
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது குழந்தைகள் மற்றும் மனைவியுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேல கருங்குளத்தை சேர்ந்தவர் அருள்தாஸ். பெயிண்டராக உள்ள இவர் தொழில் செய்வதற்காக கடந்த 4 வருடத்திற்கு முன்பு குறிச்சி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் காலி மனை பத்திரத்தை அடகு வைத்து 50 ஆயிரம் பணம் வாங்கியதாக தெரிகிறது. இது குறித்து அருள்தாஸ் கூறுகையில், 4 வருடமாக ரூ.2 இலட்சத்திற்கும் அதிகமாக வட்டி கட்டி வந்துள்ளேன். கடந்த 6 மாதமாக தொழில் சரியாக இல்லாத காரணத்தால் வட்டி கட்ட முடியவில்லை. வாங்கிய தொகை 50 ஆயிரமும், வட்டி ஒரு லட்சம் கட்ட வேண்டும் எனவும் கூறி கிருஷ்ணன் என்பவர் காலை வீட்டிற்கு வந்து கட்டையால் அடித்து துண்புறுத்தினார். மேலும் செல்போனையும் பறித்து சென்றார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு வேறு வழியின்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட வந்தேன்.எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், அருள்தாஸ் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.இதனைக்கண்ட பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல் துறையினர். விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஏற்கனவே கந்துவட்டி பிரச்சினை காரணமாக முன்பு ஒருவர் தனது குடும்பத்தினருடன் வந்து தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,தற்போது மற்றொருவர் தனது குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பைனான்ஸ், மைக்ரோ பைனான்ஸ்,சீட்டு, தனியார் குழு என பல பெயர்களில் இயங்குவதன் மூலம் கந்து வட்டிக்கு கொடுக்கப்படுவதாகவும், இதனால் ஏழை எளிய மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும்,பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.கந்து வட்டி முழுமையாக ஒழிக்கப்பட்டு இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்