கீழக்கரை மீனவர் உட்பட தமிழக மீனவர் 6 பேர் துபாய் பகுதி கடலில் கைது..

இராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வளைகுடா, கீழ் திசை நாடுகளில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடி பகுதிகளைச் சேர்ந்த 5 பேர், தூத்துக்குடி குலசேகரபட்டினத்தைச்சேர்ந்த ஒருவர் உள்பட ஆறு பேர்  துபாய் நாட்டில் நேற்று காலை (செப்.1) மீன்பிடிக்கச் சென்றனர், இவர்கள் எல்லைதாண்டியதாக கூறி ஈரான் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழக்கரை வட்டம் களிமண்குண்டு பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பூமி (26), கீழக்கரை மங்களேஸ்வரி நகர் முனியாண்டி மகன் பால்குமார்(35), திருப்புல்லாணி அருகே வைரவன்கோவில் பஞ்சவர்ணம் மகன் சதீஷ்(23), கல்காடு கிராமம் தங்கராஜ் மகன் துரைமுருகன்(26), செல்லையா மகன் அலெக்ஸ்பாண்டியண் (21), தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தைச் சேர்ந்த ப.மில்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விரைந்து மீட்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு மீன் பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) மாவட்ட செயலாளர் எம்.கருணாமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.