ளி ஆசிரியரான வீ. வேலுச்சாமி – அழகம்மை இணையர்களின் தலைமகனாகப் பிறந்தார். சின்னமனூரில் உள்ள கருங்கட்டான்குளம் நடுநிலைப் பள்ளியில் தன்னுடைய தொடக்கக் கல்வியைப் பெற்றார். உத்தமபாளையம் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் பள்ளி உயர்நிலைக் கல்வியைப் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டிருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இடைநிலை, இளங்கலைக் கல்வியைப் பெற்றார். தமிழறிஞர் ஆ. கார்மேகக் கோனார், ஆங்கிலப் பேராசிரியர் இரஞ்சிதம் ஆகியோர்தம் அன்பைப் பெற்ற மாணவராகத் திகழ்ந்தார்.சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று நூலக அறிவியல் பட்டயமும், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்று பொருளியலில் முதுவர் பட்டமும், மதுரை தியாகராசர் கல்லூரியில் கல்வி இளவர் பட்டமும் நிறைவு செய்தார். தில்லிப் பல்கலைக் கழகத்தில் பயின்று நூலகவியலில் முதுவர் பட்டமும் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பிரான்சு, ஜெர்மன் மொழிகளில் சான்றிதழ்களும் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்று சோதிடத்தில் சான்றிதழும் பெற்றார்.

மாணவப் பருவத்திலேயே (மே 20, 1936) நூலகத் தொடர்பு பெற்றவர். 1949 ஆம் ஆண்டில் அரசாங்கச் செலவில் நூலகப் பயிற்சி பெற்று பொதுக்கல்வித் துறை இயக்க முதல் நூலகர் (1949 ஜூலை 18,1949) ஆனார். டிசம்பர் 12, 1962 பிற்பகலில் கன்னிமாரா பொதுநூலகத்தில் நூலகரானார். 1972 ஜூலை 31,1972 பிற்பகலில் தமிழக அரசு பொதுநூலகத் துறையின் முதல் இயக்குநராக உயர்ந்து ஆகஸ்ட் 31,1982ல் ஓய்வு பெற்றார். விடுதலை பெற்ற இந்தியாவில் ஒரே துறையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் இயக்குநராக இருந்தவர் இவர் ஒருவரே ஆவார். தேசிய, மாநில பல்கலைக்கழக நூலக குழுக்கள் பலவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார்.நூலக இயக்கத்தின் பண்பும், பயனும் என்றும் இல்லாத அளவு உயர்ந்த வீச்சினைப் பெற்ற இவரது ஆட்சிக்காலம், தமிழக நூலக இயக்கத்தின் பொற்காலம் என்று நூல்சார்ந்த எல்லோரும் இவரைப் புகழ்ந்துள்ளார்கள். எனவேதான் இந்திய நூலகத்துறை முன்னோடி அரங்கநாதனின் ஏகலைவ மாணவரான இவரைத் தமிழக பொதுநூலக இயக்கத்தின் தந்தை எனப் புகழ்கின்றனர்.

ஏறத்தாழ 1000 எழுத்துரைகள் எழுதியவர். இதில் 101 ஆங்கில எழுத்துரைகள். இதில் சில இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளில் மொழிமாற்றம் பெற்றுள்ளன.வானொலி/ளி நிகழ்வுகளில் பெரும் பங்கு கொண்டுள்ளார். இதில் நூலக இயல் சிறப்பிடம் பெறுகிறது. இந்தியாவின் முன்னோடி முயற்சியாகத் தமிழில் 1951-1982 இல் இவர் பதிப்பித்த நூற்றொகைகள், குழந்தை நூற்றொகைகள், நூல்கள் அறிமுக விழா மலர்கள் முதலியன தமிழ் நூல்கள் வளம் காட்டுவன. இவர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகள், நூலக வளர்ச்சித் திட்டங்கள் ஆய்வேடுகளாகும்.

இந்திய நூலக இயக்கம் என்னும் இவரது நூல், இவர் 40 ஆண்டுகளாகச் சேகரித்த தகவல்கள் 400 பக்கங்களில் 4000 ஆண்டு வரலாற்றைக் கொண்டதாக இருக்கிறது. வேதியம் 1008 உட்பட இவர் எழுதிய 25 நூல்கள் இந்திய தர நிருணயத் தரவுகள் கொண்டவை. இவர் எழுதிய நூலக உணர்வு (1971), வள்ளல்கள் வரலாறு (1975), இந்திய நூலக இயக்கம் (1978) முதலியன தமிழ்நாடு அரசின் முதல் பரிசு பெற்றவை.”இந்திய நூலக இயக்கம்” நூலைப் பாராட்டி 1982 இல் உலகப் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது. “இந்திய அரசமைப்பு” தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பரிசினைப் பெற்றது.இவரது குறிப்பேடு என்னும் நூல்தான் தமிழில் முதன்முதலாக வெளிவந்த ஆண்டுநூல் (Year Book) ஆகும். வே. தில்லைநாயகம் மார்ச் 11,2013ல் தேனி மாவட்டம் கம்பம் நகரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!