Home செய்திகள் ஓட்டுக்களை வாங்கும் நோட்டுகள் இன்னும் அச்சடிக்கப்படவில்லை; இணைய வழி கருத்தரங்கில் கவிஞர் பேரா பேச்சு..

ஓட்டுக்களை வாங்கும் நோட்டுகள் இன்னும் அச்சடிக்கப்படவில்லை; இணைய வழி கருத்தரங்கில் கவிஞர் பேரா பேச்சு..

by mohan

தேனித் தமிழ்ச் சங்கமும், சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து நடத்திய இணைய வழியிலான கருத்தரங்கில் நெல்லை பொதிகை தமிழ்ச்சங்கம் சார்பில் பேசிய கவிஞர் பேரா “ஓட்டுக்களை வாங்கும் நோட்டுகள் இன்னும் அச்சடிக்கப்படவில்லை என பேசினார். நிகழ்ச்சிக்கு தேனித் தமிழ்ச் சங்கத் தலைவர் மு.சுப்பிரமணி தலைமை தாங்கினார். சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழக நிறுவனர் நெடுஞ்செழியன் வரவேற்புரை வழங்கினார்.நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தமிழ்ச் செம்மல் கவிஞர் பேரா “வாக்காளர் உரிமையும் கடமையும் “என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அதில் அவர் பேசியதாவது: “சுதந்திர இந்தியாவில் முதல் தேர்தல் 1951மற்றும் 1952-ஆம் ஆண்டுகளில் நடந்தது. மிகப் பெரிய அளவில் மக்கள் தொகையுடைய இந்தியாவில் எப்படி தேர்தல் நடக்கப் போகிறதோ என்று எல்லோரும் எதிர்பார்த்த அந்தக் காலகட்டத்தில் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் தேர்தலை நடத்தி உலகத்தையே ஆச்சரியப்பட வைத்த பெருமை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. தொடர்ந்து, ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை நடத்தி வருகிறது ஆணையம். ஒவ்வொரு தேர்தலிலும் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு பல சீர்திருத்தங்களையும் செய்து, தேர்தல் நடைமுறைகளை வலிமைப்படுத்தி வந்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

நூறு சதவீத பதிவுக்காக வாக்காளர்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வரும் தேர்தல் ஆணையத்தோடு நாமும் இணைந்து விழிப்புணர்வுக்காக பல நிகழ்ச்சிகளையும் நடத்தி வருவதும் நமது கடமையே.நெல்லை பொதிகைத் தமிழ் அறக்கட்டளை சார்பிலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்தே வாக்காளர் விழிப்புணர்வுக்காக பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18-வயது நிரம்பிய அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் வாக்குரிமையை தவறாமல் தேர்தலில் பயன்படுத்த வேண்டும் . அதுதான் நமது கடமை. விலை மதிப்பற்ற வாக்கின் வலிமையை தெரிந்து,வாக்களிக்க வேண்டும். இளம் வாக்காளர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.கொடுக்கும்போது வாங்கினால் என்ன என்ற மனப்பான்மையை விட்டொழித்து, பணமோ,பரிசுப் பொருளோ எதற்கும் ஆசைப்படாமல் கண்ணியத்தோடு ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும். வாக்கின் மதிப்பைக் காத்திட வேண்டும். ஓட்டுக்களை வாங்கும் நோட்டுகள் இன்னும் அச்சடிக்கப்படவில்லை இந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு சொல்லுவோம்.” இவ்வாறு கவிஞர் பேரா பேசினார். நிகழ்ச்சியின் நிறைவில், கலந்து கொண்டோர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விரிவாகவே கவிஞர் பேரா விளக்கமளித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!