Home செய்திகள் கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை ரூ.2000 – தமிழக அரசு அறிவிப்பு…

கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை ரூ.2000 – தமிழக அரசு அறிவிப்பு…

by Askar

கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை ரூ.2000 – தமிழக அரசு அறிவிப்பு…

ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.2000 நிவாரண தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும் வகையில், கடந்த மார்ச்.24 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

இந்த ஊரடங்கின் காரணமாக பல்வேறு தரப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, தமிழக அரசால் பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் நிவாரண உதவித் தொகை உட்பட பொது விநியோகத் திட்டத்தின் மூலம், அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவற்றை இலவசமாக வழங்கப்படுகிறது.

இதன் மூலம் பொது மக்களும், பல்வேறு தொழிலாளர்களும் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 1,03,343 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி நெசவாளர்கள், தங்களுக்கும் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெறாமல் உள்ள நெசவாளர்களும் நெசவுப் பணியில் ஈடுபட்டு வருவதால், இவர்களின் கோரிக்கையினை ஏற்ற தமிழக அரசு, தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் நெசவாளர்களுக்கும் இதர அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்றே நிவாரணத் தொகை வழங்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெறாத நெசவாளர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் நெசவாளர்களின் பட்டியல், விலையில்லா 200 யூனிட் மின்சாரம் பெற்று பயன்பெறும் நெசவாளர்களின் பட்டியலுடன் ஒத்திசைவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உதவியைப் பெற்ற பட்டியலில் விடுபட்டுள்ள நெசவாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஊரடங்கு கால நிவாரணத் தொகையான ரூ.2,000/- வழங்க கைத்தறித் துறை இயக்குநர் அவர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் வழங்குவார். அதன்படி, தகுதியான நெசவாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு விண்ணப்பம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

செய்தித்தொகுப்பு அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!