சுரண்டை இலந்தை குளம் உடையும் அபாயம்;வருவாய்த் துறையினர் போலீசார் மணல் மூட்டைகளால் அடைத்து தடுத்தனர்..

தென்காசி மாவட்டத்தில் தொடர் கனமழையால் உடையும் நிலையில் இருந்த இலந்தை குளத்தை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் மணல் மூட்டைகளை அடுக்கி தடுத்தனர். தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சுரண்டை இலந்தை குளம் முழு கொள்ளளவை எட்டியது. தொடர்ந்து இரட்டை குளத்திலிருந்து மறுகால் பாய்ந்து செண்பகம் கால்வாயில் வரும் தண்ணீர் அனுமன் நதிக்கு திருப்பி விடப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து பெய்து வரும் மழைநீர் குளத்தில் தேங்கியது‌. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குளத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கரையை தாண்டி குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது‌. உடனடியாக வருவாய்த் துறை மற்றும் போலீசார் வீட்டில் இருந்தவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்தனர்‌. பின்னர் குளத்தை ஆய்வு செய்த போலீசாரும் வருவாய்த் துறையினரும் இலந்தை குளத்தின் கரைகள் வலுவிழந்து காணப்படுவதாகவும், உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிழக்கு மடையில் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிந்து வருவதாகவும் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுப்பணித்துறை, காவல்துறை, மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசாரும், வீகே புதூர் தாசில்தார் பட்டுமுத்து ஆலோசனையின் பேரில் ஆர்ஐ மாரியப்பன், நகர திமுக செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒத்துழைப்புடன் மணல் மூட்டைகள் அடுக்கி தற்காலிகமாக கரை பழுதடைந்து குளம் உடையாமல் தடுத்தனர். தென்காசி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் ஏற்கனவே சேர்ந்தமரம் பெரிய குளத்தில் உள்ள மதகுகள் உடைந்து தண்ணீர் வீணாக சென்றது. இந்நிலையில் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள் குறித்தும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் செய்து வருவது குறித்த அச்சமும் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இப்பகுதி விவசாயிகளுக்கு சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்