ஷார்ஜா புத்தக கண்காட்சி… எழுத்தாளரின் பார்வையில் வாசகனாக…

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி வருடம்தோறும் புத்தகப் பிரியர்களுக்கு விருந்தாகவே அமைந்து வருகிறது.  உலக அளவில் பல்லாயிரக்கணக்கான பதிப்பாளர்கள் தங்கள் படைப்புகளை வாசகர்களுக்கு விருந்தாக படைக்கிறார்கள். அதே போல் பல பரிச்சயமான மற்றும் புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை அறிமுகப்படுத்தும் தளமாகவும் இருந்து வருகிறது.

கடந்த வருடம் தமிழுக்காக பிரத்யேக விற்பனை நிலையம்  தொடங்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து இந்த வருடம் பல புதிய தமிழ் பதிப்பாளர்களையும் சார்ஜா புத்தக கண்காட்சி கண்டது மிகவும் ஆரோக்கியமான விசயமாகும்.  அதே போல் கடந்த வருடம் அமீரக எழுத்தாளர் நசீமா ரசாக் எழுதிய “என்னைத் தேடி” புத்தகம் வெளியிட்டு அநேகர் பாராட்டு பெற்ற நிலையில் இந்த வருடம் “THE SEARCH” என்று ஆங்கிலத்தில் அனிதா படநாட்டில் என்பவரால் மொழிபெயர்ப்பு செய்து வெளியானது குறிப்பிடதக்கது.

இந்த புத்தக திருவிழாவின் தாக்கத்தை அமீரகத்தில் தமிழுக்காக பரிச்சயமான 89.4fm Maestro நிகழ்ச்சியின் வித்தகர் RJ NAGA, தனக்கே உரித்தான முறையில் அனுபவத்தையும், மக்களின் மனநிலையையும் அழகாக பதிந்துள்ளார், அக்கவி எழுத்துக்கள் தங்கள் பார்வைக்கு..

அமீரத்தில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சி நடப்பதும் அதை கடந்து போவதுமாக கடந்த ஐந்தாண்டு என் அமீரக வாழ்வில் சாதாரண நிகழ்வாக இருந்தாலும் இந்த ஆண்டு அது நிறைய அதிர்வுகளையும் கூடுதல் சந்தோச பகிர்வுகளையும் உண்டாக்கி இருக்கிறது.

தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் ஒரு வாசகனாகவே நான் இயங்கி வந்திருக்கிறேன். கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றை அசைப்போடுகிகிறேன்- கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடன் நேர்க்காணலில் உரையாடியது, எழுத்தளார். எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக வந்திருந்த போது நிகழ்வை தொகுத்து வழங்கியது, வானொலி நிலையம் அழைத்து மூன்று மணிநேரம் நேரலையாக பேட்டிக்கு ஏற்பாடு செய்து வழங்கியது,

இன்றைய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பு அதிதியாக வருகை தருகையில் நிகழ்ச்சியில் ஒருவனாக மேடையில் பங்கெடுத்துக் கொண்டது,

எழுத்தாளர் பெருமாள் முருகன் கண்காட்சிக்கு ஒரு விருந்தினராக வந்திருந்த போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கிடைத்த வாய்ப்பு இப்படியானதொரு பதிவுகளின் இந்த ஆண்டின் பட்டியலிடும் சேர்வது காலம் நம்மை சரியாக தான் இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதாக நினைக்கிறேன்.

இயக்கம் இல்லாமல் இயக்கம் இல்லை.

இந்த ஆண்டு மாபெரும் அரங்கத்தில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் நிகச்சியை தொகுத்து வழங்க கிடைத்த வாய்ப்பும்,

தொடர்ச்சியாக எங்கள் வானொலி நிலையத்திற்கு எழுத்தாளர்களையும், பாதிப்பாளர்களையும், ஆளுமைகளையும் அழைத்து வந்து அவர்களுடன் கலந்துரையாடி நிகழ்ச்சி வழங்கிய மகிழ்வும்,

அமீரக எழுத்தாளர்களுக்கு நினைவு பரிசுடன் பாராட்டுகளையும் தெரிவிக்க ஒருங்கிணைத்த ஆனந்த தருணமும்,

போதுமானதாக இருந்தது.

வாழ்தல் இனிது .

இந்த முறை –

பஞ்சு மிட்டாய்களையும், பாப்கான்களையும் புறந்தள்ளி புத்தகங்களை வாங்கிய கூட்டத்தை பார்க்க முடிந்தது.

அப்பாக்களை கட்டாயப்படுத்தி தன்னைப்போல புத்தகம் வாங்க வைத்த குழந்தைகளின் கூட்டத்தில் சுலபமாய் என்னால் தொலைய முடிந்தது.

பிள்ளைகளுக்காக விடுப்பு எடுத்துக் கொண்டு வந்ததோடில்லாமல் அரங்கத்திற்குள் புத்தக பைகளுடன் திரிந்த பெற்றோர்கள் பலர் எனக்கு நேயர்களாக இருந்ததை கண்டு வியக்க முடிந்தது.

காகிதத்தில் தான் என்ன வரைந்திருக்கிறோம் என்பதை மழலையில் என்னுடன் விளக்கி பேசிய ஒரு அரேபிய குழந்தையுடன் ஆனந்தமாக என்னால் சுயமி எடுத்துக் கொள்ள முடிந்தது.

எந்த புத்தகம் வாங்கலாம் என்பதில் ஒரு தம்பதிக்குள் உண்டான சண்டையை அனுமதியில்லாமல் உள் நுழைந்து சமாதானம் செய்ய முடிந்தது….

-இப்படியாக பல முடிந்ததுகளுடன் முடிந்தது ஷார்ஜா புத்தக கண்காட்சி.

தற்போது

மனிதர்களை வாசித்த திருப்தியில் அட்டைப்பெட்டிகளுக்குள் அடுக்கி வைக்கபட்டுக் கொண்டிருக்கின்றன புத்தகங்கள்.

புரட்டும் விரலின் வெதுவெதுப்பில் கண் விழிக்கலாம் மீண்டும் அவைகள்.

இனி அடுத்த ஆண்டு ஆடுகளத்திற்கு தயாராக வேண்டும்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image