Home செய்திகள் நீட்: 24 மணி நேரத்தில் மூன்றாவது தற்கொலை!

நீட்: 24 மணி நேரத்தில் மூன்றாவது தற்கொலை!

by ஆசிரியர்

நாடு முழுவதும் நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில், மதிப்பெண் குறைவாக பெற்றதால் திருப்பூரைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைசியா ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த மோனிஷா என்ற மாணவியையும் நீட்டுக்காக இழந்துள்ளது தமிழகம்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கூனிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன். மீன்பிடி தொழில் செய்துவரும் இவர் அமமுக ஒன்றிய மீனவரணிச் செயலாளராகவும் உள்ளார். இவரது மகள் மோனிஷா. கடந்த ஆண்டு பிளஸ் டூ முடித்த மோனிஷா, புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்வுக்காக கடந்த ஒரு வருடமாக தீவிரமாக படித்துள்ளார்.

ஆனால், நேற்று வெளியான தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இந்த நிலையில் இன்று (ஜூன் 6) காலை தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் மோனிஷா. அவரது உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.பின்னர், மோனிஷாவின் உடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, மோனிஷாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மோனிஷாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் தினகரன், “மரக்காணம் ஒன்றிய அமமுக மீனவரணிச் செயலாளர் மோகன் அவர்களின் மகள் மோனிஷா நீட் தேர்வு தோல்வியினால் உயிரை மாய்த்துக்கொண்டார் என்ற செய்தி கேட்டு துயரமடைந்தேன். மோனிஷாவை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைக்கும் நீட் என்னும் அநீதி மாணவச் செல்வங்களின் விலைமதிப்பில்லாத உயிரை தொடர்ந்து பலிவாங்கி வருவது வேதனையை தருகிறது. நீட் தேர்வு நடைமுறை என்ற இந்த சோக காலத்துக்கு நிச்சயம் முடிவு உண்டு. அதுவரை மாணவச் செல்வங்கள் மனத்துணிவோடு எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

நீட்டுக்காக அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா உள்ளிட்ட பல மாணவர்களை தமிழகம் பலிகொடுத்திருக்கும் நிலையில், ஒவ்வொரு வருடமும் நீட் தமிழக மாணவர்களை காவு வாங்கி வருவதாக குமுறுகிறார்கள் பெற்றோர்கள். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்கிற கோரிக்கை மீண்டுமொருமுறை தமிழகத்தில் பலமாக ஒலிக்கத் துவங்கியுள்ளது.

செய்தி தொகுப்பு,அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர், கீழை நியூஸ்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!