Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஏப்ரல் 25 – இன்று உலக மலேரியா தினம்!..

ஏப்ரல் 25 – இன்று உலக மலேரியா தினம்!..

by ஆசிரியர்
ஏப்ரல் மாதம் 25-ந் தேதி (இன்று), உலக மலேரியா தின நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.  உலக சுகாதார மையம் சில ஆண்டுகளுக்கு முன்னர் இதனை அறிவித்தது. கொசு மூலம் பரவும் நோய்களில் மலேரியா முதன்மையான நோய் ஆகும். குறிப்பாக இந்த நோய் தாக்கம் மக்களிடம் தடுக்க தமிழகத்தில் பல நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மலேரியா என்பது நோய் பரப்பி அல்லது நோய்க்காவி வாயிலாக பரவும் தொற்றுப்பண்புடைய ஒரு தொற்றுநோயாகும். மலேரியா என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இது கொசுவினால் ஒருவர் உடலிலிருந்து மற்றவர்களுக்கு கடத்தப்படுகிறது. இது முதற்கலவுரு ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படுகிறது. அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளையும் சேர்த்து வெப்ப வலயம் சார்ந்த மற்றும் மிதவெப்ப மண்டல பிரதேசங்களிலும் இது பரவலாகக் காணப்படுகிறது
மலேரியாவின் அறிகுறி – குளிர் காய்ச்சல், வியர்வையுடன் தலைவலி. உடல் நடுக்கம் அதைத்தொடர்ந்து வியர்த்தல் இவை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடருதலும் அறிகுறிகளாகும். பரிசோதனையில் மலேரியா எனக் கண்டறிந்தபின் உரிய சிகிச்சையை தொடங்கி விட, குணப்படுத்திவிடலாம்.
 
பாதுகாப்பாக இருக்க சில வழிகள் :
நீர்த்தேக்கத்தால் கொசு பெருகிட, அதனால் மலேரியா நோய் வேகமாகப் பரவுகிறது. சுத்தமும் சுகாதாரமும் மட்டுமே இதற்கு முக்கியத் தீர்வு. கொசு அதிகம் உள்ள பகுதியிலிருந்து வீட்டை மாற்ற முடிந்தால் நல்லது. கொசுவர்த்தி சில குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். கொசு வலை பயன்படுத்துவது நலம். கை, கால்கள் முழுவதும் மறையும்படி உடைகள் அணிவிக்கலாம். குடிக்க அல்லது குளிக்க தண்ணீர் சேமித்து வைத்தால், அதை மூடி வைத்திருக்க வேண்டும். வீட்டை மற்றும் சமையல் அறையை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நல்ல சத்துணவாகச் சாப்பிட வேண்டும். தண்ணீர் தேவைப்படும் அளவு பருக வேண்டும். வீட்டிலோ அல்லது வீட்டை சுற்றியுள்ள இடங்களிலோ தண்ணீரை தேங்கவிட கூடாது. வீட்டில் உள்ள கிணற்றில் கம்பூசியா என்னும் மீன்களை கிணறுகளில் வளர்ப்பதன் மூலம் கொசு உற்பத்தியாவதை தடுக்க முடியும்.
சிகிச்சை
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பொதுமருத்துவமனைகள், மலேரியாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மலேரியாவைப் பற்றிய விழிப்புணர்வை அரசாங்கமும் திறம்பட செய்து வருகின்றது. தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஒரு முறை மலேரியா வந்துவிட்டால் அந்நோயாளிகள் ஒரு வருடத்துக்கு நிச்சயம் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும். வேளை தவறாது உரிய மருந்துகளை உட்கொள்ளுதல் அவசியமாகும்.
காய்ச்சல் இருந்தால் உடனடியாக ரத்தப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மலேரியா நோய் கண்டறிந்தால் தவறாது உரிய முறையில் மலேரியா மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.
 
உலக சுகாதார அமைப்பின் அறிக்கைபடி மலேரியாவால் ஒவ்வொரு 60 வினாடிக்கும் 1 குழந்தை உலகில் இறப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2013-ல் 19 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானோர் மலேரியாவால் பாதிக்கப்பட்டார்கள். இதனால், கிட்டத்தட்ட 5,84,000 பேர் இறந்துபோனார்கள். இதில் 80 சதவீதம் பேர் ஐந்து வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் என்கிறது அந்த கணிப்பு.
உலகில் 97 நாடுகளில் மலேரியா நோய் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் உலகளாவிய முயற்சியாக இந்நோயை கட்டுப்படுத்த பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.  உலகம் முழுவதும் சுமார் நூறு நாடுகளில் மலேரியா அதிகம் பரவும் ஆபத்து இருக்கிறது. 2030 -ம் ஆண்டிற்குள் இந்தியாவில் மலேரியா தொற்று நோயை அறவே ஒழிக்கவும் மலேரியா இறப்பு விகிதத்தைத் தடுக்கவும் தீவிர செயல் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மலேரியாவை முற்றிலும் ஒழிப்போம். ஆரோக்கிய இந்தியாவை உருவாக்குவோம்!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!