‘கீழை’ அமைதி வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான திறனறிவு போட்டிகள் 12 & 13 தேதிகளில் மக்தூமியா பள்ளியில் நடைபெறுகிறது

கீழக்கரை நகரில் ‘ஈருலக வெற்றியை நோக்கி..’ என்கிற பெயரில் ‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகளுக்கான அறிவிப்பு கடந்த மாதம் செய்யப்பட்டு இருந்தது. பேச்சுப் போட்டி, குர்ஆன் மனனப் போட்டி, மதரஸா மாணவர்களுக்கான மாதிரி தயாரிப்பு போட்டி, இஸ்லாமிய வினாடி வினா போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்காக கீழக்கரை நகரில் இருந்து முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவர்கள் ஆர்வமுடன் தங்களை பதிவு செய்துள்ளனர்.

போட்டிகளில் பங்கேற்க இருக்கும் மொத்த போட்டியாளர்கள் 933 ஆவர். இதில் ஆண் போட்டியாளர்கள் 248 மற்றும் பெண் போட்டியாளர்கள் 685 பதிவு செய்துள்ளனர். இந்த போட்டிகளில் வெல்லும் மாணவர்களுக்கு இலட்சம் ரூபாய்க்கும் மேல் பரிசுத் தொகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இதற்கான போட்டிகள் நாளை 12ஆம் தேதி மற்றும் 13 ஆம் தேதிகளில் மக்தூமியா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையத்தின் நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர்.

போட்டிகளில் கலந்து கொள்ளும் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்க வெளி மாவட்டங்களில் இருந்து 12 ஆலீம் பெருந்தகைகளும், ஆசிரிய பெருமக்களும் தயார் நிலையில் உள்ளனர். மேலும் போட்டிக்கான முடிவுகள் எதிர்வரும் நோன்பு பெருநாளையடுத்து கீழை  அமைதி வழிக்காட்டி மையத்தால் நடத்தப்பட இருக்கும் மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கீழை நியூஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.