Home செய்திகள் இலங்கை குண்டுவெடிப்பில் பலியானோருக்கு சென்னையில் அஞ்சலி..!

இலங்கை குண்டுவெடிப்பில் பலியானோருக்கு சென்னையில் அஞ்சலி..!

by ஆசிரியர்

இலங்கை நடைபெற்ற குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு, சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 21ம் தேதி, 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களில், 321 பேர் உயிரிழந்தனர்; 500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், அதில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் நேற்று மாலை (23ம் தேதி) மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், இயேசு அழைக்கிறார் அமைப்பு சார்பில் ஸ்டெல்லா தினகரன் மற்றும் நிர்வாகிகள், பிரம்மாகுமாரிகள் அமைப்பு சார்பில் முத்துமணி மற்றும் நிர்வாகிகள், மூத்த பத்திரிகையாளர் பகவான்சிங், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கிழக்கு தாம்பரம் புனித மத்தேயு தேவாலயம் சார்பில் டி.விக்டர் ஜோசப், டி.ராஜ்குமார் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், “இலங்கையில் நடந்த சம்பவம் போன்று இனி எங்கும் நடக்கக்கூடாது. அதற்காக நாம் பிரார்த்திக்க வேண்டும். குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர்.

இதில் கலந்துகொண்ட கலிபோர்னியாவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த மோனா என்ற பெண் கூறுகையில், “என்னுடைய 11வது வயதில் அமெரிக்காவில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவத்தை பார்த்துள்ளேன். அந்த சம்பவம் இன்றும் என் மனதில் இருக்கிறது. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் கொடூரமானது. பலியானவர்களுக்கு என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!