போளூர் பகுதியை சேர்ந்த ராணுவ வீரரின் மனைவி மர்மமான முறையில் குஜராத்தில் இறந்தார்

திருவண்ணாமலை போளூர் தாலுகா கேசவபுரம் பகுதி மங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (65). தமிழக விவசாய சங்க தலைவர். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-எனக்கு 4 மகள்கள். இதில் 3-வது மகள் ரேணுகாவை (27) கடந்த 7.6.2012 அன்று கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரது மகன் நாகேந்திரன் (30) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தேன். நாகேந்திரன் குஜராத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். எனது மகளும் அவருடன் அங்கு தங்கி வசித்து வந்தார். இவர்களுக்கு யோகிஸ்ரீ(8), தான்யஸ்ரீ (2) என்ற 2 மகள்கள் உள்ளனர்.இந்த நிலையில் நாகேந்திரன் எனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். கடந்த 27-ந் தேதி எனது தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. அதில், “உங்களது மகள் ரேணுகா சிலிண்டர் வெடித்து தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளார்” என்றனர்.

நான் எனது குடும்பத்துடன் பதறியடித்துக் கொண்டு குஜராத் சென்றேன். அங்கு எனது மகள் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகவும், அதில் அவள் இறந்து விட்டதாகவும் கூறினர். பின்னர் நான் எனது மகளின் உடலை கிருஷ்ணாபுரத்துக்கு இன்று (அதாவது நேற்று) அதிகாலை கொண்டு வந்தேன்.இங்கு வந்தபோது எனது பேத்தி யோகிஸ்ரீ, எங்களிடம் அம்மா மீது அப்பா மண்எண்ணெய் ஊற்றி தீவைத்ததாக கூறினாள். இதைக்கேட்டதும் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். எனது மகளின் சாவில் மர்மம் உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அவர் கூறுகையில், “குஜராத்தில் எனது மகள் பிரேத பரிசோதனை அறிக்கையை காண்பித்ததால் நாங்கள் சந்தேகம் அடையவில்லை. இங்கு வந்த எனது பேத்தி கூறியதால் அதிர்ச்சி அடைந்துள்ளோம். எனவே எனது மகளின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதில் இந்த சாவுக்கு கணவர் நாகேந்திரன் காரணம் என்றால் அவரை கைது செய்ய வேண்டும்” என்றார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதாவிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image