Home செய்திகள் மயிலாடுதுறையில், மீண்டும் திறக்கப்பட்ட கருவாடு சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம்

மயிலாடுதுறையில், மீண்டும் திறக்கப்பட்ட கருவாடு சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம்

by mohan

மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காட்டில் மிகப்பெரிய கருவாடு சந்தை உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஆலந்துறையப்பர் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் இந்த கருவாடு சந்தை இயங்கி வருகிறது. 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த சந்தையில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.தமிழகத்திலேயே கருவாட்டுக்கு என தனியாக ஒரு சந்தை உள்ளதென்றால், அது மயிலாடுதுறை சித்தர்காடு கருவாடு சந்தை மட்டுமே. தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து கருவாடுகளை மொத்தமாக கொள்முதல் செய்வார்கள்.

எப்போதும் மக்கள் கூட்டத்துடன் காணப்படும் இந்த கருவாடு சந்தை கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் 2 மாதங்களுக்கு மேலாக மூடபட்டிருந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இருப்பதால் கருவாடு சந்தை நேற்று திறக்கபட்டது. சந்தை மீண்டும் திறக்கப்பட்டதை அறிந்த மயிலாடுதுறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் நேற்று கூட்டம் கூட்டமாக சந்தையில் குவிந்தனர். நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் சந்தையில் கொரோனாவை தடுப்பதற்கான எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சந்தைக்கு வந்த பெரும்பாலான மக்கள் சமூக இடைவெளியை மறந்து அங்கும், இங்கும் நடமாடினர். பலர் முக கவசம் அணியவில்லை. கடைகள் முன்பு கூட்டம் கூட்டமாக முண்டியடித்து நின்று கருவாடு வாங்கினர்.ஏற்கனவே சென்னையில் இருந்து திரும்பியவர்களால் மயிலாடுதுறையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் நகரின் மையப்பகுதியில் சமூக இடைவெளியின்றி குவிந்திருந்தது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!