கீழக்கரை அச்சம்.. ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையின் பொறுப்பற்ற நடவடிக்கையே காரணம் – எஸ்.டி.பி.ஐ. கடும் கண்டனம்

ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையின் பொறுப்பற்ற நடவடிக்கையே காரணம் என கீழக்கரை சமீபத்திய சம்பவத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கடும் கண்டனம். இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கடந்த 16.03.2020 அன்று துபாயில் இருந்து சென்னை திரும்பிய கீழக்கரையை சார்ந்த தொழிலதிபர் காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்த காரணத்தால் 02.04.2020 அன்று காலை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருக்குமோ என சந்தேகிக்கப்பட்டு இரத்த பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில், அதே நாள் மதியம் அவர் மரணமடைந்தார். மருத்துவமனையின் நிர்வாகம் சாதாரண மரண நிகழ்வாகவே அதனை தெரிவிக்க, உடலானது அவரது குடும்பத்தினரால் ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சொந்த ஊரான கீழக்கரையில் 03.04.2020 காலை சாதாரண சம்பிரதாயங்களுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 05.04.2020 இன்று காலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அதிகாரிகள் உட்பட பலர் மரணமடைந்தவரின் இரத்தப் பரிசோதனை ரிப்போர்ட் கொரோனா என உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி, அந்தப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டுவந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

மேலும் மரணித்தவரின் குடும்பத்தார், உறவினர் மற்றும் இறுதி சடங்கில் கலந்து கொண்டவர்கள் என பெரும்பாலானவர்களை சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தி சென்றுள்ளனர். ஸ்டான்லி நிர்வாகம், சுகாதாரத்துறையின் இந்த அலட்சியம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கைகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

கொரோனா தொற்று சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டு மரணித்த ஒருவரின் விசயத்தில் ஏன் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது.கொரனா தொற்று சந்தேகத்தில் மரணமடைந்த ஒருவரை எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அடக்கம் செய்ய ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் எப்படி அனுமதித்தது?

நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் இச்சூழலில் உள்நோக்கத்தோடு மருத்துவமனை நிர்வாகம் செயல்பட்டிருக்கிறதா? என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. அதிகாரிகளின் இந்த திடீர் அறிவிப்பு மற்றும் நடவடிக்கையால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் ஒட்டுமொத்த கீழக்கரை மக்களும் பெரும் மனவுளைச்சலுக்கும், அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கையால் நடந்த தவறுக்கு மக்களை வதைப்பது, சிரமத்துக்கு உள்ளாக்குவது என்னவகை நியாயம்?

இதுகுறித்து ஸ்டான்லி நிர்வாகத்தை நோக்கி நாங்கள் கேள்வி எழுப்பிய வேளையில், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், “நாங்கள் உரிய மருத்துவ வழிகாட்டுதலின் பேரிலேயே அடக்கம் செய்ய அனுமதித்தோம்” என்கிறார். சாதாரணமாக கடைகளுக்கு செல்பவர்களையே கேள்விகளால் துளைத்தெடுக்கும் காவல்துறையோ, சுகாதாரத்துறை நிர்வாகமோ ஏன் அவரின் அடக்க நிகழ்வில் இந்த நடைமுறைகளை பின்பற்றவில்லை. இதுபோன்ற காரியங்கள் சட்டரீதியாக வெளிப்படைத்தன்மையோடு நடந்திருந்தால் சட்டமன்ற உறுப்பினர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் எப்படி இறுதி சடங்கில் பங்கேற்றிருப்பார்கள்.

ஆரம்பம் முதலே எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காமல் அரசு நிர்வாகங்கள் செய்யவேண்டிய வேலைகளை செய்வதை விட்டுவிட்டு கொரோனா பாதிப்பு என்று வந்தவுடன் திடீரென ஊர் மக்களை சுய தனிமைப்படுத்துதல் மேற்கொள்ள அறிவுறுத்துவது என்பது தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக இருக்கிறது. ஒருபக்கம் நாங்கள் மிகுந்த கவனத்தோடு செயல்படுகிறோம் என தமிழகத்தையே உலுக்கி எடுக்கும் சுகாதாரத்துறை இந்த விசயத்தில் மேம்போக்காக செயல்பட காரணம் என்ன?

அரசின் இந்த மெத்தனப்போக்கால் கீழக்கரையில் பரவும் கொரோனா என ஊடகங்களுக்கு செய்தியை தரும் மோசமான சூழல் உருவாகியுள்ளது. எனவே, இதற்கு காரணமான சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் அலட்சியப் போக்கோடு பணி செய்த ஸ்டான்லி நிர்வாகம், கண்காணிக்கத் தவறிய சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். கீழக்கரை பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சத்தை போக்கி, அவர்களின் அன்றாட வாழ்வாதார நடவடிக்கை சீரடைய மாவட்ட நிர்வாகம் நியாயமாக செயல்படவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image