Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கொரானா தொற்றால் இறந்தவர் உடல் கீழக்கரையில் அடக்கம்.. 61 பேரை தனிமைப்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல் – ஆட்சியர் தகவல்..

கொரானா தொற்றால் இறந்தவர் உடல் கீழக்கரையில் அடக்கம்.. 61 பேரை தனிமைப்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல் – ஆட்சியர் தகவல்..

by ஆசிரியர்

கீழக்கரையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்  கொ.வீர ராகவ ராவ் பார்வையிட்டார்.

அவர் தெரிவித்ததாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்லி மாநாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 41 பேர்  பங்கேற்றுள்ளனர். அவர்களில் 25 பேர் மட்டும் நமது மாவட்டத்திற்கு திரும்பியுள்ளனர். அவர்கள்  அனைவருக்கும் கொரோனா பரிசோதனைக்காக மாதிரி அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஏப். 2ஆம் தேதி 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள 23  பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் வரப்பெற்றுள்ளன. அந்த  வகையில் மாவட்டத்தில் இதுவரை 34 பேருக்கு கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டுள்ளது. அதில் 32 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி  செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 4,777 பேர்  திரும்பியுள்ளனர். அவர்களில் 2,711 நபர்கள் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைந்து கொரோனா அறிகுறி ஏதும் இல்லாமல் நலமுடன் உள்ளனர். மீதமுள்ள 2,066 பேர் தற்போது  அவரவர் குடும்பத்தாருடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  அவர்களின் வீடுகளில் மாவட்ட நிர்வாகம் மூலம் ஸ்டிக்கர் ஒட்டி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  கீழக்கரை பகுதியைச் சேர்ந்த ஒருவர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்ததாக பொது  சுகாதாரத் துறை.m மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் உடல் கீழக்கரையில் அடக்கம்  செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  இறந்தவரின் குடும்பத்தார் 11 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.  அவரது இறுதிச் சடங்கில் 50 பேர் பங்கேற்றதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள்  அனைவரும் தாமாக அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இறந்தவரின் குடியிருப்பை சுற்றி உள்ள பகுதிகளில் நகராட்சி, தீயணைப்பு  துறை மூலம் கிருமி நாசினி தெளிப்பு மற்றும் சுற்றுப்புற சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இறந்தவரின் குடியிருப்பில் இருந்து 7 கி.மீ. சுற்றளவிற்குட்பட்ட அனைத்து  வீடுகளிலும் பொது சுகாதாரத் துறையினர் மூலம் ஒவ்வொரு வீடாக நேரடியாகச் சென்று பரிசோதனை  மற்றும் அறிகுறி கண்காணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தற்போதைய சூழ்நிலையில் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என  தெரிவித்தார்.

சுகாதாரத்துறை துணை இயக்குநர் அஜித் பிரபு குமார், தீயணைப்பு  நிலைய அலுவலர் கே.சம்பத்குமார், கீழக்கரை நகராட்சி பொறியாளர் மீரா அலி, வட்டாட்சியர் வீரராஜா உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!