Home செய்திகள் திருட வந்த கடையில் கொள்ளையன் செய்த குரங்கு வேலை..!

திருட வந்த கடையில் கொள்ளையன் செய்த குரங்கு வேலை..!

by mohan

உயிரை பணயம் வைத்து திருட வந்த என்னை ஏமாற்றலாமா..?’ என்று, மளிகை கடைக்காரருக்கு கொள்ளையன் ஒருவன் கடிதம் எழுதி வைத்து அதிர்ச்சி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த ருசிகர சம்பவம் குறித்த விவரம் வருமாறு; கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர், கடலூர் மெயின்ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.நேற்று (2ம் தேதி) காலையில் வந்து வழக்கம்போல் கடையை திறந்தபோது, பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, அரிசி, மைதா, கடலை மாவு மூட்டைகளை பிளேடால் கிழித்து வாரி இறைக்கப்பட்டிருந்தன. அதோடு, கடையின் மேற்கூரையில் இருந்த ஓடுகளும் பிரிக்கப்பட்டிருந்தன.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயராஜ், இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த மந்தாரக்குப்பம் போலீஸார், கடையை பார்வையிட்டனர். அப்போது, கடையில் உள்ள கல்லா பெட்டியில் ஒரு கடிதம் இருந்தது. அந்தக் கடிதத்தில், “உயிரை பணயம் வைத்து திருட வந்தால், காசு இல்லாமல் கல்லாவை துடைத்து வைத்து என்னை ஏமாற்றலாமா..? அதுக்குதான் இந்த குரங்கு வேலை” என எழுதப்பட்டிருந்தது.இதன் மூலம், கடந்த 1ம் தேதி இரவு ஜெயராஜ் கடையை பூட்டி விட்டு சென்ற பின்னர், நள்ளிரவில் ஓட்டை பிரித்து கடைக்குள் கொள்ளையன் இறங்கி இருப்பது தெரியவந்தது. வழக்கமாக ஜெயராஜ், கடையில் வசூலாகும் பணத்தை எடுத்து சென்றுவிடுவார் என்பதால், கல்லா பெட்டியில் பணம் இல்லை. இது, கொள்ளையனுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையன், கடை உரிமையாளருக்கு கடிதம் மூலம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளான். கடிதத்தில் குறிப்பிட்டதை போன்று குரங்கு வேலையாக, அங்கிருந்த அரிசி உள்ளிட்ட மூட்டைகளை பிளேடால் வெட்டி சென்று இருக்கிறான்.

இந்நிலையில், கடிதம் எழுதுவதற்கு பயன்படுத்திய மார்க்கர் அங்கே கிடந்தது. அதில் கொள்ளையனின் கைரேகை பதிவாகி இருக்கும் என்பதால், அதைக் கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.கொள்ளையடிக்க வந்த நபர், கல்லாவில் பணம் ஏதும் இல்லாததால் கடிதம் எழுதிவைத்து விட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!