மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி – கோவில்பட்டி விளையாட்டு மாணவர் விடுதி ஹாக்கி அணி சாம்பியன்..

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில் கோவில்பட்டி கிருஷ்ணநகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் கடந்த 2நாள்களாக நடைபெற்றது. இதில் மாவட்ட முழுவதிலும் இருந்து 13 ஹாக்கி அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றன. இதில் முதல் இடங்களை பெற்ற 4 அணிகள் அரையிறுதி போட்டியில் விளையாடின.
முதல் அரையிறுதி போட்டியில் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி அணியும், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகடாமி அணியும் மோதின. இதில் 6 – 2 என்ற புள்ளி கணக்கில் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.  இரண்டாவது அரையிறுதி போட்டியில் கோவில்பட்டி விளையாட்டு மாணவர் விடுதி அணியும், பாண்டியராஜன்ஹாக்கி கிளப் அணியும் மோதின. இதில் 8 -0 என்ற கோல்கணக்கில் கோவில்பட்டி விளையாட்டு மாணவர் விடுதி ஹாக்கி அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தேர்வு பெற்றது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற  இறுதி போட்டியில்  கோவில்பட்டி விளையாட்டு மாணவர் விடுதி அணி மற்றும் ஸ்.எஸ்.டி.எம். கல்லூரி அணி மோதின. போட்டியின் முடிவில் கோவில்பட்டி விளையாட்டு மாணவர் விடுதி அணி, 4 – 1 என்ற கோல்கணக்கில் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை தட்டிச்சென்றது. மேலும் மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில் விளையாடவும், அந்த அணி தகுதி பெற்றது.
இதன் பின்பு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி வீரர் ராமசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, முதல் 2 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.நிகழ்ச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ், கமிட்டி உறுப்பினர்கள் அமுதக்குமார், விஜயகுமார், ஹாக்கி பயிற்சியாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி