எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் – 5…

அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல்,  உலகமயம்,  மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர். அப்சலை தூக்கிலிடாதே (அருந்ததி ராயின்), தோழர்களுடன் ஒரு பயணம் ஆகியவை இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்தியா, மலத்தில் தோய்ந்த மானுடம் ஆகியவை இவரது இரு கட்டுரை தொகுதிகள். காஷ்மீர் குறித்து “தலித் முரசு” இதழில் வெளியான “புதைக்கப்டும் பள்ளத்தாக்கு”  என்ற இவரது கட்டுரை தமிழ் பத்திரிக்கை உலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

கடந்த வார தொடர்ச்சி….பாகம் –5

இந்தியாவின் பாலஸ்தீன் ஆதரவு நிலைப்பாடு குறித்து அந்த இயக்கங்களின் தலைவர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கிறார்கள்??

இந்தியாவில் பாஜக – காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அமெரிக்க அடிமை சாசனத்தை இந்திய அரசியல் சாசனமாக மாற்ற வித்தியாசங்கள் இன்றி ஒற்றுமையுடன் பாடுவடுவது நாம் அறிந்ததே. யாசர் அராபத்துடன் நம் தலைவர்கள் நின்ற புகைப்படங்கள் மங்கலாக மாறி இன்று அமெரிக்கா இஸ்ரேலுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நம் பிரதமர்களின் புகைப்படங்கள் தான் பிரகாசிக்கிறது. இஸ்ரேலின் ஆயுதங்களில் பெரும் பகுதியை வாங்கிக்குவிக்கும் நாடு தான் இந்தியா. இந்தியா ஆயுதங்களை மட்டும் வாங்கிக் குவிக்க வில்லை மாறாக அமெரிக்கா இஸ்ரேலுடன் பல கூட்டு ராணுவ பயிற்சி ஒப்பந்தங்களையும் கையெழுத்திட்டுள்ளது. நாங்கள் காசாவுக்குள் நுழைந்த அதே நேரம் பாஜக தலைவர் நிதின் கட்கரி ஒரு குழுவுடன் இஸ்ரேலுக்குள் நுழைந்தார். சமீபமாக இந்திய இஸ்ரேல் வர்த்தகம் தொடர்புடைய ஒரு மாநாட்டுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக இருக்கும் இந்திய மக்களின் மந்தையான மனோபாவத்தில் இவை எல்லாம் இங்கு ஒரு பொருட்டே இல்லை. காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை கூட அறியாத இந்த கூட்டம் பாலஸ்தீனம் – இலங்கை என எதர்க்கும் எழுந்திடாது.

ஹமாஸ் அமைப்பின் கட்டமைப்பு மற்றும் அதன் இதர சமூகப் பணிகள் அறப்பணிகள் குறித்துச் சொல்ல முடியுமா? உலகப் புகழ்பெற்ற கொரில்லா போர் முறைக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள் அதில் அவர்கள் வெற்றியடைந்ததாக நினைக்கிறீர்களா??

18.19. ஹமாஸ் அமைப்பு 1987ல் எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஒரு அங்கமாகவே தொடங்கப்பட்டது. இஸ்ரேலிடம் இருந்து பாலஸ்தீனத்தை மீட்டெடுப்பதற்கே ஹமாஸ் நிறுவப்பட்டுள்ளது என அதன் நிறுவனர் ஷேக் அஹமத் யாசின் அறிவித்தார். ஹமாஸின் மஜ்லிஸ் அல் ஷூரா தான் அரசியல் திட்டத்தை தீர்மானிக்கும் தலைமை குழு. அகதிகள் முகாம்களில் பள்ளிகள், மருத்துவமணைகள் நடத்துவது முதல் விளையாட்டு,  இலவச உணவு விடுதிகள், அனாதை இல்லங்கள்,மசூதிகள் என ஹமாஸ் தனக்கு கிடைக்கும் நிதி உதவிகளில் 90%த்தை இது போன்ற திட்டங்களுக்கு செலவிடுகிறது. பாலஸ்தீனத்தில் நான் பார்த்தவரை உலக ஊடகங்கள் கூறுவது போல் பெரும் ராணுவ பலம் பொருந்திய படைகள் எல்லாம் இல்லை மாறாக அங்கு இருப்பதோ ஒரு தற்காப்பு படை (Self Defence Force) மட்டுமே. இஸ்ரேல் இவர்களின் பகுதிகளுக்குள் வந்து தாக்கும் போது மட்டுமே இவர்கள் தங்களின் கொரில்லா தற்காப்பு நாடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

உங்கள் பயணத்தின் பிரதான விளைவு என்ன?? தொடர் நடவடிக்கை என்ன??

 எங்கள் பயணம் பல வழிகளில் தனித்திவம் வாய்ந்ததாக அமைந்தது. இதுவரை ஏராளமான பயனக்குழுக்கள் நிவாரணங்களை எடுத்து காசா சென்றுள்ளன. ஆனால் மாவிமாவர்மா தாக்குதலுக்கு பிறகு உலக ஊடகங்களின் முக்கிய செய்தியாக 20 நாட்கள் பரபரப்பாக இருந்தது இந்த ஆசிசா காரவாண் தான். வாகா எல்லையில் இந்திய-பாகிஸ்தான் அரசுகளை சமாளித்து சென்றது முதல் எகிப்து விபத்து வரை காசா பற்றியும் அங்கு எடுத்து செல்லப்படும் நிவாரனப் பொருட்கள் பற்றியும் செய்திகள் வந்து வன்ணம் இருந்த்து. இன்று இந்திய தேசத்திற்கு ஆசியாவில் இருக்கு மதிப்பு என்ன என்பதே இந்த பயணத்தில் தான் முழு பரினாமத்துடன் விளங்கிக் கொள்ள முடிந்தது. இந்த ஆசியா காரவானில் இந்தியர்களின் பங்களிப்பு என்பது மக்களாலும் அரசுகளாலும் பெரிதாக வரவேற்கப்பட்டது.

இரு நாடுகளின் அதிபர்கள் ஒரு பயணக்குழுவை நேரில் வந்து வாழ்த்தியது இதுவே முதல் முறை. 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர்கள் பாலஸ்தீனத்திற்கு வருவது அந்த மக்களின் பெரிதும் நம்பிக்கையில் ஆழ்த்தியது. ஆனால மறுமுணையில் இஸ்ரேல் எங்களை தினம் தினம் அதன் இணையதளங்களின் ஒரு தீவிரவாதிகளின் பயணக்குழு என்று வசைபாடியது. இது இஸ்ரேலுக்கு இந்திய பங்கேற்பு சார்ந்து ஏற்பத்திய ஒவ்வாமைதான் என்று ராணுவ, வெளியுறவு ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்தியர்கள் இந்த நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பது தான் இந்த பிரதேசத்தின் கோரிக்கையாக இருந்தது.

முதலில் இந்த பிரச்சனை ஆழமாக அறிந்து கொளவது அவசியம் என்பதால் கடந்த மூன்று மாதங்களாக தீவிர வாசிப்பில் ஈடுபட்டு வருகிறேன். வாசிப்பு அடுத்து அடுத்து பல ஆய்வாளர்களை நோக்கி ஒரு கன்னியாக நீண்டு செல்கிறது. இருப்பினும் வாசிப்பும் நடவடிக்கைகளையும் இணையாக நடக்கட்டும் என்ற மனநிலைக்கு வந்தேன். நாடு திரும்பியதில் இருந்து இந்த பயணத்தில் இணைந்த 7 பேர் தொடர் நடவடிக்கைகளுக்காக திட்டமிட்டு வருகிறோம். இஸ்ரேல் – பாலஸ்தீனம் அமைதி நடவடிக்கைகள், 1967 எல்லையுடன் இருநாடு பிரகடன், இரு நாட்டு மக்களின் மத்தியிலான உரையாடல்கள், காசா மீதான தடைகள் தளர்த்த வழியுறுத்தல் என பல திசைகளில் நடவடிக்கைகளின் ஆசிய அளவில் ஒருங்கினைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம். விரைவில் அமைப்பும் அதன் நவடிக்கைகள் பற்றிய அறிவிப்பை வெளியிட விருக்கிறோம்.

பயணம் இன்னும்  தொடரும்