ஆஷுரா நோன்பு.. நாம் பெற வேண்டிய படிப்பினைகள்…

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓராண்டுக்கு) பன்னிரண்டு ஆகும். இவ்வாறு அவன் வானங்களையும், பூமியையும் படைத்த அந்நாளில் விதித்தான். (9:36)

நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவில் குடியேறிய நிகழ்ச்சியை (ஹிஜ்ரத்தை) அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களின் வருடக் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. எனவே இதனை ஹிஜ்ரி என்று அழைக்கின்றனர். அல்லாஹ்வின் பேரருளால் நாம் ஹிஜ்ரி 1438ஐக் கடந்து 1439 ல் நுழைகின்றோம்.

ஹிஜ்ரி வருடக்கணக்கின் முதல் மாதம் முஹர்ரம் ஆகும். முஹர்ரம் என்பதற்குப் புனிதமானது – புனிதமிக்கது என்பது பொருள். இதன் புனிதத்திற்குச் சான்றாக பின்வரும் நபி மொழிகள் (ஹதீஸ்) அமைந்திருப்பதைக் காணலாம்.

நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்: ரமளானுக்குப் பின் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு ஷஹ்ருல்லாஹ் – அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். பர்ழான (கடமையான) தொழுகைக்குப் பின் மிக்க சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி). முஸ்லிம்,அஹ்மது

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷுரா (பத்தாம்) தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள், நீங்கள் நோன்பு நோற்கும் இந்நாளின் சிறப்பு என்ன? என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது ஒரு புனிதமான நாள். இன்று தான் மூஸா (அலை) அவர்களையும், அவரது சமூகத்தினரையும் (அவர்களது) விரோதிகளான ஃபிர்அவ்ன், அவனது கூட்டத்தினரிடமிருந்து காப்பாற்றி, அவனையும் அவனது கூட்டத்தினரையும் நீரில் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நாங்கள் நோன்பு வைக்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களின் விசயத்தில் உங்களை விட நானே அதிகம் உரிமையும், கடமையுணர்வும், தகுதியும் உடையவன் எனக் கூறி விட்டுத் தாமும் நோன்பு நோற்று, பிறரையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள். அறிவிப்பு: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

இந்த நபிமொழி மூலம் முஹர்ரம் ஆஷுரா (பத்தாம்) தினத்தன்று நோன்பு நோற்பது கட்டாயக் கடமை போலத் தெரியலாம். ஆனால் இது கட்டாயக் கடமையல்ல. காரணம் நபி (ஸல்) அர்கள் மதீனா வந்த ஆரம்பத்தில், ரமழானின் கட்டாய (பர்ளான) நோன்பு கடமையாக்கப்படாத போது – நிகந்த நிகழ்ச்சியாகும் இது. ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்பு இந்த ஆஷுரா நோன்பைக் கட்டாயம். நோற்க வேண்டுமென ரசூல் (ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை. இதனைக் கீழ்காணும் நபி மொழி தெளிவுபடுத்துவதைக் காணலாம்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது ஆஷுரா தினத்தின் நோன்பு நோற்கக் கட்டளையிட்டிருந்தார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டபின், விரும்பியவர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கட்டும். விரும்பியவர்கள் விட்டு விடலாம் எனக் கூறினார்கள். அறிவிப்பாளர்: முஅவியா(ரலி) மற்றும் ஆயிஷா (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம், முஸ்னத்-அஹ்மத்.

ஆஷுரா (பத்தாம்) தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர் என நபி (ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறிய போது, அடுத்த ஆண்டு நான் உயிரோடிருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். ஆனால் மறுவருடம் இந்த தினத்திற்கு முன்போ நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரங்கள் : முஸ்லிம்,அபூதாவூத், அஹ்மத்.

இந்த நபிமொழியின் மூலம் நாம் முஹர்ரம் மாதம் 9 மற்றும் 10ஆம் நாட்களில் நோன்பு நோற்பது நபி வழி (சுன்னத்) என்பதை அறியலாம். இவையன்றி வேறு ஏதும் விசேஷ வணக்கங்களிலிருப்பதாக நாம் குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ காண முடியவில்லை.

திருக்குர்ஆனின் ஆணைப்படி மனித சமுதாயத்தில் நோன்பு நோற்பதே நாம் ஹிஜ்ரி வருடத்தை வரவேற்கும் விதமாகும். முஹர்ரம் மாதத்தின் வணக்கங்களாகும். முஹர்ரம் ஆஷுரா (பத்தாம்) நாளன்று தான் நபி (ஸல்) அவர்களின் அருமைப் பேரர் ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலாவில் கொல்லப்பட்டார்கள் என்பது ஒரு சோகமான சரித்திர நிகழ்ச்சியாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களில் ஒரு சாரார் முஹர்ரம் முதல் பத்து நாட்களோ அல்லது (ஆஷுரா) பத்தாம் நாளோ ஹுஸைன் (ரலி) அவர்களின் மரணத்தை நினைவுபடுத்தி ஒப்பாரி வைப்பது, மாரடித்துக் கொள்வது, பஞ்சா எடுப்பது, தீ மிதிப்பது, ஊர்வலங்கள் நடத்துவது, மௌலூது ஓதுவது போன்ற அநாச்சாரங்களைச் செய்து வருகின்றனர். இது நபி (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ செய்யாத அநாச்சாரங்களாகும். இஸ்லாம் அங்கீகரிக்காததாகும். கன்னத்தில் அறைந்துகொண்டு, சட்டைகளைக் கிழித்துக் கொண்டு அறியாமைக் காலத்து (ஒப்பாரி)க்கூப்பாடு போடுபவன் என்னைச் சார்ந்தவனல்லன். அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி). ஆதாரங்கள் : புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்.

(நமது) சோகத்தைக் கண்களாலும், உள்ளத்தாலும் வெளிப்படுத்துவது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுவதாகும். அல்லாஹ்வின் அருளுக்குரியதாகும். கையாலும், நாவினாலும் வெளிப்படுத்துவது சைத்தானிடமிருந்து ஏற்படுவதாகும். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : முஸ்னத், அஹ்மது.

(துன்பம், துக்கம் ஏற்படும் போது) தலையை மழித்துக் கொள்பவனையும், ஒப்பாரி வைப்பவனையும், ஆடைகளைக் கிழித்துக் கொள்பவனையும் விட்டும் நான் விலகிக் கொண்டேன். அறிவிப்பாளர் : அபூமூஸா அல் அஷ்அரி (ரலி) ஆதாரங்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத் எனவே கர்பலா நிகழ்ச்சியை ஆதாரமாகக்கொண்டு ஹுஸைன் (ரலி) அவர்களின் மரணத்திற்காக ஒப்பாரி, மாரடித்தல், தீ மிதித்தல், பஞ்சா எடுத்தல், ஊர்வலம் நடத்தல், மௌலூது ஓததல் போன்ற செயல்கள் இஸ்லாத்திலில்லாத செயல்கள். மார்ககமறிந்தவர்கள் பாமர மக்களுக்கு இவற்றைத் தெளிவுபடுத்தி நேரிய இஸ்லாமிய வழியில் வாழத்தூண்ட வேண்டும்.