பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்;சுரண்டை அருகே பரபரப்பு..

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஆனைகுளம் கிராம பகுதியில் பஞ்சாயத்து துணைத் தலைவர் தேர்தலில் உறுப்பினர் ஒருவரை வாக்களிக்க தடுத்ததாக கூறி பஞ்சாயத்து அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கடையநல்லூர் ஒன்றியம் ஆனைகுளம் பஞ். தலைவராக, அருணாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடன் ராஜகுமாரி, யாசர் அராபத், செல்வமணி, கணேசன், வசந்தகுமாரி, இசக்கியம்மாள், மீனா, பெனாசீர் பானு ஆகிய ஒன்பது பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்நிலையில் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் 8வது வார்டு உறுப்பினர் மீனா மற்றும் 3வது வார்டு உறுப்பினர் செல்வமணி ஆகியோருக்கு இடையே பலத்த போட்டி நிலவியது. இந்நிலையில் தேர்தல் நேரமான 10.30 மணிக்கு மேல் ஆகியும் தேர்தல் நடந்த பஞ்சாயத்து அலுவலக வளாகத்திற்குள் 4-வது வார்டு உறுப்பினர் கணேசன் வரவில்லை என கூறப்படுகிறது.

எனவே செல்வமணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை அறிந்த ஒன்றாவது வார்டு பொதுமக்கள் அங்கு கூடத் தொடங்கினர். மீனாவுக்கு ஆதரவாக வாக்களிக்கவிருந்த கணேசனை சிலர் தாக்கி அங்கிருந்து அழைத்துச் சென்றதாகவும், எனவே, தேர்தலை ரத்து செய்து, மறு தேர்தல் நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டமும் நடத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புளியங்குடி டிஎஸ்பி கணேஷ் மற்றும் சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் பொதுமக்கள் திரளாக கூட கூடாது எனவும், உறுப்பினர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளித்தால் தாக்கியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஎஸ்பி அறிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் ஆனைகுளத்தில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்