
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மடவிளாகத்தில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இந்த பள்ளியில் 2020-21-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் இலவச மடிகணினிகள் 12-ம் வகுப்பு பயிலும் 103 மாணவ-மாணவிகளில், கணிதம் மற்றும் அறிவியல் பிரிவு மாணவ-மாணவிகள் 62 பேருக்கு மட்டும் மடிகணினிகள் வந்துள்ளது. இந்த மடிகணினிகளை பெற்றுசெல்ல பள்ளி நிர்வாகம் சார்பில் 62மாணவ-மாணவிகளுக்கு தகவல் தரப்பட்டுள்ளது.அதன்படி மடிகணினிகளை பெற்று செல்ல மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்துள்ளனர். இது குறித்து காமர்ஸ் பிரிவு பயிலும் மாணவ-மாணவிகளும் தங்களது நண்பர்கள் மூலம் தகவல் தெரிந்து தங்களது பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளி தலைமைஆசிரியரிடம் தங்களது பிள்ளைகளுக்கும் மடிகணினிகள் வழங்கிடவேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி பள்ளி வளாகத்திலேயே காத்திருந்தனர். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், சுயநிதி பிரிவு வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாகவே அரசின் இலவச மடிகணினிகள் வழங்கப்படுவதில்லை.தற்போதும் அதுபோல் சுயநிதி பிரிவு வகுப்பு மாணவர்கள் 41பேருக்கும மடிகணினிகள் வரவில்லை. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து காத்திருந்த பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் கலைந்து சென்றனர்.
இரா. யோகுதாஸ்,
மயிலாடுதுறை செய்தியாளர்.