
தமிழக முதல்வரின் நலத்திட்ட உதவிகளோடு உதயமானது தென்காசி புதிய மாவட்டம்.!
தென்காசி புதிய மாவட்டத்தையும் அதன் நிர்வாக பணிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய இரு வருவாய் கோட்டங்களுடன், தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, ஆலங்குளம், திருவேங்கடம், கடையநல்லூர், செங்கோட்டை, வி.கே.புதூர் ஆகிய 8 தாலுகாக்களுடன் இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த புதிய மாவட்டத்தின் துவக்க விழா காலை தென்காசியில் நடைபெற்றது.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
முதல்வர் பழனிசாமி, புதிய மாவட்டத்தையும், அதன் நிர்வாகப் பணிகளையும் துவக்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இதன் மூலம் தமிழகத்தின் 33வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் உதயமாகி உள்ளது.
விழாவில் அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி, தலைமைச் செயலாளர் சண்முகம், திருநெல்வேலி கலெக்டர் ஷில்பா, தென்காசி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், தென்காசி எஸ்,பி. சுகுணாசிங் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தமிழக முதல்வரால் தென்காசி தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் #Tenkasi ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்