மக்களை சீரழிவு பாதைக்கு அழைத்துச் செல்லும் “டாஸ்மாக்…”மக்களின் தரத்தை உயர்த்த வேண்டிய அரசாங்கம் நடுவீதிக்கு உழைக்கும் வர்க்கத்தை கொண்டு வந்த அவலம்…

மக்களின் நலன் மூத்த அக்கறை உள்ள ஒரு அரசாங்கத்தின் கடமையே மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அவர்களுக்கு நல்வாழ்வு வழங்குவதுதான். ஆனால் இந்தியாவில் அதுவும் முக்கியமாக தமிழகத்தில் மக்கள் நலன் என்பதே மறந்தவர்களாக, மக்கள் எந்நிலையில் இருக்கிறார்கள், எதை மக்கள் விரும்புகிறார்கள், எதை வெறுக்கிறார்கள் என்பதை மறந்து செயல்பாடும் அரசாங்கம் என்றால் அது தமிழக அரசாங்கமாகத்தான் இருக்க முடியும்.

இதற்கு முக்கிய உதாரணம் “டாஸ்மாக்” எனும் மக்களின் பணத்தையும், உயிரையும் சிறிது சிறிதாக உறிஞ்சும் வியாபாரம், அரசாங்கமே தலையேற்று நடத்தி வரும் உயிர்கொல்லி வியாபாரம். இந்த டாஸ்மாக் தொழிலை எதிர்த்து மக்களால் பல இடங்களில் பல விதங்களில் எதிர்த்து போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்ளும் பெண்களாலும், பொதுமக்களாலும் நடத்தப்பட்டாலும் தமிழக அரசாங்கம் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக மக்கள் நலன் மறந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

அதில் மிகவும் வேதனையான, கொடுமையான விசயம் நீதிமன்றம் மூலம் முதல்படியாக விபத்துக்களை தடுக்கும் வண்ணம் நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை அகற்ற சட்ட போராட்டம் மூலம் வெற்றி பெற்றால், அதை கூட  மக்கள் நலனுக்காக என்று எண்ணாமல் நெடுஞ்சாலையை, மாநிலத்திற்கு உட்பட்ட உட்சாலைகளாக மாற்ற முற்படும் மக்கள் நலனில் துளி கூட அக்கறை இல்லாத அரசாங்கம் என்றால், அது தமிழக அரசாங்கமாகத்தான் இருக்க முடியும்.

உதாரணமாக கீழக்கரையில் பல அரசியல் பிரிவுகள் சமூக நல அமைப்புகள் தனி நபர்கள் சட்டப் போராளிகள் என பல திசைகளில் இருந்து எதிர்ப்பு கனைகளை தொடுத்தாலும் வருமானம் என்பதே குறிக்கோளாக இருப்பது வேதனையான விசயம். இதன் விளைவு அன்றாட வருமானத்தை நம்பி இருக்கும ஏழை குடும்பங்கள் தெருவோரங்களிலேயே குடும்பத்துடன் விடியலிலேயே குடிக்கும் அவல நிலை உருவாகி வருகிறது. இந்த நிலை என்று மாறும்?? மக்கள் மன்ம் மாறும் பொழுதா அல்லது ஆட்சியளர்கள் மாறும் பொழுதா?? மக்கள் விரல் நுனி மைதான் பதில் சொல்ல வேண்டும்.