ஜூலை 1: தேசிய மருத்துவர்கள் தினம் … (National Doctors’ Day)..

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் தேதியை தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடகின்றனர். 1991 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.  சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors’ Day) ஆகும். இந்த நினைவு நாள் கொண்டாடப்படும் தேதி காரணங்களைப் பொறுத்து நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. சில நாடுகள் இதை விடுமுறை தினமாகவும் அறிவிக்கிறது. பெரும்பாலும் மருத்துவ நிறுவனங்களே இத்தினத்தைக் கொண்டாடுகின்றன.

வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும் மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சருமான மருத்துவர் பிதான் சந்திர ராய் நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 1882 சூலை திங்கள் முதல் தேதி பிறந்த அவர், சரியாக 80 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் மறைந்தார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 4, பிப்ரவரி 1961 ஆம் ஆண்டு பெற்றார். இவரின் நினைவாகவும், மருத்துவர்களின் சேவையை பாராட்டவும் இந்நாளானது இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

நோயாளிகளிடம் அன்பு காட்டுங்கள்..

ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் கனகசபை கூறியதாவது:  மருத்துவ பணியை டாக்டர்கள் சேவையாக செய்வதில்லை. அவர்கள் வருமானத்தில் மட்டுமே குறியாக உள்ளனர். அதனால், ஏழை நோயாளிகளை சரியாக கண்டு கொள்வதில்லை என்ற எண்ணம் மக்களிடம் பரவலாக இருந்து வருகிறது. மருத்துவ பணி என்பது புனிதமானது. நோயாளிகளை மருந்து,  மாத்திரைகள் மூலமாக மட்டும் குணப்படுத்திவிட முடியாது. நோயாளிகளிடம் அன்பு, பாசத்தையும் காட்ட வேண்டும். இதன் மூலமே நோயாளிகளிடம் உள்ள பாதி நோய் குணமாகிவிடும். நோயாளிகளின் தேவை அறிந்து பணியாற்ற வேண்டும். நோயாளிகளின் மனம் புண்படும் விதத்தில் டாக்டர்கள் நடந்து கொள்ளக் கூடாது. இவ்வாறு டீன் கனகசபை தெரிவித்தார்.

டாக்டர்கள் எண்ணிக்கை போதாது.

இந்தியாவில் டாக்டர்கள் எண்ணிக்கை போதாது என்று மருத்துவ துறையினர் கூறுகின்றனர். மருத்துவத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில் தற்போது சுமார் 10 ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் என்ற விகிதமே உள்ளது. நாட்டில் பல கிராமங்கள் மற்றும் மலைப்பிரதேசங்களில் ஆரம்ப சுகாதார வசதிகள் கூட இல்லை. இதனால், அங்குள்ள மக்கள் அவசர சிகிச்சை பெற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

மருத்துவம் படிக்கும் மாணவர்கள், கிராமங்களில் பணி செய்ய முன்வர வேண்டும். அமெரிக்கா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் டாக்டர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.