Home செய்திகள் விழுப்புரம் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட கோரிக்கை…

விழுப்புரம் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்பட கோரிக்கை…

by ஆசிரியர்
விழுப்புரம் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், மீன் விற்பனைச் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தவும், மரக்காணம் அருகே மீன்பிடித் துறைமுகத்தை அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் தொடங்கி கோட்டக்குப்பம் வரை 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் மீன்பிடித் தொழிலை நம்பி, மீனவர்கள் உள்ளிட்ட 20 ஆயிரம் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான விசைப்படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 500-க்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் மீன் பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
நெடுந்தொலைவு கடற்கரையைக் கொண்டுள்ள போதிலும், இப்பகுதியில் மீன்பிடி விசைப் படகுகளை நிறுத்தி வைக்க வசதி இல்லை. மீன் விற்பனை செய்வதற்கான பெரிய அளவிலான சந்தைப் பகுதியும் இல்லை. இதனால், மீனவர்கள் விசைப்படகுகளை புதுவை, கடலூர் துறைமுகங்களில் நிறுத்தி வைத்து, மீன் பிடித் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே, விழுப்புரம் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி, மீன்பிடி துறைமுகத்தை அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட மீனவ பஞ்சாயத்தார்கள் கூறியதாவது, விழுப்புரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் மீன்பிடி துறைமுக வசதி இல்லாததால், மரக்காணம், எக்கியார்குப்பம், புத்துப்பட்டு, கோட்டக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் பைபர், கட்டுமரப் படகுகளை பாதுகாப்பின்றி நிறுத்தி வைத்து மீனவர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். அதேவேளையில், விசைப் படகுகளை நிறுத்த இடமின்றி, புதுவைப் பகுதிக்கு கொண்டு செல்கின்றனர். இதன் காரணமாக மீன்பிடிப்புக்கான டீசல் மானியச் சலுகை கேள்விக்குறியாகிறது. மேலும், அங்கு உள்ளூர் மீனவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், மீன் வியாபாரம் என்பது அங்குள்ள வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலையைப் பொருத்தே அமைகிறது.
அதேபோல 70 கி.மீ. தொலைவில் உள்ள கடலூர் துறைமுகத்துக்கு செல்வதும் கால விரயத்தையும், செலவினத்தையும் ஏற்படுத்துகிறது. வலை, படகுகளை சீரமைக்க வேண்டியிருந்தால், புதுவை, கடலூர் பகுதிகளிலிருந்து தனியாக பைபர் படகு மூலம் வலை, உபகரணங்களை ஊருக்கு எடுத்து வரவேண்டியுள்ளது.
மீன் விற்பனையில் ஈடுபடும் தொழிலாளர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் அதிகளவில் உள்ளனர். இவர்கள், புதுவை, கடலூர் துறைமுகங்களில் மீன்களை வாங்கி வந்து விற்க முடியும். அங்கும் அவர்களுக்கு நேரடியாக மீன்கள் வழங்கப்படமாட்டாது என்பதால், அங்குள்ள மார்க்கெட்களில் வாங்கி வந்து விற்க வேண்டியுள்ளது. மீன்களை எடுத்து வரவும் புதுவை தேங்காய்த்திட்டு வரை செல்ல வேண்டியுள்ளது.
இதனால், விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகள் வைத்திருந்தும், பிற மாநில, மாவட்டப் பகுதிகளுக்குச் சென்றே தொழில் செய்யும் நிலையே தொடர்கிறது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, மரக்காணம் பகுதியில் மீன்பிடி துறைமுகத்தை அமைக்க வேண்டும்.
குறிப்பாக, மரக்காணம் எல்லையான காஞ்சிபுரம் மாவட்டம், கடப்பாக்கம், ஆலப்பரை குப்பம் கடலோர கழிமுகப்பகுதி மீன்பிடி துறைமுகத்துக்கு ஏற்ற சூழலைக்கொண்டுள்ளது. இங்கு அரசு சார்பில் மீன்பிடித் துறைமுகம், நவீன மீன் அங்காடிகள் அமைத்தால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 மீனவ கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள் பெரிதும் பயன்பெறுவர்.
மேலும், விசைப்படகுகள், பைபர் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து மீன்பிடித் தொழிலுக்குச் செல்லவும் முடியும். தவிர, மீன் விற்பனைக்கான பெரிய சந்தைப் பகுதி அமைவதால், மீன்பிடி, விற்பனைத் தொழில் சார்ந்த ஏராளமான மக்கள் பயன்பெறுவர். உள்ளூர் வியாபாரிகளும் விற்பனையில் ஈடுபடுவதால், பொது மக்களுக்கும் குறைந்த விலையில் மீன்கள் கிடைக்கும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மே 10-இல் விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்ட மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் மீனவ சங்கத்தினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் உள்ள மீன் வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தையும் மரக்காணம்-கோட்டக்குப்பம் மீனவ பகுதிக்குள் அமைக்க வேண்டும். கடலரிப்பால் பாதிக்கப்பட்டு வரும் சின்னமுதலியார்சாவடி, பொம்மையார்பாளையம், பிள்ளைச்சாவடி பகுதியில் தூண்டில் வளைவு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். மீன் பிடி தடைக் காலத்தில், மீனவ குடும்பத்தினருக்கான நிவாரணத்தை ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து, மீன்வளத் துறை அதிகாரிகளை கேட்டபோது, மீனவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகள் குறித்து அரசு தரப்பில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!