Home செய்திகள் நெல்லை,தென்காசி சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை-தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை,தென்காசி சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை-தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரிப்பு

by mohan

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடுமுடியாறு அணைப் பகுதியில் 25 மி.மீ. மழை பதிவானது. நம்பியாறு அணையில் 24 மி.மீ., சேர்வலாறில் 22, பாபநாசத்தில் 20, அம்பாசமுத்திரத்தில் 19, சேரன் மகாதேவியில் 13, நாங்குநேரியில் 12.50, மணிமுத்தாறில் 18.60, திருநெல்வேலியில் 7, ராதாபுரத்தில் 5, பாளையங்கோட்டையில் 1.40 மி.மீ. மழை பதிவானது. தொடர் மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிரம்பின. நேற்று காலையில் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கான மொத்த நீர்வரத்து விநாடிக்கு 2,447 கனஅடியாக இருந்தது. 2,364 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142.60 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 155.51 அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து திறந்து விடப்படும் நீருடன், ஆற்றங்கரையோர பகுதிகளில் பெய்த மழை நீரும் சேர்ந்து தாமிரபரணியில் பெருக்கெடுத்து வந்தது.

இதனால் திருநெல்வேலியில் ஆற்றில் நீர் வரத்து அதிகமாக இருந்தது.மணிமுத்தாறு அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று அணைக்கு விநாடிக்கு 1,175 கனஅடி நீர் வந்தது. 200 கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டது. நீர்மட்டம் 109.30 அடியாக இருந்தது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 40.75 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 18.72 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 40 அடியாகவும் இருந்தது.

இதேபோல், தென்காசி மாவட்டத்திலும் மிதமான மழை பெய்தது. அதிகபட்சமாக ராமநதி அணையில் 28 மி.மீ. மழை பதிவானது. சங்கரன்கோவிலில் 26 மி.மீ., ஆய்க்குடியில் 24, கருப்பாநதி அணை, தென்காசியில் தலா 23.50, கடனாநதி அணையில் 20, செங்கோட்டையில் 15, சிவகிரியில் 13, குண்டாறு அணையில் 9 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணை, குண்டாறு அணை ஆகியவை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளன. இதனால், 2 அணைகளுக்கும் வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை, கருப்பாநதி அணை ஆகியவற்றில் நீர்மட்டம் குறைந்த நிலையில், நேற்று இந்த அணைகள் மீண்டும் நிரம்பின.அடவிநயினார் அணை நீர்மட்டம் 129 அடியாக இருந்தது.மேலும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் மாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலையில் வெள்ளப்பெருக்கு குறைந்ததைத் தொடர்ந்து குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!